
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் தேவிகாபுரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கனககிரீஸ்வரர் திருக்கோயில். கனககிரி எனும் மலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. கனககிரி மலையின் அடிவாரத்தில் அருளும் அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ பெரியநாயகி அம்மன். அம்பாள் ஆலயத்தின் பின்புறம் தென்மேற்கில் சற்றுத் தொலைவில் ஐநூறு அடி உயரமும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவும் முன்னூற்றி இரண்டு படிகளையும் கொண்டு கனககிரி என்னும் மலை அமைந்துள்ளது. இம்மலை உச்சியில்தான் ஈசன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார்.
வேடன் ஒருவன் கிழங்கு அகழ்ந்து எடுப்பதற்காக மலை உச்சியில் இரும்பு கருவியை கொண்டு தோண்டியபோது குபீரென இரத்தம் கொப்பளித்தது. அங்கு மேலும் தோண்டியபோது ஒரு அழகிய சிவலிங்கத் திருமேனி தென்பட்டது. அன்று முதல் மக்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தனர். காயம் ஏற்பட்டதன் காரணமாக இத்தல சுவாமிக்கு அன்று முதல் வெந்நீரில் அபிஷேகம் செய்யப்படுகிறது. சுயம்பு திருமேனி மிகவும் சிறிய அளவில் கண்ணுக்குத் தெரியும் அளவில் இருப்பதால் அருகிலேயே காசி விசுவநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காலம் காலமாக இங்கு அவருக்குத்தான் பூஜைகள் நடைபெறுகின்றன.
மலையடிவாரத்தில் அமைந்த பெரியநாயகி கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. விஜயநகர பேரரசரால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், கிழக்கு - மேற்காக 475 அடி நீளமும், வடக்கு - தெற்காக 250 அகலமும், 30 அடி உயரமும் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. மதிலின் முகப்பில் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரமுடையதாவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது. இந்த கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களை கொண்ட உயர்ந்த மண்டபம் உள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்கு பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர் மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கிய வகையில் அமைந்துள்ளது.
அம்பிகை இத்தலத்தில் தவமிருந்து ஈசனிடம் சேர்ந்ததால் திருமணத் தடை உள்ளவர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
ஒரு சமயம் இத்தலத்தின் வழியே போருக்கு சென்ற பல்லவ மன்னன் ஒருவன், இங்குள்ள சிவனின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, போரில் வென்றால் இத்தல சிவனுக்கு ஒரு கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டான். அதன்படி வெற்றியும் பெற்றான். வெற்றி பெற்ற சில நாட்களில் இறைவனை மறந்தான். அவனுக்கு மீண்டும் ஒரு கஷ்டம் வரவே, இந்த சிவன் கோயிலைக் கட்டினான். ஆனால், வேடன் கண்டெடுத்த சுயம்பு லிங்கம் காணாமல் போய்விட்டது. இதனால் வருத்தம் அடைந்த மன்னன் காசியில் இருந்து வேறு ஒரு லிங்கம் கொண்டு வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினான்.
கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும் மறைந்த சுயம்பு லிங்கம் மீண்டும் கிடைத்தது. கடவுள் தன்னை மறந்தவரை தானும் மறந்து விடுகிறார் என்பதை உணர்த்துவதாகவே இந்த நிகழ்ச்சி அமைந்த்து. மன்னன் இத்தல இறைவனுக்கு கனககிரீஸ்வரர் எனப் பெயரிட்டு அதே கருவறையில் பிரதிஷ்டை செய்தான்.
இத்தல சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். ஒரே கருவறையில் எங்கும் தரிசிக்க முடியாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளன. உள் மண்டபத்தின் தூணில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஒன்பது பெண்களின் சிலை வடிவில் யானை ஒன்று நிற்பது போல் வடிவமைத்துள்ளனர். மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்ததாகக் கருதப்படும் இடத்தில் அன்னையின் திருவடி உள்ளது.
மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் மொத்தமும் ஒன்பது கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. 500 அடி உயரத்தில் 365 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள ஸ்ரீ கனககிரீஸ்வரர் கோயில், வருடத்தின் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த எண்ணிக்கையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.