* சென்னை அருகே, அரசூர் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் சௌந்தரவல்லி அம்மன் கோவிலில் உள்ள பைரவர் சிலை கருங்கல்லால் ஆனது. ஆனால் இச்சிலையை மெல்ல தட்டினால் வெண்கல ஓசை எழுகிறது.
* கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் அருகே உள்ள அனந்தீஸ்வரர் கோவிலில், பெருமாள் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இங்கே பூஜை செய்வது வைணவர்கள்தான். சந்தனமும், தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
* திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் ஒருவர் சைக்கிள் ஓட்டுவது போல ஒரு சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஆனால் சைக்கிள் இங்கிலாந்தில் சுமார் 200 வருடங்களுக்கு முன்புதான் உருவாக்கப்பட்டது.
* சேலம் நகரில் உள்ள பூட்டு முனீஸ்வரர் சுவாமி கோவில் பூட்டு வேண்டுதலுக்கு பெயர் பெற்றது. குடும்பப் பிரச்னைகள் சச்சரவுகள் தீர ஒரு பூட்டை இங்கு பூட்டி விட்டு செல்வது வழக்கம். அதனால் சுவாமிக்கு பூட்டு முனியசாமி என்ற பெயர் ஏற்பட்டது.
* சேலம் உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில் முகப்பு வாசலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சிலைகளும், கோவில் அருகே ஔவையார் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
* திருநெல்வேலி மாவட்டம் இருக்கன்துறையில் உள்ள சிவன் கோவில் கருவறையில் சிவலிங்கத்திற்கு பதிலாக, ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள், நான்கு லிங்கங்களாக அமைந்துள்ளன.
* மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் மண்தான் நைவேத்தியம். கிருஷ்ணர் மண்ணை தின்றதால் இவ்வழக்கம் வந்தது.
* கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் கருங்கல்லால் ஆன நாதஸ்வரம் உள்ளது. நவராத்திரி விஜயதசமியன்று கோவில் வித்வான் அந்த நாதஸ்வரத்தை வாசிப்பார்.
* திருச்சி கீழசிந்தாமணியில் உள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோவிலில் கங்கா தேவிக்கு தனி சந்நிதி உள்ளது.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வாகனங்களுக்கும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. யானை வாகனத்திற்கு கரும்புகளும், குதிரை வாகனத்திற்கு அர்த்த ஜாமத்தில் பால் சேர்த்த சர்க்கரை பொங்கலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
* தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள அனுமார் கோவிலில் பத்து கரங்களுடன் அனுமன் காட்சி தருகிறார். அதோடு இவர் வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என ஐந்து முகங்கள் கொண்ட ஆஞ்சநேயராகவும் விளங்குகிறார். மேலும் கோவில் கர்ப்ப கிரகத்தில் சஞ்சீவி மலையையும், கதையையும் கைகளில் தாங்கி, வீர ஆஞ்சநேயராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
* வாலாஜாபேட்டை அருகில் உள்ள வன்னிவேடு எனும் ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் ஒற்றைக் காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
* திண்டுக்கல் மாவட்டம் அனைப்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் நவகிரகங்கள் வாயு வடிவில் உள்ளன. அனுமனின் வாலில் நவகிரகங்கள் ஐக்கியமானவை என்பதால் நவகிரகங்களுக்கு இங்கு சிலைகள் இல்லை.
* திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார் குப்பம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில், முருகனுக்கு மயிலுடன் சிங்கமும் வாகனமாக உள்ளது.