
ஸ்ரீ வைஷ்ணவ திருப்பதிகள் 108ல் ஒன்றான காஞ்சிபுரத்து திவ்ய தேசங்களுள், ‘பாடகம்’ என்று பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில் ஆகும். இது மிகவும் பழைமையானதும், பிரசித்தி பெற்றதுமாகும்.
இத்திருக்கோயில் சங்கர மடத்தில் இருந்து தென்மேற்கில் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்காக தூதுவராக சென்றதால் ‘பாண்டவ தூதப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் 'தூதஹரி' என குறிப்பிடப்படுகிறார். மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் மிகவும் சிறப்பு பெற்றவையாகக் கருதப்படுவது கிருஷ்ண அவதாரமே. கண் பார்வையற்ற திருதராட்டிரருக்கு கண நேரம் கண் பார்வை அளித்து தன்னுடைய பெரிய விஸ்வரூப தரிசனத்தை கண்ணபிரான் வழங்கினார். அதேபோல், அர்ச்சுனனின் மகனான பரீட்சித்து மன்னரின் மகனான ஜனமே ஜெயனுக்கும், ஹாரித மாமுனிக்கும் இப்பெருமாள் தரிசனம் கொடுத்தார் என்பது புராண வரலாறு.
கருவறையில் உள்ள பாண்டவ தூத பெருமாளின் பிரம்மாண்ட உயரம் 25 அடி உயரம் ஆகும். கிருஷ்ணர் மனித வடிவில் தோன்றியதால் இரண்டு கைகளுடன் மட்டுமே இந்த ஆலயத்தில் சித்தரிக்கப்படுகின்றார். அதில் ஒன்று அபய முத்திரை பாதுகாப்பிற்காக. மற்றொன்று வரத முத்திரை கொடுப்பதற்கான அறிகுறி.
இத்திருக்கோயிலில் ருக்மணி பிராட்டிக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன. பெருமாள் விமானம் சக்கர விமானம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்கிற ஆச்சாரியார் எழுந்தருளியிருப்பது மற்றொரு விசேஷமாகும். இவ்வாசாரியார் பூர்வத்தில் யக்ஞமூர்த்தி என்கிற திருநாமம் பூண்டு ராமானுஜரோடு 18 நாள் வாதம் செய்தார். பிறகு அவருடைய உபதேசங்களால் நெஞ்சுருகி, அவருடைய திருவடிகளில் அடைக்கலம் புகுந்த பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கியவர்.
இத்திருக்கோயிலின் விமானத்திற்கு வட பக்கத்தில் உள்ள கல்வெட்டுகளால் இக்கோயிலின் பெயர் ‘பாடகம்’ என்றும், முதலாம் குலோத்துங்க சோழனால் இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது. மூலவர் பெருமாள் சுதையினால் செய்யப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பாகும்.
கிருஷ்ண ஜயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம் முதலானவை இத்திருக்கோயில் விசேஷங்கள் ஆகும். ஆவணி மாதத்தில் கிருஷ்ணரின் வருகையான ஜன்மாஷ்டமி மிகவும் பயபக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. தரிசன நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை.
இக்கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தால் தொற்று நோய் குணமாகும் என்று நம்பப்படுகிறது. அவரது சன்னிதியை சுற்றி வருவது 32 ஆயிரம் தெய்வங்களை வணங்குவதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. கிருஷ்ணர் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் சிரமங்களில் இருந்து விடைபெற இக்கோயிலுக்கு வந்து வணங்குகின்றனர்!