
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள சுமார் 2500 அடி உயரம் கொண்ட குன்றுதான் ஆனைமலை. இந்த மலைமுகட்டை உற்று நோக்கினால் உச்சியில் உள்ள பாறை ஒன்று யானை படுத்திருப்பது போல் தோன்றும். எனவே இந்த மலையை ஆனைக்கல் மலை என்று அழைக்கிறார்கள். நாகர்கோவிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த மலையின் குகை ஒன்றில் ஆனைக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா வீற்றிருக்கிறார்.
ஸ்ரீ தர்மசாஸ்தா:
இந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனைக்கல் மலைக்கு செல்லும் வழிகளில் ஆங்காங்கே பெயிண்ட் மூலம் எழுதப்பட்ட அடையாளங்கள் கோவிலுக்கு வழியை காட்டுகின்றன.
வடக்கு நோக்கிய நிலையில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் அமைந்துள்ளது. பாறையில் அமைந்துள்ள குகை போன்ற பகுதியில் விநாயகர், ஸ்ரீ தர்மசாஸ்தா, பூதத்தான் மற்றும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ தர்ம சாஸ்தா இடக்காலை மடித்து வைத்து வலக்காலை தொங்க விட்டபடி கையில் தாமரை மலரை ஏந்தியவாறு அருள்பாளிக்கிறார். அவருக்கு முன்புறம் யானை வாகனம் அமைந்துள்ளது.
தல சிறப்பு:
இயற்கை நிகழ்த்தும் அதிசயம்:
ஸ்ரீ தர்ம சாஸ்தா மூலவரின் மீது பாறை இடுக்குகளில் இருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டு இருக்கிறது. கடும் கோடைக் காலமாக இருந்தாலும், மழைக்காலமாக இருந்தாலும் சுவாமி மீது விழும் தண்ணீர் அளவு கூடுவதோ குறைவதோ இல்லை. கோடைக் காலத்தில் தண்ணீர் விழுவது நிற்காமல் இருப்பதுடன், மழைக்காலத்திலும் சுவாமி மீது விழும் நீரின் அளவு அதிகரிப்பது இல்லை. வழக்கம் போல் சொட்டு சொட்டாக தான் விழுகிறது. இப்படி 24 மணி நேரமும் சாஸ்தாவுக்கு 'ஜலதாரை' நடந்து கொண்டுதான் இருக்கிறது. அருகில் உள்ள மற்ற எந்த சுவாமி சிலைகளின் மீதும் தண்ணீர் இப்படி விழுவது இல்லை என்பதும் ஆச்சரியமான நிகழ்வாகவே பக்தர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அபிஷேக ஆராதனை:
கோவிலுக்கு வெளியே திறந்த வெளியில் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் பூஜை செய்யவும், அபிஷேகம் செய்யவும் பூசாரிகள் எவரும் இல்லை.
மலையேறி செல்லும் பக்தர்களே சுவாமிக்கு பூஜை செய்கின்றனர். கோவிலின் அருகிலேயே சிறிய அளவிலான சுனைகள் உள்ளன. அந்த சுனையிலிருந்து நீர் எடுத்து குடத்தில் சுமந்து வந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்கின்றனர்.
பூஜை செய்வதற்கான பொருட்கள், உணவு வகைகளை தயாரிக்க தேவையான பொருட்களை கோவிலிலே வைத்துள்ளார்கள். ஞாயிறு, பௌர்ணமி நாட்களிலும், ஐயப்பன் சீசன் போதும் மக்கள் சிறுசிறு குழுக்களாக வருகிறார்கள்.
மகர ஜோதி ஏற்றுதல்:
ஆனைக்கல் மலையின் உச்சிப் பகுதியில் தீபம் ஏற்றுவதற்காக 5 அடி உயரத்தில் கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. மகரஜோதி தினத்தில் ஆனைக்கல் மலையின் உச்சியிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களில் தெரியும் என்கிறார்கள்.
நிறைய மகான்களும் சாதுக்களும் தவம் செய்த இடம் என்று கூறுகிறார்கள். இன்றும் இங்கு நிறைய பேர் வந்து வழிபட்டு தியானம் செய்து செல்கின்றனர். பங்குனி உத்திரம் அன்று நிறைய பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுடன் அங்கேயே சமைத்து அன்னதானம் செய்வதும் நடைபெறுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலுக்கு சென்று வணங்கி அவன் அருள் பெறுவோம்!