
ஒவ்வொரு வருடமும், ஆடி மாத பூர நட்சத்திரமன்று, நாடு முழுவதுமுள்ள பல கோயில்களில் ஜகன்மாதாவான அம்பிகைக்கு, வளைகாப்பு விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உலகம் செழித்து வளரும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூர விழா சைவ- வைணவ வேறுபாடு இல்லாமல் ஒரு நாள் அல்லது பல நாட்கள் கொண்டாடப்படுகிறது. கோவிலுக்கு கோவில் இது வேறுபடும்.
ஸ்ரீரங்கம் ஆடிப்பூரம்:-
ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கத்தில், பெரியாழ்வாரின் திருமகளாய் அவதாரம் செய்தாள். ஸ்ரீரங்கம் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் மிகச் சிறப்பாக பத்து நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் ஆண்டாளுக்கு செய்யப்படும். சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுவதோடு, ஸ்ரீரங்கம் பெருமாளால் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்படுகிறது
ஆண்டாள் அலங்கார விபரம்:-
நாச்சியார் திருமொழியின், 'சிற்றில் சிதையேல்' என்கிற திருமொழியின் விளக்கமாக ஆண்டாள் அலங்காரம் நடைபெறுகிறது.
ஆண்டாளுக்கு, பரமபத நாதர் சந்நிதியிலுள்ள கண்ணாடி அறையில் திருப்பாற்கடல் நாதன் அலங்காரம்; பரம சுவாமி அலங்காரம்; ராஜகோபாலன் அலங்காரம், துவாராபதி கண்ணன் அலங்காரம்; என வேறுபட்ட பல்வேறு அலங்காரங்களை ஒவ்வொரு நாளும் காண அருமையாக இருக்கும்.
திருநெல்வேலி காந்திமதியம்மன் கோவில் :-
நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவின் நான்காம் நாளன்று காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, செப்புக் கேடயத்தில் வெண் பட்டு அணிந்து எழுந்தருளும் காந்திமதி அம்மன், கைகளில் வளையல் பூட்டிக்கொள்ள, நெல்லையப்பரின் அனுமதி கேட்கும் நிகழ்வு நடக்கும். பின்னர், மேளதாளம் முழங்க காந்திமதி அம்மன் ஊர்வலமாக, ஊஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, வளைகாப்பு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
மும்பை செம்பூர் ஸ்ரீதுர்கை அம்மன்:-
மும்பை செம்பூர், செட்டாநகரில் இருக்கும் திருமுருகர் கோவிலில் உள்ள ஸ்ரீதுர்கை அம்மனுக்கு ஆடிப்பூரமன்று சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெறும். அம்பாளின் மூர்த்தி சிறியதெனினும், கீர்த்தி பெரியதாகும். ஆடிப்பூரம் ஒருநாள் திருவிழாவாக இங்கே கொண்டாடப் படுகிறது. பல பக்தர்கள் அம்மனுக்கு அணிவிப்பதற்காக, வகை-வகையான கண்ணாடி வளையல்களை கோவிலில் கொடுப்பதுண்டு. வண்ண-வண்ண கண்ணாடி வளையல்கள், பட்டு நூலில் அழகாக கோர்க்கப்பட்டு ஸ்ரீதுர்கை அம்மனுக்கு அணிவித்திருக்கும் காட்சி அற்புதமாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று ஸ்ரீதுர்கை அம்மனுக்கு பூஜை செய்து அணிவிக்கப்பட்ட வளையல்கள், மறுநாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ஸ்ரீ ஆதி சக்தி மாரியம்மன் கோவில் செட்டாநகர் :-
ஸ்ரீ ஆதி சக்தி மாரியம்மன் கோவிலில் வீற்றிருக்கும் அம்பாள் சக்தி வாய்ந்த தெய்வம். கோவில் சிறியதெனினும், அம்பாளுக்குரிய அனைத்து பண்டிகைகளும் வருடந்தோறும் இங்கே சிறப்பாக செய்யப்படுகின்றன. அநேக பக்தர்கள் வளையல்களை கொண்டு வந்து முதல் நாளே கொடுப்பார்கள்.
ஆடிப்பூரமன்று அம்பாளுக்கு சிகப்பு, பச்சை, அரக்கு, மஞ்சள் என வித-விதமான கலர்களில் கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்பட்டு பார்க்க மிகவும் அருமையாக இருக்கும். பக்தியுடன் வேண்டும் பக்தர்களைக் கைவிடமாட்டாள் ஸ்ரீஆதிசக்தி மாரியம்மன்.
திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இந்தக் கோவிலில் ஆடிப்பூரத்தன்று வந்து ஸ்ரீஆதிசக்தி மாரியம்மனை மனதார வணங்கி கைகளில் வளைகளை அடுக்கிக் கொண்டு வழிபடுவார்கள். அவர்களுக்கு ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தை பாக்கியம் கிடைக்க, தங்களது வளைகாப்பு விழாவை ஆடிப்பூரத்தன்று, ஸ்ரீஆதிசக்தி மாரியம்மன் கோவிலில் அம்பாள் முன்பு நடத்திக் கொள்வது வழக்கம்.
உபரித் தகவல்கள் :-
ஆடிப்பூரத்தன்று மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் 1008 கலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆடிப்பூரத்தன்று நடைபெறும் விமரிசையான தேரோட்டத்திற்கு முன்பு, ஸ்ரீஆண்டாளுக்கு சாத்துவதற்காக, திருச்சி ஸ்ரீரெங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் கோவில் சுந்தர ராஜ பெருமாள் பட்டு வஸ்திரம், பூமாலை மற்றும் மங்கலப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடையும்.
நாகப்பட்டிணம் புறநகர்ப் பகுதியில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீநீலாயதாட்சி அம்மன் சகேத ஸ்ரீகாயா ரோகணேஸ்வரர் திருக் கோவிலில், ஆடிப் பூரத்தன்று, வசந்த மண்டப ஊஞ்சலில் அமர்ந்து காட்சியளிக்கும் நீலாயதாட்சி அம்மனின் பின்னல் அலங்காரம் விசேஷமானது. அந்த பின்னல் அலங்காரத்தைக்காண சுற்றிவர கண்ணாடிகள் வைக்கப் பட்டிருக்கும்.
ஆண்டாளின் அவதாரம் சிறப்பு வாய்ந்தது என்பதை
"இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக!
வன்றோ இங்காண்டாள் அவதரித்தாள்!
வாழ்வான வைகுந்தவான் போகந்த(ன்)னையிழந்து
ஆழ்வார் திருமகளாராய் "
என்று ஸ்ரீ மணவாள மாமுனிவர், தம்முடைய உபதேச ரத்தினமாலையில் கொண்டாடிப் பாடியுள்ளார்.
ஆடிப்பூரத்தன்று ஸ்ரீஆண்டாளையும், அனைத்து அம்மன்களையும் மனதார வணங்கி நாமும் வழிபடுவோம்.