ஆலயத் தெப்போத்ஸவத்தின் தாத்பரியம் தெரியுமா உங்களுக்கு?

Thaathpariyam of Teppotsavam
Tirumala Tirupati Theppothsavam
Published on

தெப்பத் திருவிழா என்பது இந்து கோயில்களின் குளங்களில் நடத்தப்படும் ஒரு திருவிழாவாகும். இத்திருவிழா நாளில் இறைவனை தெப்பத்தில் வைத்து குளத்தில் மிதக்க விடுகிறார்கள். தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தை சுற்றி தெப்பத்தில் இறைவனை வைத்து வலம் வந்து விழா கொண்டாடப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை கோயில்களில் தெப்பத் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். தெப்போத்ஸவம், தெப்ப உத்ஸவம், மிதவை திருவிழா என்ற வேறு பெயர்களாலும் இந்தத் திருவிழா அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல கோயில்களில் தெப்போத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரு மண்டலம் மன சுத்தியோடு பாராயணம் செய்ய தீராத பிரச்னைகளை தீர்க்கும் முருகப்பெருமான் மகாமந்திரம்!
Thaathpariyam of Teppotsavam

தெப்பத்தின் அடிப்பகுதியில் காலி பீப்பாய்களை வரிசையாக இணைத்து அவற்றின் மீது மூங்கில்களையும் மரங்களையும் கட்டி தெப்பத்தினை உருவாக்குகிறார்கள். இதன் மீது சித்திரத் தட்டிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை இணைக்கிறார்கள். பெரும்பாலும் இரவு வேளைகளில் தெப்பத் திருவிழா நடைபெறுவதால் வண்ண மின் விளக்குகளால் அலங்காரமும் செய்யப்படுகிறது. சித்திர தட்டிகளால் மண்டபம் போல உருவாக்கப்பட்ட அமைப்பின் நடுவே இறைவனை வைத்து குளத்தில் வலம் வருகிறார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் தெப்பத் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அந்தத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தெப்பத்தின் நீளம், அகலம் 50 அடியாகும். உயரம் சுமார் 42 அடி. பிரம்மாண்டமாக இந்தத் தெப்பம் அமைக்கப்படும். இந்தத் தெப்பம், திருக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரவு நேரத்தில் மிதந்து வரும்போது காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய தெப்பம் இந்தத் திருவாரூர் தியாகராஜர் தெப்பம்தான். எந்த ஒரு தெப்பத்திலும் மக்களை ஏற்றும் நடைமுறை கிடையாது. ஆனால், திருவாரூர் தெப்பத்தில் மட்டும்தான் மக்களை ஏற்றும் நடைமுறை உள்ளது. சுமார் 500 பேர் வரை இந்தத் தெப்பத்தின் மீது அமர்ந்து பயணிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
பக்தர்களுக்காகக் காத்திருக்கும் கங்கை: பிறவிப் பயனைத் தரும் காவிரி கடைமுகம்!
Thaathpariyam of Teppotsavam

தெப்பத் திருவிழா பல கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருப்பதி வேங்கடேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என பல கோயில்களில் தெப்ப உத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. தெப்பம் இறைவனுடன் சேர்ந்து மூன்று முறை வலம் வரும். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 11 முறை தெப்பம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும்.

பிறவி எனும் பெருங்கடலில் விழுந்தவர்களை இறைவனின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை அறியத் தருவதே இவ்விழாவின் பின்னணியாகும். கோயில்களில் நடைபெறும் தெப்பத் திருவிழாவைக் கண்டு களித்து இறைவனை தரிசித்து பிறவிப் பயனை அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com