ஆடிப்பூரத்தில் வீரபத்திரர் வழிபாடு: தோஷங்கள் நீங்கி வெற்றிகளைத் தரும் வெற்றிலை மாலை ரகசியம்!

துன்பங்களை போக்கி, எதிர்ப்புகளை அழிக்கும் வீரபத்திரர் வழிபாட்டு முறைகளும் அதன் அரிய ஆன்மீக பலன்களும்!
வீரபத்திரர் வழிபாடு - Veerabhadra Worship
வீரபத்திரர் வழிபாடு - Veerabhadra WorshipAI Image
Updated on

சிவனின் எட்டு மெய்காப்பாளர்களில் ஒருவராகவும், வீரத்தின் வடிவமாகவும் வீரபத்திரர் கருதப்படுகிறார். இவர் தட்சனின் யாகத்தை அழிக்க சிவபெருமானது நெற்றிக்கண்ணில் இருந்தும், சடையிலிருந்தும் தோற்றுவிக்கப்பட்ட உக்கிரமான போர் கடவுள் ஆவார்.

பார்வதி தேவியின் தந்தை தட்சன் தன் மகள் தாட்சாயணியின் (பார்வதி தேவி) கணவரான சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். அழைப்பிதழ் இல்லாமல் சென்ற தாட்சாயணிக்கு தட்சன் அவமானம் இழைத்தான்.

இதனால் மனமுடைந்த தாட்சாயணி யாகத் தீயில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். மனைவியின் பிரிவால் கோபமடைந்த சிவபெருமான் தன் தலையிலிருந்து ஒரு சடை முடியைப் பிடுங்கி நிலத்தில் அடித்தார். அந்தச் சடைமுடியிலிருந்து பயங்கரமான தோற்றத்துடன் வீரபத்திரர் தோன்றினார்.

வீரபத்திரர் பத்ரகாளியுடன் தனது சிவகணங்களுடன் தட்சனின் யாகசாலைக்குள் சென்றார். அங்கு யாகத்தை முழுமையாகச் சிதைத்து, தட்சனின் தலையைத் துண்டித்தார். தேவர்களும் முனிவர்களும் தடுத்தும் அவர்களைத் தோற்கடித்தார். பின்னர் சிவபெருமான் கருணை கொண்டு தட்சனுக்கு ஆட்டு தலையைப் பொருத்தி உயிர்ப்பித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் கோயில், சிவபெருமானின் அஷ்ட வீரட்டானத் தலங்களில் 4வது தலமாகவும், தட்சனின் யாகத்தை அழித்த இடமாகவும் போற்றப்படுகிறது . இங்கு இறைவன் சந்நிதிக்கு முன்பாக தனி சந்நிதியில் தட்ச சம்கார வீரபத்திர மூர்த்தி சூலம், மழு, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய ஆறு கரங்களுடன் காட்சி தருகிறார்.

இவரின் திருவடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கிறார். கடுமையான கிரக தோஷங்கள், செய்வினை மற்றும் தீராத மனச்சஞ்சலங்கள் நீங்க இங்குள்ள வீரபத்திரருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆடிப்பூரம் என்பது சக்தி வீரபத்திரர் வழிபாடு மிகச்சிறந்த நாளாகும். சிவனின் அம்சமான வீரபத்திரருக்கு ஆடிப்பூரம் உகந்ததாகக் கருதப்படக் காரணம், இந்த நாளில் பார்வதி தேவி உலக நன்மைக்காகச் சக்தியாக அவதரித்ததாகக் கருதப்படுவதும், வீரபத்திரர் அன்னை பத்ரகாளி தேவியுடன் இணைந்து பல தலங்களில் அருள்பாலிப்பதுமே ஆகும்.

வீரபத்திரர் வழிபாடு - Veerabhadra Worship
வீரபத்திரர் வழிபாடு - Veerabhadra Worship

எனவே இந்நாளில் வீரபத்திரர் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் தீய சக்திகள் விலகி, எதிர்ப்புகள் அழியும், மன தைரியம் மற்றும் ஆரோக்கியம் பெருகும். அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஐலவீரபத்திரர், பவன வீரபத்திரர் , ரண வீரபத்திரர், உக்ர வீரபத்திரர், உத்தாண்ட வீரபத்திரர் என பல்வேறு வடிவங்களில் வீரபத்திரர் வணங்கப்படுகிறார்.

