

உங்களுக்குத் தெரியாமலேயே சிவபெருமானின் திருவருள் உங்களுடன் பயணம் செய்கிறது என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் நீங்கள் உணர முடியும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
1. தெய்வீகக் கனவுகள்: தெய்வங்கள் கனவில் வருவது சாதாரண விஷயம் கிடையாது. இறைவன் யாருடன் அதிகம் பேச விரும்புகிறாறோ, அவர்களுக்கு மட்டும்தான் இதுபோன்ற கனவுகள் வரும் என்று சொல்லப்படுகின்றது. சிவ சின்னங்களான சிவலிங்கம், திரிசூலம், பாம்பு, நந்தி போன்றவை கனவில் வந்தால் இறைவன் அருள் உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம். சிவ தாண்டவம் கனவில் வந்தால் உங்கள் போராட்டங்கள் நீங்கி வெற்றியடையப் போகிறீர்கள் என அர்த்தம். சிவலிங்கத்தை கனவில் கண்டால் உங்களின் முற்பிறவி சிவ வழிபாட்டுடன் தொடர்புடையதாகும்.
2. எதிர்பாராத ஒலிகளும், நறுமணங்களும்: தனியாக, அமைதியாக அமர்ந்திருக்கும்போது எங்கிருந்தோ மணியோசை, சந்தனம், சாம்பிராணி, கற்பூர மணம் அடிக்கடி வருவதாக உணர்கிறீர்களா? ஆனால், அருகில் கோயிலோ, பூஜைகள் எதுவும் நடக்கவில்லை என்றால் தெய்வீக அனுபவங்களை நீங்கள் இருக்கும் இடத்திற்கே கடவுள் கொண்டு வருகிறார் என்றால் இறைவன் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறியாகும்.
3. சிவ சின்னங்கள் மீது ஈர்ப்பு: திருநீறு, ருத்ராட்சம் போன்ற சிவ சின்னங்கள் மீது ஈர்ப்பு வருகிறது என்றால் அது சிவனின் அருளால் ஏற்படும் மாற்றமாகும். உலக பற்றை விலக்கி, ஞானத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்கிவிட்டீர்கள் என அர்த்தம்.
4. எதிர்பாராத சமயங்களில் வரும் உதவி: நீங்கள் ஒரு பிரச்னையில் சிக்கியிருக்கும்போது யாரிடம் உதவி கேட்பது என்று தவிக்கும்போது எதிர்பாராத ஒருவர் உங்களுக்கு உதவி செய்யலாம். குறிப்பாக, வயதானவர்கள் சரியான வழிகாட்டுவது, மேலும் மாடு, நாய்கள் போன்ற விலங்கினங்கள் உங்களுக்கு உதவினால் அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர்களாகவோ அல்லது இறைவனே உங்களுக்காக அவர்கள் வடிவத்தில் வந்திருக்கலாம்.
5. மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்: ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் கோபப்படுபவராகவும், சிறிய விஷயங்களுக்கும் கூட பயப்படக்கூடியவராகவும் இருந்திருக்கலாம். ஆனால், உங்களுக்குள் விவரிக்க முடியாத அமைதியையும் தைரியத்தையும் உணர்கிறீர்களா? இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என்றால் சிவன் உங்களிடம் இருக்கிறார் என்று அர்த்தம்.
6. விலங்குகள் மீது அன்பு: சிவனின் அருள் உங்களுக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டால் சிவ குணங்களான கருணை, பார்க்கும் உயிர்களிடத்தில் அன்பு, இரக்கம் ஆகியவை ஏற்படத் துவங்கும். இயற்கையின் அழகை முன்பை விட அதிகமாக ரசிக்கத் துவங்குகிறீர்கள் என்றால் இதெல்லாம் சிவனின் கருணையால் ஏற்படுகின்றது.
7. சோதனைகளில் அதிகரிக்கும் பக்தி: உங்கள் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது இறைவனை குறை கூறாமல், நம்முடைய கர்ம வினைகள் நம்மை விட்டுப் போகிறது. இறைவன் சோதித்தாலும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் இறை பக்தியும் அதிகரிக்கிறது என்றால் இறைவனின் அருள் முழுமையாக உங்களுக்கு உள்ளது என்ற அர்த்தம்.