சாமி கும்பிடும்போது தீபம் ஏற்றுவது, தேங்காய் உடைப்பது போன்ற பல செயல்களை செய்வோம். அவை சொல்லும் ஆருடம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தீப ஆருடம்: பூஜை அறையில் தீபம் ஏற்றி விளக்கின் எதிரே கண்களை மூடி இஷ்ட தெய்வத்தை சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். பிறகு கண்களைத் திறந்து எரியும் தீபச்சுடரை கண் கொட்டாமல் பார்த்தால் விளக்கு ஆடாமல் அசையாமல் தீபச்சுடர் உயர்ந்து ஒரே நேராக இருந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி என்பது உறுதி.
தேங்காய் சகுனம்: தேவர்க்கு நிவேதிக்கும் தேங்காயில் மிக இளசும் அதிக முற்றியும் நீக்கி, நடுத்தரமானதை கொள்ள வேண்டும். அதையே நீளமானதும் பின்னமானதும், கண்ணில்லாததையும், அதிக குட்டையானதையும், குடுமி இல்லாததையும், நீர் வற்றினதையும் நீக்கி, சிறு விரல் நீளமாய் சிகை உள்ளதை தேர்ந்தெடுத்து அதன் சிகையுடன் முகத்தின் பாகமாய் தேங்காயைப் பிடித்துக்கொண்டு அருகில் இருக்கிற கல்லின் மேல் மந்திரம் ஜபித்து ஒரே அடியில் இரண்டு பாகம் ஆகும்படி உடைத்தால் எடுத்த காரியம் சுபத்தை தருவதோடு, தன தானிய விருத்தியும் தரும்.
மூச்சு ஜோதிடம்: மூச்சு ஓட்டத்துக்கு சரம் என்று பெயர். ‘சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்’ என்பார்கள்.
சரசாதனத்திற்கு ஆசனமும் பலனும்: மான் தோலில் அமர்ந்து ஆசனம் செய்தால் ஞானம் கிடைக்கும். தர்ப்பை புல் மோட்சத்தை கொடுக்கும். புலித்தோல் செல்வம் பெருகும். வெள்ளைத் துணி செல்வம் பெருகும். ரத்தின கம்பளம், சித்தராசனம் சர்வ மங்கலம் உண்டாக்கும்.
சாரம் பார்க்கிறவர் கட்டிலின் மேலாவது, மச்சு வீடு, மரத்தின் மேல் மற்ற எந்த உயர்ந்த ஆசனத்தின் மேலாவது இருக்கும்போது கேள்வி கேட்க வந்தவன் பள்ளம் அல்லது பூமியிலிருந்து கேட்பானாகில் அவன் நினைத்து வந்த காரியம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பது பொருள்.
சுப காரிய நட்சத்திரம்: மொத்தம் 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் உத்தமமான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும் பயணம் யாவும் வெற்றியைத் தரும்.
சோழி சோதிடம்: ஜாதகம் இல்லாதவர்களுக்கு சோழி போட்டுப் பார்த்து பலன் சொல்லும் முறை ஜோதிடத்தில் உண்டு. இதற்கு 12 சோழிகள் தேவைப்படும். 12 சோழிகள் என்பது லக்னம் முதலான 12 வீடுகளைக் குறிக்கும். 12 தாய சோழிகளை குலுக்கிப் போடவும். இதில் 1, 2, 4, 5, 7, 9,10, 11 என்ற எண்ணிக்கையில் சோழிகள் நிமிர்ந்து விழுந்தால் நினைத்த காரியம் நல்லபடியாக முடியும் என்று அர்த்தம்.
இப்படி ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு. அதைத் தெரிந்து வைத்துக்கொண்டு மனதில் குழப்பம் ஏற்படும்பொழுது, நமக்குப் பிடித்த முறையைப் பயன்படுத்தி குழப்பம் நீங்கி தெளிவு பெறலாம்.