வீரபத்திரருக்குரிய அலங்காரங்களில் ஒன்று 'வெற்றிலைப்படல்' வெற்றிலையை அடுக்கடுக்காகத் தைத்து மாலை போல சூட்டுவது. சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்த சுருளைமாலையாக்கி அணிவிப்பர். பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக நிகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள்.

வீரபத்திரர் வழிபாட்டில் தும்பைப்பூ மாலை மற்றும் வெள்ளை நிற ஆடைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வீரபத்திரரை தும்பை பூ மாலை அணிவித்து தூய வெள்ளை நிற வஸ்திரங்கள் அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம். வெற்றிலை மாலை சூட்டி அர்ச்சனை செய்து இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
சோழர்கள் வழிபட்ட உக்கிர காளி கோயில்கள்: அறியப்படாத ரகசியங்களும் வரலாற்று அற்புதங்களும்!
வீரபத்திரர் வழிபாடு - Veerabhadra Worship

ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமி மகா அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது அன்று தும்பைப் பூ, நந்தியாவட்டை, மல்லிகை போன்ற வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து வெண்பட்டு அணிவித்து வீரபத்திரரை வழிபட வீரபத்திரர் முழு அருள் கிடைக்கும்.

செவ்வாய் கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் வீரபத்திரர் விரதம் என அழைக்கப்படுகிறது. அன்று சிவந்த நிறம் கொண்ட பூக்கள் மற்றும் செந்நிற சந்தனம் படைத்து வீரபத்திரரை வணங்கி வர வாழ்வு வளம் பெறும்.

கோபத்தில் உஷ்ணமாக உள்ள வீரபத்திரரை குளிர்விக்க அவர் மீது வெண்ணெய் சாத்தும் முறை வழக்கத்தில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கம்பத்தடி மண்டபத்தில் அருளும் வீரபத்திரருக்கு இந்த பிரார்த்தனை விஷேசமாக செய்யப்படுகிறது. கும்பகோணம் மகாமக குளத்தில் கலக்கும் புண்ணிய தீர்த்தங்களுக்கு காவலாக இருக்கிறார் அங்குள்ள கங்கை வீரபத்திரர்.

ஆடிப்பூரம் அன்று வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாத்துவது அநேகமாக எல்லா வீரபத்திரர் ஆலயங்களிலும் நடக்கிறது. செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயிலுக்கு 5 கிமீ தொலைவில் உள்ள அனுமந்தபுரத்தில் உள்ள வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த கோயிலில் துர் தேவதைகளின் பிடியிலிருந்து விடுபட மற்றும் திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும், குழந்தை வரத்திற்காகவும், மன அழுத்தம், நரம்பு கோளாறுகள், கவலை, மனச்சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற பக்தர்கள் வீரபத்ரருக்கு 108 அல்லது 1008 வெற்றிலைகளைச் சமர்ப்பித்து இங்கு வழிபடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பசுக்களை காக்க எழுந்த கோபிநாத சுவாமி மலைக்கோயில் வரலாறு!
வீரபத்திரர் வழிபாடு - Veerabhadra Worship

பொதுவாகவே அச்சமூட்டும் கோலத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரர் மதுரை வரிச்சியூரில் உள்ள குடவரை கோயிலில் இரு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் சாந்த வீரபத்திரராக அபய முத்திரை காட்டி வலது காதில் ஆண்கள் அணியும் குண்டலமும், இடது காதில் பெண்கள் அணியும் குழையும் அணிந்து காட்சியளிக்கிறார்.

ஆடிப்பூரம் அன்று வீரபத்திரரை வழிபடுவது கடன், நோய், சத்ரு தொல்லை மற்றும் காரியத் தடைகளை நீக்கி தைரியத்தை தரும். அன்று அவரை வெற்றிலை மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல் சுண்டல் படைத்து வழிபட தீய சக்திகள் விலகி நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.வீரபத்திரர் கோபத்தின் அடையாளமாக அறியப்பட்டாலும், பக்தர்களின் துன்பங்களைக் கண்டு மனம் இரங்கி அருள்பாலிக்கும் கருணாமூர்த்தியாவார்.

logo
Kalki Online
kalkionline.com