
வீட்டிற்கு தலைவாசலை அமைக்கும் போது உச்சநிலையில் இருக்கும் இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. உச்சநிலையில் தலைவாசல் அமைக்கும் போது ஆரோக்கியம், செல்வாக்கு, சகல சௌபாக்கியம் கிடைக்கும். இதுவே, தவறுதலாக நீச்சநிலையில் வாசலை அமைத்து விட்டால், அந்த வீட்டினுடைய வளர்ச்சி குறைந்துவிடும். மேலும் சண்டைச்சச்சரவு, கருத்து வேறுப்பாடுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது.
வீட்டின் படிக்கட்டுகளை சிகப்பு நிறத்தில் அமைப்பது நன்மையைத் தரும். மேலும் படிகட்டுகள் வைக்கும் போது 3,5,7,9 என்று ஒற்றைப்படையில் படிகட்டுகளை வைப்பது வாஸ்துபடி நல்லது என்று சொல்லப்படுகிறது. குருவினுடைய எண் மூன்று என்பதால் வீடுகளுக்கு மூன்று படிகட்டுகளும், வியாபார ஸ்தலங்களுக்கு புதனுடைய எண்ணான ஐந்தையும் படிகட்டுகளாக வைப்பது நல்லது.
கிழக்கு திசை பார்த்து இருக்கும் வீடுகளில் சூரிய ஒளி நேராக வந்துப்படும். இதில் வைட்டமின் டி இருப்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், கிழக்கு திசை என்பது சுக்கிர பகவானுக்கு உரிய திசையாகும். இந்த திசையில் தலைவாசல் அமைப்பதால், அந்த வீட்டில் உள்ளவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும். அரசியலில் இருப்பவர்கள், அரசாங்க வேலையில் இருப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் கிழக்கு திசையில் வசிக்கலாம்.
வடக்கு திசையில் தலைவாசல் வைப்பதால், புதன் மற்றும் குபேரனின் ஆசிர்வாதம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் வடக்கு திசையில் தலைவாசல் அமைந்த வீட்டில் இருந்தால், லாபம் பல மடங்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
தெற்கு திசை என்பது எமதர்மன் வசிக்கக்கூடிய இடமாகவும், எமலோகம் இருக்கும் திசையாகவும், நம்முடைய பித்ருக்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. மேலும் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட திசையாகும். தெற்கு திசையில் தலைவாசல் அமைந்தால், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் நிறைவாக இருக்கும், நோய் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.
மேற்கு பார்த்த தலை வாசல் வைத்திருப்பவர்கள் ஜாதகத்தில் சனி வலுத்திருக்க வேண்டும் அல்லது ராசி, லக்னம் சனியாக இருக்க வேண்டும். இவர்களுக்கு மேற்கு பார்த்த தலைவாசல் கொண்ட வீட்டில் இருப்பது நன்மையைத் தரும். வழக்கறிஞர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற வேலையில் இருப்பவர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.