
பாரதப் போருக்கு முன், பாண்டவ தூதராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி,இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் முதலானோர், ‘உனக்காக நாங்கள் காத்திருக்க, நீயோ தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டு இருக்கிறாயே’ என்று ஏளனம் செய்தனர்.
அவர்களிடம், ‘இறை நாமத்தை அனுதினமும் உச்சரிக்கின்ற, இறைவனின் அற்புதங்களையும் வேலைகளையும் உபந்யாசம் பண்ணுகின்ற பாகவதர்கள் சாப்பிட்டு விட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு’ என்று விதுரர் வீட்டு உணவின் மேன்மையை அவர்களுக்கு விளக்கியதுடன், ஏகாதசி மகத்துவத்தையும் கூறினார் பகவான்.
அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம், கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியை தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தை விட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்றார் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். இதனால்தான் வைகுண்ட ஏகாதசியை மகத்துவமானது என்கிறார்கள். அதிலும் வைகுண்ட ஏகாதசி துவங்கி, ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினங்களிலும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது, மறு பிறப்பற்ற சொர்க்கத்தை தர வல்லது என்கிறார்கள்.
8 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் 80 வயதிற்கு உட்பட்டவர்கள் வரை ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம் என்று ‘காத்யாயன ஸ்மிருதி’ கூறுகிறது. ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்கிறது, ‘அக்னி புராணம்.’
ஏகம்+தசி=ஏகாதசி. ஏகம் என்றால் ‘ஒன்று’ என்று பொருள். ‘தசி’ என்றால் பத்து என்று பொருள். எனவே, ‘ஏகாதசி’ என்றால் ‘பதினொன்றாம் நாள்’ என்று அர்த்தம். மாதந்தோறும் ‘சுக்லபட்சம்’ என்ற வளர்பிறையிலும், ‘கிருஷ்ணபட்சம்’ என்ற தேய்பிறையிலும் பதினோராம் தினத்தில் வருவதே ஏகாதசி. ஓராண்டில் 24 முறை ஏகாதசி வரும். மேலும் ஒரு கூடுதல் ஏகாதசியும் உண்டு.
நான்கு ஏகாதசிகளை சிறப்பாகக் கூறுவார்கள். 1. சயன ஏகாதசி (ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும்), 2. பரிவர்த்தனை ஏகாதசி (புரட்டாசி வளர்பிறையில் வரும்) விஷ்ணு பகவான் துயில் எழும் காலத்தில், 3. உத்தான ஏகாதசி எனும் பிரபோதன ஏகாதசி (கார்த்திகை வளர்பிறையில் வரும்), 4. வைகுண்ட ஏகாதசி.
இவற்றில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியே தனிச்சிறப்பு வாய்ந்தது. ஞானேந்திரம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பரம்பொருளாம் திருமாலுடன் ஒன்றுபடுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி. இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு வைகுண்டநாதனே பரமபத வாசலை திறந்து வைத்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.
24 ஏகாதசியில் ஒவ்வொன்றும் ஒரு நலனை தருகிறது. உதாரணமாக, ஆடி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, ‘புத்ரதா ஏகாதசி’ என்று பெயர். இது குழந்தை வரம் தரும் ஏகாதசி என்பதால் புத்ரதா ஏகாதசி என சொல்லப்படுகிறது. பக்தி சிரத்தையுடன் ஒவ்வொரு ஏகாதசி விரதங்களைக் கடைபிடித்தால் மகிழ்ச்சி, அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.
விரதம் இருப்பவர்கள் மட்டுமின்றி, அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்க்கையில் சரியான பாதையைக் காட்டி, தெய்வீக அருளையும், மோட்சம் அடைவதற்கான வழியையும் காட்டும் உன்னதமான விரதம் ஆகும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி விட்டு, விரதத்தை துவக்க வேண்டும். உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம்.
அப்படி இருக்க முடியாதவர்கள் தானியங்கள், அரிசி, வெங்காயம், அசைவம் ஆகியவை சேர்க்காமல் எளிமையான உணவுகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பொதுவாக, ஏகாதசி திதியை தசமி திதியில் துவங்கி, துவாதசியில் நிறைவு செய்ய வேண்டும் என்பார்கள்.
ஏகாதசி அன்று பெருமாளின் சிலைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தோ அல்லது பெருமாளின் படத்திற்கு பஞ்சாமிர்தம் படைத்தோ வழிபட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள், பழங்கள் ஆகியவை படைத்து பெருமாளை வழிபட வேண்டும். பெருமாளின் திருநாமங்களையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்து வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு.