
1. பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அமிர்த குடம் ஒன்று உள்ளது. மக்கட்பேறு கிடைக்கப் பெறாதவர்கள் பிள்ளைச் செல்வம் வேண்டி இந்த குடத்தை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வர குழந்தை பிறக்கும் என்பது இங்கு ஐதீகம்.
2. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொட்டையூர் கோவிலில் வீற்றிருக்கும் அம்மனின் பெயர் பந்தாடும் நாயகி. இங்கு அம்பாளின் ஒரு கால் கொஞ்சம் முன்னாலும், மற்றொரு கால் கொஞ்சம் பின்னாலும் பந்தாடுவது போல் வித்தியாசமான கோலத்தில் அமைந்துள்ளது.
3. திருபுவனம் அருகேயுள்ள கல்விமடை கிராமத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் உள்ள அம்மன் விக்ரகம் மிகவும் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அம்மன் விக்கிரகம் தானாகவே பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் நிறம் மாறுகிறது. இதைக் காண மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.
4. ஹரித்துவாரில் சிவலிங்கமலை என்ற தலம் உள்ளது. இங்கு மானசாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த தேவிக்கு வித்தியாசமான முறையில் அரிசிப் பொரி நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த அம்மனை 'சிவபெருமானின் மகள்' என்று அங்குள்ள பக்தர்கள் எண்ணி வழிபடுகிறார்கள்.
5. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறங்களில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.
6. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் 12 நாட்கள் ஆடித்தபசு விழா மிகச் சிறப்பாக நடைபெறும். கடைசி நாளன்று அம்பிகை தவசு மண்டபம் சென்று கையில் விபூதிப் பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலை சங்கரநாராயணர் அம்பாளுக்கு காட்சி தருவார். ஆடி மாதம் உத்திராட நட்சத்திர நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் இது. அரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. அம்பாளுக்கான பிரதான விழா என்பதால் அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருள்வாள்.
7. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அங்குள்ள முருகனுக்கு கூடை கூடையாக மலர்களைக் கொட்டி மலர் அபிஷேகம் நடைபெறும். இதை அப்பகுதி மக்கள், 'ஆடியில் மலர் முழுக்கு அழகு வேல் முருகனுக்கு' என்று கூறுவார்கள்.
8. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்விய பொழுது அந்த யானை 'ஆதிமூலமே' என்று பிளிர உடனே திருமால் சக்ராயத்தை ஏவி யானையை காப்பாற்றியது புராண நிகழ்வு. இதனை நினைவுபடுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா பெருமாள் கோவில்களிலும் 'கஜேந்திர மோட்ச வைபவம்' நடைபெறும்.
9. திருப்போரூர் செங்கல்பட்டு சாலையில் செம்பாக்கத்தில் உள்ளது ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம். இங்கு ஸ்ரீ சக்ர ராஜ சபை தர்பார் என்று அழைக்கப்படும் மகிமை வாய்ந்த சன்னிதியில் ஸ்ரீவாராகி நவராத்திரி திருவிழா ஆடி அமாவாசை அன்று தொடங்கி 13 நாட்கள் நடைபெறும். வாராகி அம்மனுக்கு கலச பூஜை, ஹோமம், அபிஷேகம், குங்குமார்ச்சனை போன்றவை ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நடைபெறுவது சிறப்பாகும்.
10. ஆடி மாதம் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உண்டு. மழை வளம் பெருகவும், திருமணத் தடை நீங்கவும் இந்த வழிபாட்டை கன்னிப்பெண்கள் மேற்கொள்கிறார்கள். பிற்காலத்தில் கன்னியர்களோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்கின்றனர். 'முளைப்பாலிகை' என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியது.
11. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பால்குடம் எடுத்தல், தீமிதி, காவடி எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுவது போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.
12. ஒரு காலத்தில் பிரதான உணவாக இருந்த நம் பாரம்பரிய உணவான கூழ் இப்போது ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் 'கூழ் வார்ப்பது' என்று விசேஷமாக நடைபெறுகிறது. காற்றில் பரவும் நோய்கள் ஆடி மாதத்தில் அதிகம் இருக்கும். தொற்று கிருமிகளால் அதிக அளவில் நோய்கள் பரவும் என்பதால் இந்த சமயத்தில் வலிமையும், ஆரோக்கியமும் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அம்மன் கோயில்களில் விழாவாக கொண்டாடி கூழ் காய்ச்சி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
13. எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைக்கும், தை மாத வெள்ளிக்கிழமைக்கும் தனி சிறப்பு உண்டு. விளக்கு பூஜை செய்வது, மாவிளக்கு போடுவது, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பது, சுக்கிர வார விரதம் இருப்பது என்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
14. சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாதம் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு தீச்சட்டி எடுப்பதும், வேப்பிலை ஆடை அணிந்து கோவிலை வலம் வருவதும், உப்பு மிளகு கொட்டுதல், தேங்காய் உருட்டல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பிரார்த்தனைகளை வெகு விமர்சியாக நடைபெறுகிறது.