
ஒரு சமயம் கங்கையில் நீராட மகான் ஒருவர் வந்தார். அங்கு சாக்கடை நீர் கங்கையில் கலப்பதை அவர் கண்டார். இது அவருக்கு அருவெறுப்பைத் தர, கங்கையில் நீராடாமலேயே அவர் போக ஆரம்பித்தார். இதைக் கண்ட கங்கைக்கு வருத்தம் ஏற்பட, அவர் நீராடாமல் செல்லும் காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர், ‘கழிவுநீர் கலந்து பாவங்களை சுமக்கும் கங்கையில் தாம் நீராட விரும்பவில்லை’ என்றார். அதற்கு கங்கை, ‘குளிப்பவர்களின் பாவங்களும், சாக்கடை நீர் பாவங்களும் கங்கையில் நீராட வருபவர்களை அணுகாது. ஆகவே, நீங்கள் செய்வது சரியல்ல’ என்றாள்.
கங்கை கூறியதை சோதிக்க விரும்பினார் அந்த மகான். கங்கையில் கலக்கும் இடமாகிய சமுத்திரத்திடம், ‘கங்கை சுமக்கும் பாவங்கள் எல்லாம் உன்னிடம்தான் குவிக்கப்படுகிறது. இப்படி உன்னிடம் நீராடினால் அவர்களுக்கு அந்த பாவங்கள் வந்து சேராதா’ என்றார். அதற்கு சமுத்திரம், ‘பாவங்கள் என்னிடம் தங்குவதில்லை. அதை சூரிய பகவான் ஆவியாக்கிக் கொண்டு செல்கிறார். ஆகவே, என்னிடம் நீராடுபவர்க்கு பாவம் வந்து சேராது’ என்றார்.
பிறகு அந்த மகான் காயத்ரி மந்திரம் ஜபித்து சூரியனை வரவழைத்து, ‘கடல் நீரை ஆவியாக்குகிறாய். அப்படியானால் நீயும் பாவங்களுக்கு உடந்தைதானே’ எனக் கேட்டார். அதற்கு சூரிய பகவான், ‘அந்தப் பாவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. நான் கொண்டு வருவதை மேகங்கள் ஆர்வத்தோடு உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு இமயமலையில் அவை தங்குகின்றன. ஆகவே, பாவங்கள் அந்த மேகங்களையே சேரும்’ என்றார்.
பிறகு அவர் மேகங்களை அழைத்து, ‘இப்படிப் பாவங்களை சுமந்து திரிய உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’ எனக் கேட்க, அவை, ‘நாங்கள் மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்கள். எஜமானன் நல்லதோ, கெட்டதோ எதைப் போட்டாலும் சுமந்து செல்லும் வாகனம் போல் நாங்கள் இருக்கிறோம். மக்கள் கொடுத்ததை மழையாக செய்கிறோம். அதை பூமி தேவி ஏற்கிறாள். ஆகையால் பாவங்கள் அவரையே சேரும்’ என்றன.
மழை பெய்வதால் பயிர்கள் வளர்ந்திருந்தன. மகான் பூமி தேவியிடம், ‘தாயே இந்தப் பயிர்கள் புண்ணியத்தின் பலனா அல்லது பாவத்தின் பலனா? பாவத்தின் பலன் என்றால் நீ உன்னிடம் வைத்திருப்பது பாவங்களா?’ எனக் கேட்க, அதற்கு பூமி தேவி, ‘இது பாபமா புண்ணியமா என்று எனக்குத் தெரியாது. இந்தப் பயிர்களை கர்ம வினைக்கேற்ப மக்கள் அனுபவிக்கிறார்கள். பிறகு அவற்றை கழிவுப் பொருளாக என் மீதே போட்டு விடுகிறார்கள். நான் அவற்றை கங்கா தேவியிடம் கொண்டு சேர்த்து விடும் தர்மத்தை செய்கிறேன்’ என்றாள்.
அந்த மகானுக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் கங்கை கரை வந்தார். அப்போது அவர் கங்கா தேவியிடம், ‘மகளே! நீ சொன்னது ஒன்று. ஆனால், நடப்பதோ வேறு. பாவங்கள் என்னதான் ஆகின்றன என்று சமுத்திரம் முதல் பூமி தேவி வரை விசாரித்துப் பார்த்தேன். கங்கையில் குவிக்கப்படும் பாவங்கள் சக்கரம் போல் சுழன்று உன்னையே திரும்பவும் அடைகின்றன. எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே’ என்றார்.
உடனே கங்கா தேவி, ‘ஐயா மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம் போல் சுழன்று பூமியையும்,என்னையுமே வந்தடைகின்றன. எங்களது இந்தத் துன்பத்திற்கு விமோசனம் தரக்கூடியவர்களாக இருப்பது தங்களைப் போன்ற உண்மையான ஆத்மாக்களே ஆவர். ஒரு உண்மையான மகான் என்னிடம் நீராடும்போது என்னிடம் சேர்க்கப்பட்ட பாவங்கள் வெகுவாகக் குறைகின்றன. தங்களைப் போன்ற உண்மையான ஆத்மாக்கள் நடப்பது, பேசுவது, சிந்திப்பது, உண்பது, உறங்குவது என்று எந்தச் செயலை செய்தாலும் அவர்களிடம் திகழும் தெய்வீகம் காரணமாக பூமி தேவி மற்றும் எனது பாவங்கள் குறைகின்றன.
ஆகவே, உங்களை மாதிரி மகான்களுக்கான தொடர்பு கிடைக்க நானும் பூமி தேவியும் ஏங்குகிறோம். உண்மையான மகான்களே எங்கள் இருவருக்கும் உத்தம தெய்வங்களாகத் திகழ்கிறீர்கள்’ என்று கூற, முனிவரின் குழப்பம் நீங்கியது. மகானும் மகிழ்ச்சியுடன் கங்கையில் நீராடினார். இதனால் கங்கையும் மகிழ்ச்சி அடைந்தாள்.