
திருமாலிருஞ்சோலை அழகர்கோவிலில் பூஜை செய்து வந்தார் திருமலையாண்டான் ஸ்வாமி. இவர் தினமும் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் அவர் திருமாளிகை செல்லும்போது, அவருக்கு வயதான காரணத்தால் கண் பார்வை மங்கியதால் ஒரு கைங்கர்யபரர்தீப் பந்தம் பிடித்துக் கொண்டு அவருக்கு முன்னால் வழிகாட்டிய படியே வருவார். அவருக்கு சுந்தர்ராஜன் என்று பெயர். அந்தக் காலம் திருமாலிருஞ்சோலைக்குச் செல்லும் வழியெல்லாம் இருட்டாக இருக்கும். வனப் பகுதியாக இருப்பதால் வழிகாட்ட இந்த திருவடிப்பிச்சனை வைத்திருந்தார். திருவடிக்கு பந்தம் காட்டிச் செல்வதால் இப்பெயர் ஏற்பட்டது.
ஒரு நாள் ஆராதனம் முடிந்து தனது திருமாளிகை செல்ல ஆயத்தமானார் திருமலையாண்டான். திருவடி பந்தம் பிடிக்கும் சிஷ்யனைக் காணவில்லை. அந்த சிஷ்யன் பெயரைச் சொல்லி, ‘சுந்தர்ராஜா’ என இருமுறை அழைத்தார். உடனே திருவடி சத்தத்துடன் வந்தவர், அவருக்கு முன்னே வழிகாட்ட திருமலையாண்டானும் திருமாளிகை வந்து சேர, ‘அடியேன் திரும்பிச் செல்ல உத்தரவு வாங்கிக்கிறேன்’ என்று சொல்லி திரும்பி விட்டார்.
மறுநாள் அதிகாலை திருவடிப்பந்தம் பிடிக்கும் சுந்தர்ராஜன் திருமாளிகைக்கு வந்து திருமலையாண்டானை சாஷ்டாங்கமாக சேவித்து, ‘அடியேன் தெரியாமல் திருவடி பந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில் அபசாரம் செய்து விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும்’ என்றார்.
‘என்ன அபசாரம்’ என திருமலையாண்டான் கேட்க, சிஷ்யன் சுந்தர்ராஜன் உடல் அசதியால் தூங்கிவிட்டதால் திருவடி பந்தம் பிடிக்க வராமல் போனதைக் குறிப்பிட்டார். அதோடு, அவர் எப்படி திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார் எனவும் கேட்க, திருமலையாண்டான், ‘நீதான் நேற்று இரவு திருவடி பந்தம் பிடித்து இங்கே கொண்டு வந்து விட்டுப் போனாயே’ எனக் கூறினார்.
சிஷ்யனோ. தான் நேற்று வரவே இல்லை என்றவுடன், திருமலையாண்டானுக்கு பந்தம் பிடித்து வந்தது சிஷ்யன் சுந்தர்ராஜன் இல்லை, சாட்சாத் ஆதிமூலமான பெருமாள் சுந்தர்ராஜனே என்பதை அறிந்து, ‘பெருமாளே, நீரா நேற்று எனக்கு வழிகாட்டினீர்’ என்று நினைத்து கண்களில் கண்ணீர் மல்க பெருமாளை ஆனந்தமாக ஆராதித்தாராம் திருமலையாண்டான்.
சிஷ்யனாக வந்து சேவை செய்ததால் திருமலையாண்டான் பரமபதித்ததும் அவருக்கான இறுதிச் சடங்கினை அழகர் தனது பரிவாரங்களைக் கொண்டு செய்தாராம். திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி. அதனால்தான் அழகர் பெருமாள் வருடா வருடம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்குச் சென்று எண்ணெய் குளியல் செய்கிறார்.
அழகர் வருடத்திற்கு இரண்டு முறை நூபுர கங்கைக்கு வருகை தருகிறார். ஒன்று ஆடி மாதம் அழகரின் வருடாந்திர பிரம்மோத்ஸவம், மற்றொன்று ஐப்பசி மாத துவாதசி அன்று. அதாவது திருமலையாண்டான் பரமபதித்த நாளன்று. கலியுகத்தில் பெருமாள் மனித ரூபத்தில் வந்து உதவி செய்வான். ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால் அவர் உங்கள் ஊர் பெருமாளாகக் கூட இருக்கலாம். யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்.