
அட்சய திருதியை தினத்தில் சிவபூஜை புரிந்து செல்வம் பெற்றவன் குபேரன். அன்று அவன் ஸ்தாபித்து வழிபட்ட லிங்க திருமேனி குபேரலிங்கம் என்ற திருப்பெயரோடு திருவானைக்காவல் திருக்கோவிலில் உள்ளது.
ஒரு சமயம் துர்வாச முனிவருக்கு பூலோகத்தில் யாகம் ஒன்றினை நடத்துவதற்கு பொருள் தேவைப்பட்டது. செல்வத்தை யாரிடம் கேட்பது என்று அவர் யோசிக்கையில் குபேரனின் நினைவு வரவே குபேரனை சந்திக்க சென்றார்.
ஆனால் பொருள் தராததோடு அவரை அவமதிக்கவும் செய்தான் குபேரன். அதனால், "குபேரா பணத்துமிரு உன் கண்களை மறைக்கிறது. உன்னிடம் இருக்கும் சங்க நிதியும் பதும நிதியும் உன்னை விட்டு விலகிப் போக கடவது," என்று சாபம் கொடுத்துவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றார் துர்வாசர். அவர் கொடுத்த சாபம் அப்போதே பலித்தது. நடுநடுங்கி போன குபேரன் சத்தியலோகம் சென்று பிரம்மதேவரை சந்தித்து நடந்ததை கூறினான்.
"குபேரா! நீ துர்வாசரிடம் நடந்து கொண்ட விதம் சரியில்லை. நல்ல காரியத்திற்கு கொடுப்பதால் செல்வம் குறைந்து போகாது. அது மேன்மேலும் வளரும். ஆனால், நீ மறுத்ததால் அது மறைந்து விட்டது" என சொன்னார் பிரம்மா. அதோடு "பூலோகத்தில் பஞ்சபூதங்களில் நீர் தலமான திருவானைக்கா சென்று, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜித்து சிவபெருமானை நோக்கி தவம் செய். அவர் உனக்கு அருள் புரிவார்," என்று யோசனை சொன்னார் பிரம்மன்.
திருவானைக்கா திருத்தலத்திற்கு குபேரன் வந்தான். கிழக்கு திசை நோக்கி பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து தவம் இருந்தான்.
அவன் தவத்தினை போற்றிய சிவபெருமான் காட்சி தந்து, அவனது சாபத்தை போக்கினார். குபேரனுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அருளிய புனித நாள் அக்ஷய திருதியை என்று புராணம் கூறுகிறது. குபேரன் வழிபட்ட சிவலிங்கம் திருவானைக்காவல் கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் நுழைந்ததும் எதிரே இருக்கிறது.
சிவபெருமான், "உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது மகாலட்சுமி அருளால் தான் சாத்தியம்," என்று சொல்லி மறைந்ததையடுத்து குபேரன் மகாலட்சுமியிடம் லிங்கத்தை பெற்று இந்த தலத்தில் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
இந்த குபேர லிங்கத்தை அக்ஷய திருதியை நாளில் பால், தேன், சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வறுமைகள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் வாழ்வு வளமாகும்.