அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தானங்களும்... அதன் அபூர்வ பலன்களும்!

akshaya-tritiya-pooja
akshaya-tritiya-pooja
Updated on

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதியான வளர்பிறை திதி யானது அட்சய திருதியை எனப்படும்.

அட்சய திருதியை அன்று அட்சய பானை பூஜை செய்வது சிறப்பு. பரசுராமர் இந்நாளில்தான் அவதரித்தார். அட்சய திருதியை அன்று நமது முயற்சிகளுக்கு பலன் வேண்டியும் செல்வ‌செழிப்பு வேண்டியும் லட்சுமி படத்திற்கு ஒரு கற்பூரமோ, நெய் விளக்கோ காட்டி பூஜை செய்ய நல்ல பலன்கள் கிடைக்கும்.

அட்சய திருதியை அன்று ஒரு வெண்கலப் பானையில் குங்குமம் வைத்து, பச்சரிசியை நிரப்பி வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் துணி கட்டி மாலை முதலியவற்றை அணிவிக்க வேண்டும். வசதி இருப்பின் தங்க நகை ஏதேனும் அரிசியின் மீது வைக்கலாம். அல்லது பானையின் மீது மாலையாக தொங்கவிடலாம்.

பானையின் முன்பு கோலமிட வேண்டும். பிறகு பூக்கள், துளசி மற்றும் அட்சதை, மஞ்சள் கலந்த அரிசி தூவி கற்பூரம் அல்லது நெய் தீபம் காட்டவேண்டும். சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த பூஜையால் வாழ்க்கையில் பல நலன்களும், செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை அன்று ஆலமர இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து நோயாளிகள் படுக்க பயன் படுத்தும் தலையணையின் அடியில் வைத்தால் அவர்களது நோய் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள திருக்கோளூரில் வைத்தமாநிதிப் பெருமாள் ஆலயம் உள்ளது. அவர்தான் குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்ததாக ஐதீகம். இந்த பெருமாள் அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்து படுத்திருப்பார். எனவேதான் அவரை வைத்தமாநிதிப் பெருமாள் என்று அழைக்கின்றனர். அட்சயதிருதியை நாளில் அவரை தரிசித்தால் வாழ்வில் வளங்கள் பெருகும்.

இதையும் படியுங்கள்:
சபரிமலையில் நாளை சித்திரை விஷூக்கனி தரிசனம்: தரிசன நேரம் இதோ!
akshaya-tritiya-pooja

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகேயுள்ள முழையூர் பரசுராமர் ஆலயத்தில் அட்சய திருதியை அன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடப்பது வழக்கம். அப்போது சிவபெருமானை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை நாளில் செய்யும் தானத்தின் பலன்கள்:

அன்றைய தினம் ஏழைகளுக்கு உணவு ,குடை ,நீர்மோர் என உதவி செய்ய மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும்.

ஆடைகள் தானம் செய்ய நோய்கள் தீரும்.

பழங்கள் தானம் செய்ய உயர்பதவி கிடைக்கும்.

நீர்மோர், பானகம் என தானம் செய்ய கல்வியில் சிறந்து விளங்கலாம்.

தானியங்களை தானம் செய்ய அகால மரணம் ஏற்படாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வறுமை நீங்கும்.

தயிர்சாதம் தானம் செய்ய பாவ விமோசனமும், வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும்.

புண்ணிய நதிகளில் நீராடி இறைவனை வழிபட்டு வேண்டிக்கொள்ள வாழ்வில் குறைவற்ற செல்வம் பெருகும்.

logo
Kalki Online
kalkionline.com