

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (15-ம்தேதி) புதன்கிழமை சித்திரை விஷூக்கனி சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் புலிகள் காப்பகத்தில், அடர்ந்த வனப்பகுதியில் 18 மலைகளுக்கு இடையே கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது புகழ்மிக்க சபரிமலை தர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோவில். மகாராஜா ராஜசேகரனால் கட்டப்பட்டு, பரசுராமரால் விக்கிரகம் நிறுவப்பட்டதாக நம்பப்படும் இந்தக் கோவிலில், கார்த்திகை முதல் தை வரை (மண்டல, மகரவிளக்கு காலம்) பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருகின்றனர்.
பக்தர்கள் 41 நாட்கள் கடும் விரதம் (துளசி மாலை அணிந்து) அனுஷ்டித்து, இருமுடி கட்டி, பதினெட்டாம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். சபரிமலையின் பதினெட்டாம்படி அல்லது பதினெட்டுப் படிகளின் அடையாள முக்கியத்துவம் மிகவும் பழமை வாய்ந்த நம்பிக்கைகள் மற்றும் புராணங்களில் ஆழந்த ஈடுபாடு கொண்டதாக உள்ளது.
இந்த கோவில் நடை தினமும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள், மற்றும் மண்டல/மகரவிளக்கு காலத்தில் பக்தர்களின் வழிபாட்டிற்காக நடை திறக்கப்படும். இந்த கோவிலில் கிடைக்கும் அரவணை பாயாசம் மற்றும் அப்பம் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்துக்களைப் பொறுத்தவரை, இந்த கோவிலில் உள்ள பம்பை நதி கங்கையைப் போன்றே புனிதமானது, பெரும்பாலும் இது தட்சிண பாகீரதி என அழைக்கப்படுகின்றது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை, மண்டல, மகரவிளக்கு பூஜை, சித்திரை விஷூ போன்ற பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷூ (ஏப்ரல் 14/15) பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையை சிந்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 10-ம்தேதி திறக்கப்பட்டது.
விஷூ பண்டிகையை முன்னிட்டு நாளை 15-ம்தேதி (புதன் கிழமை) சபரிமலையில் விஷூக்கனி தரிசனம் காண பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விஷூ தினத்தன்று அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை, கணிக்கொன்றை மலர்கள், நவதானியங்கள், பலாப்பழம், காய்கறிகள் மற்றும் தங்க நாணயங்கள் நிரப்பப்பட்ட உருளியில், ஐயப்பனுக்குப் பிடித்தமான விஷூக்கனி தரிசனம் நடைபெறுகிறது. இந்தத் தனித்துவமான தரிசனத்திற்காகக் கோவில் நடை அதிகாலையில் திறக்கப்படும். பக்தர்கள் ஐயப்பனின் முதல் தரிசனமாக இந்த விஷூக்கனியைப் பார்க்க, அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் விஷூக்கனி காண சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.
மேலும் தரிசனத்தைத் தொடர்ந்து, தந்திரியும் மேல்காந்தியும் பக்தர்களுக்கு நாணயங்களை 'விஷுக்கைநீட்டம்' (token coins) என வழங்குவார்கள், இது செழிப்பைக் குறிக்கிறது.
சித்திரை விஷூக்கனி விழா முடிந்த பிறகு, வரும் 18-ம் தேதி வரை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 18-ந்தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடிய பிறகு கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் (வைகாசி மாதம்) 5 நாட்கள் வழிபாட்டிற்காக கோவில் நடை திறக்கப்படும்.