
ஆடி மாதம் பிறந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் கொண்டாட்டம்தான். அதுவும் பெண் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து அக்னி சட்டி ஏந்தி வேப்பிலை ஆடை உடுத்தி அம்மனை வழிபடுவார்கள். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனை ஆடி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசிப்பது மிகவும் சிறப்பு. தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் எங்கும், ‘அம்மா மாரியம்மா, இருக்கன்குடி தாயே’ என ஓங்கி ஒலிக்கும் அந்தப் பாசக் குரல்களைக் கேட்ட மாத்திரத்திலேயே பரவச உணர்வை ஏற்படுத்திவிடும்.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் சாணம் பொறுக்கிக் கொண்டு சாணிக் கூடைகளுடன் அங்கே ஆற்றில் நீராட வந்தார்கள் அப்பகுதியில் உள்ள கிராமத்துப் பெண்கள் கூடைகளை கரையோரமாக இறக்கி வைத்துவிட்டு நீராடி முடித்தவர்கள், கூடைகளை திரும்பவும் எடுத்துக்கொண்டு கிளம்பியபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
தரையிலிருந்து தனது கூடைகளை அசைக்கக்கூட முடியாமல் திணறியபோது அருள் வந்து ஆடத் தொடங்கி விட்டாள் அந்தப் பெண். ‘நான் மாரி வந்திருக்கிறேன். அந்த இடத்தில் நான் புதைந்து கிடக்கிறேன். என்னை வெளியே எடுத்து வைத்து கோயில் கட்டிக் கும்பிடுங்க. என்னைத் தேடி வர உங்களுக்கு எதுவும் இல்லைன்னு சொல்ல மாட்டேன்’ என அந்தக் கூடைக்காரப் பெண் மூலமாக அன்னை தெரிவிக்க, அப்படி எழுந்ததுதான் இந்த இருக்கன்குடி
ஸ்ரீ மாரியம்மன் கோயில்.
இந்தக் கோயிலுக்கு அருகே ஒன்றாகக் கலக்கும் இரு ஆறுகள் உள்ளன. ஒன்று அர்ஜுனா ஆறு, இன்னொன்று வைப்பாறு. பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்தபோது இந்தப் பகுதியின் மகாலிங்கம் மலையடிவாரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டபோது அர்ஜுனன் கங்கையை வணங்கி வருணக் கணை தொடுத்து பூமியைப் பிளக்க அங்கே உருவானதுதான் அர்ஜுனாஆறு.
ராமன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு தனது பரிவாரங்களுடன் வந்தபோது தண்ணீரையே காணாமல் மிகவும் சிரமப்பட்டாராம். காலைக்கடன் கூட முடிக்க முடியாமல் தனது பரிவாரத்தினர் புலம்புவதைக் கண்டு வருந்திய ராமர், புண்ணிய தீர்த்தங்கள் கலந்த நீர் குடம் ஒன்று அகத்திய மாமுனிவரால் அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து அம்பு எய்தி அந்தக் குடத்தை உடைக்க, அப்பொழுது தோன்றியதுதான் வைப்பாறு.
இராமாயணக் காவியம் உத்தர காண்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் இந்த வைப்பாறும் அர்ஜுனா ஆறும் ஒன்று கலக்கும் இடம்தான் இரு கங்கைகள் இணையும் இடம் என்பதால் இருக்கன்குடி என்று பெயர் பெற்றது. புண்ணிய தீர்த்தங்களான இந்த இரு ஆறுகளும் ஒன்றாக இங்கே சங்கமம் ஆவது இந்தத் தலத்தின் தனி சிறப்பாகும்.
திருமண பாக்கியத்திற்காக காத்திருப்போர் குடும்பப் பிரச்னைகளால் அவதிப்படுவோர், பிள்ளை வரம் வேண்டுவோர் என பக்தர்கள் அனைவரும் அக்னி சட்டி ஆயிரம் கண் பானை எடுத்து மாவிளக்கு ஏத்தி பொங்கல் படையல் வைப்பார்கள். ஆடி கடைசி வெள்ளியன்று இக்கோயிலில் கூட்டம் லட்சக்கணக்கில் கூடும். ஆடி மாதம் அவசியம் தரிசிக்க வேண்டிய அம்மன் திருத்தலங்களில் இந்த இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும்.