

அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிப்பவன் சிவன். அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சரத் பூர்ணிமா என்ற ஐப்பசி பௌர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சாம வேதத்திலே ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னாதோ’ என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். அந்த வகையில் ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவபெருமானுக்கு சுத்தமான அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிக மிக விசேஷமானதாகும்.
அந்த வகையில் திருவண்ணாமலையில் இந்தாண்டு ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4-ம்தேதி) மாலை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் மாதம் 4-ம்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணிக்கு பௌர்ணமி திதி தொடங்கி மறுநாள் 5-ம்தேதி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு பௌர்ணமி திதி நிறைவடைகிறது. அன்றைய தினம் காலை 10.14 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் அமைந்துள்ளது. பொதுவாக அன்னாபிஷேகம் ஐப்பசி மாத பெளர்ணமியில் அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரங்கள் இணைந்து வரும் நாளிலேயே நடத்தப்படுவது வழக்கம்.
எனவே, இந்தாண்டு நவம்பர் 4 மற்றும் 5-ம்தேதிகளில், எந்த தேதியில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் அன்னாபிஷேகம், அனைத்து சிவன் கோவில்களிலும் மாலை நேரத்திலேயே நடைபெறும். ஆனால் சில கோவில்களில் அந்த கோவிலின் பஞ்சாங்க விதிகளின் படி காலையில் நடத்தப்படுவதும் உண்டு.
பொதுவாக பௌர்ணமி திதியில் தான் அன்னாபிஷேகம் நடைபெறும் என்றாலும், பௌர்ணமி திதி புதன்கிழமை மாலை வரை இருப்பதால், செவ்வாய் அன்று அன்னாபிஷேகம் செய்தாலும், நவம்பர் 5-ம்தேதி அன்றும், நாள் முழுவதும் பெரும்பாலான கோவில்களில் அன்னாபிஷேக அலங்காரம் கலையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவனுக்கு மட்டும் ஏன் அன்னாபிஷேகம்?
ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாக நீங்கி பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமானை போன்றே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவரே என்ற கர்வம் பிரம்மனுக்கு தோன்றியது. இதையடுத்து பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கைகை கவ்விக்கொண்டது. இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையைப் கவ்விக் கொண்ட பிரம்மனின் கபாலம் பிச்சை பாத்திரமாக மாறியது.
அந்த கபாலம் பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும் போது தான் சிவபெருமானின் கையை விட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்கு செல்லும் போது அன்னபூரணி அவருக்கு அன்னம் இடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. இதையடுத்து பிரம்மனின் கபாலம் கீழே விழுந்ததோடு ஈசனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னம் இட்ட தினம் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினமாகும். எனவே தான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமான் அன்ன அபிஷேக பிரியர். அதனால் சிவபெருமானுக்கு 11 வகையான பொருட்களான தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பு சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
சிவபெருமானுக்கு உகந்த இந்த அன்னத்தை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்வில் இல்லை என்று சொல்லாத அளவிற்கு உணவு எப்போதும் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பேறு கிடைக்கும்.
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் ஓசிச் சோறு உண்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் குறித்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. ஆனால் உண்மையான பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னத்தை அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.
இந்த நாளில் அன்னாபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும், அன்னாபிஷேகத்தை தரிசித்தாலும் மிகப் பெரிய புண்ணியம் வந்து சேரும்.