
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூசைகளும், கூழ் ஊற்றுவதும், பெண் பக்தர்களின் கூட்டங்களும் காணப்படும். ஆடி மாதம் தேவர்களுக்குப் பகல் பொழுது முடிந்த அந்திப் பொழுது என்பதால் எவ்வித நல்ல காரியங்களும் நாம் செய்வதில்லை. தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதத்தில் தெய்வ வழிபாடு மட்டுமே நடப்பதைப் போல அந்தி வேளையான ஆடி மாதத்திலும் தெய்வ வழிபாடு குறிப்பாக அம்மன் வழிபாடு மட்டுமே நடக்கின்றது.
மாங்கல்ய பலம் வேண்டி:
ஆடி ஆவணி மாதங்களில் சுமங்கலி விரதங்களாக கௌரி விரதம், வரலட்சுமி நோன்பு, கோகிலா விரதம், வராகி ஏகாதசி (குஷ்ய ஏகாதசி) ஜெய பாரதி விரதம் போன்ற விரதங்களை மேற்கொள்கின்றனர். வரலட்சுமி நோன்பு சென்னை சார்ந்த வட மாவட்டங்களில் பிரபலம்.
அவ்வை நோன்பு:
தெற்கே அவ்வை நோன்பு மிகவும் பிரசித்தி. அசந்தால் ஆடி, மறந்தால் மார்கழி, தப்பினால் தை என்பதால் இம்மூன்று மாதங்களிலும் ஔவை நோன்பு ஆடிச் செவ்வாய் இரவுகளில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு உப்பில்லாத அரிசி மாவு கொழுக்கட்டை செய்து சாப்பிடும் நோன்பாக நோற்கப்படும்.
வராகி நவராத்திரி:
வடக்கே வராகி நவராத்திரி, குப்த நவராத்திரி என்றும் காயத்ரி ராத்திரி என்றும் வழங்கப்படும். ஆடியில் வராகிக்கு செவ்வாடை உடுத்தி, சிவப்பு மலர்கள், சிவப்பு மணிமாலை அணிவித்து தசமஹா வித்யா என்ற 10 தேவிகளை வணங்கி நோன்பிருப்பது வராகி நவராத்திரி ஆகும். சாகம்பரி தேவிக்கு காய்கறிகள், கனிகள் படைக்க வேண்டும். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மற்றும் பறவைகளுக்கும் தினமும் உணவு வழங்க வேண்டும்.
குப்த நவராத்திரி:
ஒரு கணவன் தகாத பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கின்றான். அவன் பாவம் எனக்கும் வருமே என்று ரிஷியசிருங்கரிடம் ஒருத்தி கலங்கி அழுதபோது அவர் குப்த நவராத்திரி விரதம் இருந்தால் உன் கணவனின் பாவம் உன்னைச் சேராது என்றார். அதன்படி அவள் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் கணவனையும் பாவத்திலிருந்து மீட்டெடுத்தாள். கணவனைத் திருத்த நினைப்பவர்கள் குப்த நவராத்திரி / வராகி நவராத்திரி என்ற சுமங்கலி பூஜையை செய்து வரலாம்.
விரத அனுஷ்டானம்:
வராகி / குப்த விரத காலங்களில் முடி வெட்டவோ, நகம் வெட்டவோ, கோபப்படவோ, அசைவ உணவு மற்றும் போதைப் பொருள்கள் உண்ணவோ கூடாது. பகலில் உறங்கக்கூடாது. கருப்பு உடை உடுத்தக் கூடாது.
ஆடியில் இவ்விரதம் இருக்கும் ஆண்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள் இருபாலரையும் பில்லி சூனியம் அண்டாது. கண் திருஷ்டி தாக்காது.
ஆடிப் பௌர்ணமி கோகிலா விரதம்:
கோகிலா விரதத்தை ஆடிப் பௌர்ணமியில் தொடங்கி ஆவணி பௌர்ணமியில் நிறைவு செய்வர். இவ்விரதம் வைரவர், நரசிம்மர், மகிஷாசுரவர்த்தினி, வராக மூர்த்தி போன்ற துடியான தெய்வங்களை வணங்கி வரம்பெறும் விரதம் ஆகும்.
கௌரி விரதம்:
கௌரி விரதம் குஜராத்தில் மிகவும் பிரபலம். ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கி 5 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து ஆடிப் பௌர்ணமி அன்று நிறைவு செய்வர். இதுவும் ஓர் ஆடிப் பௌர்ணமி விரதம் ஆகும்.
ஜெயபாரதி விரதம்:
குஜராத்தில் ஆடிப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் ஐந்து நாட்கள் பின்பற்றப்படுவது ஜெயபாரதி விரதம் ஆகும். பெண்கள் ஆடி மாத வளர்பிறையில் திரயோதசி அன்று தொடங்கி பௌர்ணமிக்கு முன்னும் பின்னும் மும்மூன்று நாட்களாக ஆறு நாட்கள் விரதம் இருப்பர்.
யோகினி விரதம்:
ஆடி மாதத்தின் ஏகாதசி விரதம் யோகினி ஏகாதசி எனப்படும். ஆடிப் பௌர்ணமி முடிந்த பின்பு தேய்பிறை ஏகாதசி அன்று மேற்கொள்ளும் விரதத்தை யோகினி ஏகாதசி என்பர். இதனால் தோலில் அரிப்பு, தேமல், படை, சொரி, சிரங்கு, குஷ்டம் போன்றவை குணமாகும்.
இவ்வாறு நாடெங்கும் ஆடி மாதத்தில் பெண்கள் பல விரதங்களைத் தமது மாங்கல்ய பலத்துக்காகவும் கணவரின் உடல் நலத்துக்காகவும் மேற்கொள்கின்றனர்.