
இப்போதே வெயில் தகிக்கிறது. இந்த லட்சணத்தில் மே 4. 2025 அன்று அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பித்துவிட்டது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது எப்படி? புராணம் என்ன சொல்கிறது?
தன் நண்பர்களோடு யமுனையில் நீராடி மகிழ்ந்த கிருஷ்ணன், கரையேறினார். அப்போது அக்னி தேவன் அவர்களை நோக்கி வந்தான்.
‘‘நான் மிகுந்த வயிற்று உபாதை கொண்டிருக்கிறேன். அதைத் தீர்க்கும் அரிய மூலிகைகள் இதோ இந்த நந்தவனத்தில் இருக்கின்றன. நான் அவற்றை உண்டு நோய் தீர்வேன். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்,‘‘ என்று கேட்டான்.
‘‘இந்த வயிற்றுக் கோளாறுக்குக் காரணம் என்ன?‘‘ என்று கிருஷ்ணன் கேட்டார்.
‘‘துர்வாச முனிவர் தன் நண்பனான சுவேதசி மன்னனுக்காக, யாகங்கள் இயற்றினர். நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்த அடுத்தடுத்த யாகங்கள் என்பதால், தாம் மூட்டிய யாகத்தீக்கு, அதாவது எனக்கு, ஏராளமாக நெய்யூற்றினார்கள். இந்த அளவுக்கு இதற்கு முன் நான் நெய் ஏற்றுக் கொள்ளாததால், எனக்கு வயிற்றில் மந்தம் தோன்றிவிட்டது. இதைப் போக்கிக் கொள்ள, காண்டவவனம் என்ற இந்த நந்தவனத்தில் வளர்ந்திருக்கும் சில மூலிகைகளை நான் புசிக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்,‘‘ என்று பரிதாபமாகக் கேட்டார்.
உடனே கிருஷ்ணன், ‘‘இதற்கு எங்களுடைய அனுமதி எதற்கு? எந்த மூலிகை தேவையோ அதை உன் சுபாவப்படி பஸ்மமாக்கி உண்ணலாமே!‘‘ என்று கேட்டார்.
‘‘நியாயம்தான். ஆனால் நான் அப்படி முயற்சிக்கும் போதெல்லாம் இந்திரன் புகுந்து கெடுத்து விடுகிறான். வருண தேவன் மூலமாக மேகங்களை அனுப்பி, பெருமழை பொழிய வைத்து விடுகிறான். இவனுடைய இடையூறாலேயே எனக்கு என் பிணி என்னை விட்டு நீங்காமலேயே இருக்கிறது. ஆகவே நான் மூலிகைகளை உண்டு முடிக்கும்வரை கிருஷ்ணா, நீங்கள் மழை பொழியாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.’’
கிருஷ்ணனுக்கு அக்னியின் எரிக்கும் ஆற்றலைப் பற்றி தெரியும். ஒரு பகுதியில் உள்ள மூலிகைகளை மட்டும்தான் உட்கொள்ளப் போவதாக அக்னி சொன்னாலும், அவனுடைய வெம்மையும், கதிர் வீச்சும் வெகு எளிதாகப் பிற பகுதிகளிலும் பரவி எல்லாமுமே தீக்கிரையாகி விடும். ஆகவே, ‘சரி, உன் பிணியைப் போக்க நாங்கள் உதவுகிறோம். ஆனால் நீ அதிகபட்சமாக இருபத்தியொரு நாட்கள் மட்டுமே இவ்வாறு மூலிகைகளை உட்கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில் மழை பொழியாதபடி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,‘‘ என்று நிபந்தனை விதித்தார்.
அதற்குச் சம்மதித்த அக்னி, நந்தவனத்துக்குள் புக, கொஞ்சம் கொஞ்சமாக மூலிகைச் செடிகள் தீய்ந்து கருகின. இதற்கென்றே காத்திருந்தாற்போல இந்திரன் உத்தரவின் பேரில் வருண தேவன் பெருமழை பொழிவித்தான்.
அதே கணத்தில் கிருஷ்ணன் உத்தரவிட, அர்ஜுனன் அம்புகளை மேல் நோக்கிச் செலுத்தி சரக்கூடு ஒன்றை அமைத்தான். அந்த அம்புகள் ஒரு கூடாரத் துணியாக நந்தவனத்தைப் போர்த்தியது போல அமைய, மழை நீர் ஒருதுளியும் உள்ளே விழவே இல்லை.
அதனால் மிகவும் மகிழ்ந்த அக்னி தேவன் முதல் ஏழு நாட்களுக்குத் தன் பிணித் துன்பம் போக நிதானமாக மூலிகை செடிகளை எரித்து பஸ்மமாக்கினார். அடுத்த ஏழு நாட்களுக்கு, கடும் வேகம் கொண்டு அருகிலிருந்த மரங்களையும், புதர்கள், புல்வெளிகளில் பரவித் தீய்த்தார். இறுதி ஏழு நாட்களுக்கு, உத்வேகம் மிகக் குறைத்து சில தாவரங்களை உண்டு பரிபூரணமாக குணமடைந்தார். அந்த நிறைவில் கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் நன்றி தெரிவித்து விடை பெற்றார்.
இவ்வாறு காண்டவ வனத்தை அக்னி எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று பின்னாளில் இயற்கை புது வடிவம் கொண்டது.
ஆமாம், கோடை காலத்தில் ‘கத்திரி வெயில்‘ என்று குறிப்பிடுகிறோமே அது இதுதான். முதல் ஏழு நாட்கள் முன் கத்திரி, அடுத்த ஏழு நாட்கள் நடு கத்திரி, கடைசி ஏழு நாட்கள் பின் கத்திரி. அதாவது இந்த 21 நாட்களில் கோடையின் கடுமை மிதமாகத் துவங்கி, தீவிரமாக உயர்ந்து பிறகு மீண்டும் மிதமாக நிலவும் காலகட்டம் என்று அமைந்திருக்கிறது!