
விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் உண்டாகும் பலன்கள் ஏராளம். பகவான் மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை தினமும் பக்தியுடன் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் தோன்றிய விதம்: விஷ்ணு சகஸ்ரநாமத்தை முதன்முறையாக உச்சரித்தது பிதாமகர் பீஷ்மர். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருக்ஷேத்திரப் போர் 18 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரை சந்திக்க வந்த தர்மர், போரின் காரணமாக மனம் கலங்கினார். அவர் தனது தாத்தா பீஷ்மரிடம் தர்மம், அமைதி மற்றும் விடுதலைக்கான பதில்களை வேண்டி நின்றார். மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களின் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தார் பீஷ்மர்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்:
ஆன்மிக வளர்ச்சி: தினமும் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உச்சரிப்பதன் மூலம் மனம் உடல் மற்றும் ஆன்மா தூய்மை அடைகிறது. ஆயிரம் நாமங்கள் ஒவ்வொன்றும் மகாவிஷ்ணுவின் தெய்வீக குணத்தைக் குறிக்கின்றன. பக்தியுடன் அவற்றை உச்சரிப்பது தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறவும், பகவானுடன் ஆழமான பிணைப்பை வலுப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி உள்ளார்ந்த அமைதி ஏற்படுகிறது. இது ஞானம், உயர்ந்த ஆன்மீக விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.
தெளிவு: விஷ்ணுவின் நாமங்களை சொல்லும் போது மனது அமைதியாகி மன அழுத்தம் குறைகிறது. கவனத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கையில் தெளிவும் ஏற்படுகிறது. மனதில் நம்பிக்கை குறைவாக இருப்பவர்கள் தினமும் இதை பாராயணம் செய்து வரும் போது தன்னம்பிக்கை கூடும். அவர்களது இலக்குகளை நம்பிக்கையோடு பின் தொடரலாம். அதற்கு இந்த மந்திரங்கள் உதவி செய்யும்.
செல்வ செழிப்பு: பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒரு கைகண்ட மருந்து என்று சொல்லலாம். தினமும் இதை பாராயணம் செய்ய செய்ய அவர்களது நிதி சிக்கல்கள் அனைத்தும் அகன்று அதிர்ஷ்டம் தேடி வரும், செல்வ செழிப்பு மேலோங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது
ஆழமான பக்தி: தொடர்ந்து பாராயணம் செய்து வரும் போது பகவான் மகாவிஷ்ணுவின் மீதான பக்தி ஆழமாகும். இது ஆன்மீக வளர்ச்சிக்கும் தன்னை பற்றி புரிந்து கொள்ளவும் உதவும். மேலும் வாழ்க்கையின் உண்மைகளை அர்த்தத்தை புரிந்து கொள்ல உதவும். நாமங்களால் உருவாகும் வைப்ரேஷன் எனப்படும் அதிர்வுகள், நேர்மறையான மனநிலையை வளர்க்கும். துக்கம் மற்றும் வலி உணர்வுகளைக் குறைக்கும்.
பாதுகாப்புக் கவசம்: எதிரிகள் தொல்லையால் துன்பப்படுபவர்களுக்கு ஒரு அருமருந்து விஷ்ணு சகஸ்ரநாமம். தினமும் இதை பாராயணம் செய்து வரும் போது பலவிதமான சிக்கல்கள், போராட்டங்கள், எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள், தொல்லைகள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல விலகி விடும். சவால்களை சமாளிக்கவும் எதிர்மறை தாக்கங்களை அகற்றவும் உதவும். நாமஜபம் செய்பவர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கி, எதிர்மறை தாக்கங்கள், துன்பங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களிலிருந்து பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.
அச்சம், சந்தேகம் விலகுதல்: வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்த அச்சங்களும் சந்தேகங்களும் மனிதர்களுக்கு உண்டு. ஆனால் விஷ்ணு சகஸ்ரநாமஜபம் அச்சங்களை அகற்றி சந்தேகத்தை விலக்கி, அறிவார்ந்த முடிவுகளை எடுக்க துணை புரியும். மன உறுதியை அளிக்கும்.
வியாதிகளிலிருந்து நிவாரணம்: பக்தியுடன் பாராயணம் செய்பவர்களுக்கு உடல் மற்றும் மனக் கோளாறுகளுக்கு ஒரு தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் நோய்களிலிருந்து நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட மூளை செயல்பாடு: இதிலுள்ள மந்திரங்களை ஜபித்தல், திரும்பத் திரும்பச் சொல்லுதல் ஆகியவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. கற்றல் மற்றும் அறிவாற்றல் தகவமைப்புக்கு உதவுகிறது என்கிறார்கள்.
பக்தியுடன் ஜபித்தாலும் சரி, கேட்டாலும் சரி, விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த கவசமாகக் கருதப்படுகிறது