
ஆடியில காத்தடிச்சா
ஐப்பசியில் மழையடிக்கும்!
ஆறுகுளம் ஊத்தெடுக்கும்…
என்ற திரைப்படப் பாடல் ஆடிக்காற்று, ஐப்பசி மழைக்கு அச்சாரம் என்பதை உணர்த்தும். மாதம் மும்மாரி பெய்தால், மக்கள் மனதில் மகிழ்ச்சி தங்கும்.
ஆடி பிறந்து விட்டாலே அம்மன் கோயில்கள் களைகட்ட ஆரம்பித்துவிடும்! அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூழ் ஊற்றும் திருவிழா, வயிற்றையும், மனதையும் நிறைக்கும்.
கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து நீரோடு கொதிக்க வைத்துச் செய்யப்படும் உணவே கூழ் எனப்படுவது என விளக்கம் தரப்படுகிறது. எளிதாகச் செரிக்கும் சத்தான உணவே கூழ் என்று நாம் பொருள் கொள்ளலாம்.
கஞ்சி போன்று இருக்கும் இந்த ஆரோக்கிய உணவு, கம்பு, கேழ்வரகு, அரிசி, பழங்கள் ஆகியவற்றிலிருந்தும் தயாரிக்கப்பட்டு, அதனதன் பெயர்களுடன் கூழ் என்று அழைக்கப் படுகின்றன. கம்பங்கூழ், கேப்பங் கூழ் ஆகியவை பிரபலமானவை.
‘ஆடிக் கூழ் அமிர்தமாகும்’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அது மட்டுமல்ல. கூழ் குறித்த ஏராளமான பழமொழிகள் நாட்டில் உலவுவதிலிருந்தே கூழின் பெருமையை உணரலாம்.
கூழானாலும் குளித்துக்குடி,
கூழ் குடித்தவனுக்குக் குளிர் தெரியாது,
கூழ் குடித்தால் கூத்தாடலாம்;சோறு சாப்பிட்டால் தூங்கலாம், கூழ் குடித்தவன் கூடப்போவான்(எதற்கும் அஞ்சாமல் எவருடனும் சேர்ந்துகொள்வான் என்பது இதன் பொருளாம்),
கூழ் குடித்தவன் கூடப்போனால் போகின்றவனுக்கும் நல்லது (கூழ் குடிப்பவன் பலமும் உறுதியும் கொண்டவனாகையால் அவனை நம்பிப் போகலாம் என்பதே இதன் பொருள்)
என்பவை கூழ் குறித்த பழமொழிகள்!
நக்கலாகப் பேசவும் இந்தப் பழமொழிகள் தவறவில்லை!
குடிக்கிறது கூழாம்; கொப்பளிக்கிறது பன்னீராம்!
குடல் கூழுக்கு அழுகையிலே கொண்டை பூவுக்கு அழுததாம்!
வள்ளுவரும் கூழ் குறித்துப் பேசுகிறார்!
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ் (குறள் 64)
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு(குறள் 554)
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு!(குறள் 381)
எளிமையான உணவு , நாட்டின் வளம், குடிமக்கள் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக அவர் கூழைப் பயன்படுத்தியுள்ளார்.
கூழ் என்பது உடலுக்கு உறுதியையும், ஆரோக்கியத்தையும், எதிர்ப்பாற்றலையும் தரும் என்பது தெளிவாகிறது!
மழையையும் குளிரையும் தாங்கும் சக்தியை உடலில் பெருக்கிக்கொள்ளவே கூழ் ஊற்றும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மாதத்தின் சில நாட்களில் கூழைக் குடிப்பதன் மூலம் உடல் பலம், எதிர்ப்பாற்றல், மனவுறுதி அனைத்தும் பெருகும். எதிர்வரும் மழைக் காலத்தை நோய்நொடியின்றிக் கழிக்க இது உதவும்.
நமது முன்னோர்களின் அறிவுத் திறனை என்னென்பது!
“கொஞ்சம் இருங்க! யாரோ ஏதோ சொல்றாங்க.என்னன்னு கேட்போம்!”
“சொல்லுங்க…சரியாக் கேட்கல… கொஞ்சம் சத்தமா… என்ன கூழ் ஊற்ற ஆரம்பிச்சிட்டாங்களா? இதோ…இதோ வந்திட்டேன் பிரதர்!அப்படியே ஒரு எடத்தைப் போட்டு வையுங்க! என்னங்க…ஒங்களுக்கும் கூழா ? நிச்சயமாஉண்டு! வாங்க சீக்கிரம்!”