
குபேரனை போல வாழ ஆசை யாருக்கு தான் இருக்காது? செல்வத்திற்கு அதிபதியான குபேரன், தான் இழந்த செல்வங்களான சங்க பதும நிதிகளை மீண்டும் பெற்ற நாள் அக்ஷய திருதியை. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் பெற்றது இந்த நாளில் தான். செல்வம் பெருக செய்யும் இந்த நன்னாளில் வழிபட வேண்டிய தெய்வமான அக்ஷய லிங்கேஸ்வரர் திருவாரூர் மாவட்டம் கீவளூரில் இருக்கிறார். இவரை தரிசித்தால் குபேரனை போல வாழும் யோகம் அமையும்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் படை வீரர்களுடன் இந்த தலத்திற்கு வந்தார். சூரனை கொன்ற பாவம் தீர அங்கு சிவபூஜை செய்து விமோசனம் பெற்றார். கேடுகளை போக்கி அருள்வதால் கேடிலியப்பர் என்றும் வரங்களை அள்ளித் தருவதால் அக்ஷய லிங்கேஸ்வரர் என்றும் சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது. சிவபூஜை செய்த முருகனுக்கு அசுர சக்திகளால் இடையூறு நேராதபடி காவல் காத்த பார்வதி தனி சன்னதியில் அஞ்சு வட்டத்தம்மன் என்னும் பெயரில் இருக்கிறாள்.
இங்குள்ள நடராஜர் இடது பாதத்தை ஊன்றி வலது பாதத்தை தூக்கி பத்து கைகளுடன் காட்சி தருகிறார். இவரை சின்ன வெள்ளியம்பலம் என்கின்றனர். திருமால், பிரம்மா, இந்திரன், அக்னி, எமன், சந்திரன், வாயு, வசிஷ்டர், மார்க்கண்டேயன், துன்மதி, சந்திரகுப்தன் ஆகியோர் இங்குள்ள சிவனை வழிபட்டு செல்வ வளம் பெற்றனர். கோவிலின் தல விருட்சமாக இலந்தை மரம் விளங்குகிறது.
பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, அகஸ்தியர், விசுவநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், குபேரனுக்கு சன்னதிகள் உள்ளன.
முருகப்பெருமான் இங்கு மஞ்சளில் விநாயகர் பிடித்து பூஜை செய்தார். கீவளூரில் இருந்து சற்று தூரத்தில் உள்ள மஞ்சாடி என்னும் ஊரில் இந்த விநாயகருக்கு கோவில் உள்ளது.
இங்கு அருள் புரியும் இறைவன் ஸ்ரீ அட்சய லிங்க சாமி என அழைக்கப்படுகிறார் . அ+க்ஷயம் என்றால் கேடு + இல்லை என்பது பொருள். எனவே தமிழில் இறைவனை கேடிலியப்பர் என அழைத்துப் போற்றுகின்றனர்.
கீவளூர் மாட கோவில் வகையைச் சேர்ந்ததாக விளங்குகிறது. சுவாமி சன்னதிக்கு செல்ல பதினெட்டு படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும். கருவறையில் கேடில்லியப்பர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
செல்வ வளத்தை வழங்கும் குபேரனுக்கு தனி சன்னதி இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் எல்லா வளமும் பெற இந்த சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
முதல் திருச்சிற்றில் கிழக்கு நோக்கி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் ஸ்ரீ சுந்தர குஜாம்பிகை என்ற பெயர் கொண்டு அருள்பாலிக்கிறார். கருணை பொங்கும் முகப்பொலிவுடன் காட்சிதரும் அன்னையின் சிறப்பை என்னவென்று கூறுவது. கீழ்வேளூர் இறைவனை நினைப்பவருக்கு பிணியோடு வினைபோமே என்று ஞானசம்பந்த பெருமானும் கீழ்வேளூர் ஆளுங்கோவை கேடிலியை நாடுபவர் கேடிலாரே என்று அப்பர் பெருமானும் போற்றும் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் நம் துன்பங்களை போக்கும் சிறப்புமிகு கோவிலாகும்.
அக்ஷய திருதியை அன்று கீவளூர் சென்று இந்த கேடிலியப்பர் என்ற அக்ஷய லிங்கேஸ்வரரை வணங்கி குபேரனையும் தரிசித்து குபேரன் போல செல்வ வளம் பெறலாம்.