
சொர்க்கத்தின் நுழைவு வாயில் எனக் கருதப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கேதர்நாத் கோயில் ஏப்ரல் மாதம் அட்சய திருதியை முதல் அக்டோபர் மாதம் தீபாவளி வரை மட்டுமே திறந்திருக்கும். இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இந்தக் கோயில்.
குளிர்காலத்தில் கேதார்நாத் கோயில் ஆறு மாதங்கள் மூடப்பட்டிருக்கும் போது, தெய்வத்தின் சிலை உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஓம்காரேஷ்வர் கோயிலில் ஆறு மாதங்கள் வழிபடப்படுகிறது.
கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் முக்கோண வடிவத்தில் உள்ளது. இது சிவாலயங்களில் தனித்துவமாக அமைகிறது. இது கோயிலின் கருவறைக்குள் அமைந்துள்ளது. கேதார்நாத் கோயிலில் பார்வதி, கிருஷ்ணர், ஐந்து பாண்டவர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் திரௌபதி, நந்தி மற்றும் வீரபத்ரர் ஆகியோரை மற்ற தெய்வங்களாகவும், கடவுள்களாகவும் குறிக்கும் பிற சிலைகள் உள்ளன.
கேதார்நாத் கோயில் பஞ்சபாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பாண்டவர்கள் குருக்ஷேத்ர போருக்குப் பிறகு, போரில் தங்களது உறவினர்களைக் கொன்ற பாவத்தில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டி சிவபெருமானை வழிபட இப்பகுதிக்கு வந்தனர். ஆனால், அவர்களை மன்னிக்க சிவபெருமான் விரும்பாததால் அவர்கள் இமயமலையிலேயே சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சிவபெருமானும் இப்பகுதியிலேயே பசு வடிவத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். எனவே, அவர்கள் இங்கே ஈசனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர். இந்தக் கோவில் புராண காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டது எனக் கூறப்பட்டாலும், இக்கோவிலின் முதன்மை அமைப்பு 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கட்டடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஆதிசங்கரரால் இக்கோயில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. இக்கோவில் ஈசனைப் பற்றி சைவக் குரவர்கள் பாடி இருக்கின்றார்கள்.
"கேதாரம் மேவி னானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார். பன்னிரண்டாம் திருமுறையில், "வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள். கேதார்நாத் கோயில் பல இயற்கை சீற்றங்களைக் கண்டுள்ளது. ஆனாலும் இந்த கோயிலைச் சிறு துரும்பும் அந்த சீற்றங்களால் அசைக்க முடியவில்லை.
இக்கோவிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ தொலைவு மலை ஏறியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலின் கருவறை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இக்கோயில் கருவறை வெள்ளி தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மும்பை வைர வியாபாரி ஒருவர் கொடுத்த 550 தங்கத் தகடுகள் மூலம் 2022 ம் ஆண்டு தீபாவளி அன்று கருவறை முழுக்க தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 19 பணியாளர்கள் ASI அதிகாரிகள் இருவர் முன்னிலையில் தங்கத் தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
வருடத்தில் மிக அதிக நாட்கள் பனிப்பொழிவிலேயே நனையும் இந்தக் கோயிலில் பிரணவ மந்திரமான, ‘ஓம்’ எனும் வார்த்தையை 60 டன் எடையில் சிற்பமாக அமைக்க இந்தக் கோயில் நிர்வாகம் முடிவு செய்து செம்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகக் கலவையால் உருவாக்கப்பட்டு, பன்னிரெண்டு பாகங்களாக தனித்தனியே இருக்கும் இந்த, ‘ஓம்’ சிற்பம், டிராக்டர் மூலம் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு கோயிலில் வைத்து அவை ஒன்றாக இணைக்கப்பட்டு நிறுவப்பட்டது. இந்த ஓம் சிற்பம் கேதார்நாத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை உருவாக்கத் தேவையான செம்பும், பித்தளையும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
4 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஓம் உருவத்தை குஜராத்தி கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். சிற்பம் 60 குவிண்டால் எடை கொண்டது. இந்த ஓம் சிலை அதன் வடிவத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மறைக்கும் விளக்குகளைக் கொண்டிருக்கும். ஒளியூட்டப்பட்டவுடன் அது இரவில் பிரமிக்க வைக்கும்.