மூக்கின் மீது விரலை வைத்த சாஸ்தா!

Shasta put his finger on his nose
Shasta put his finger on his nose
Published on

தினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் அப்பைய தீக்ஷிதர். பக்தி சிரத்தையுடனும் ஒழுக்கத்துடனும் திகழ்ந்தவர். இவரது காலத்தில் தாதாச்சாரியார் என்று ஒருவர் இருந்தார். அவர் தீவிர வைணவர். மகாவிஷ்ணுவை தவிர வேறு யாரையும் வணங்காதவர். இவருக்கு விஜயநகரத்து ராய வம்சத்தின் கடைசி ராஜாக்களிடம் அதிக செல்வாக்கு இருந்தது. அதனால் அவரிடம் கொஞ்சம் படாடோபம் இருந்தது. ஆனால், பூஜைகளில் குறை வைக்க மாட்டார்.

ஒரு நாள் ராய வம்சத்தின் ராஜா, தஞ்சாவூர் பக்கம் உள்ள சில விஷ்ணு ஆலயங்களையும் ,சிவாலயங்களையும் தரிசிக்க  வேண்டும் என்று கூறி, தாதாச்சாரியாரையும், அப்பைய தீக்ஷிதரையும் அழைத்துக்கொண்டு, அந்தந்த கோயில்களின் அருமை பெருமைகளையும் கேட்டு அறிந்தபடி சென்றார்.

அப்படி அவர்கள் ஒரு ஐயப்பன் கோயிலுக்கு வந்த போது, அந்த சாஸ்தா மூக்கின் மேல் விரல் வைத்தபடி அமர்ந்திருந்த வினோதமான கோலத்தைக் கண்டனர். அதைப் பற்றி கேட்டபோது அவ்வூர் மக்கள், ‘இந்த சாஸ்தா சிலையை வடித்த ஸ்தபதிக்கு சாஸ்தா இப்படிக் காட்சி கொடுத்து அதேபோல் சிலை வடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக கூறி மறைந்துவிட்டார்’ என்றனர்.

அதன்படியே அந்த ஸ்தபதி சிலை வடித்தபோது, ‘வருவோர் போவோரெல்லாம் இதை பற்றி கேட்டு என்னை குற்றம் இழைத்ததாக அல்லவா பேசுவார்கள்’ என்று கூறி சாஸ்தாவிடம் கண்ணீர் வடித்தாராம். அப்போது ஒரு அசரீரி, ‘சிப்பியே, கவலைப்படாதே! இந்த அபூர்வ காட்சி உன்னால் வர வேண்டி இருக்கிறது. ஆனாலும், உன் கவலை நியாயம்தான். என்னுடைய இந்த தீவிரமான சிந்தனைக்கு காரணம் என்ன என்பது ஒரு ரகசியம். அந்த ரகசியம் அனைத்தும் அறிந்த ஒருவர் இங்கே வரும்போது அது வெளிப்படும். அன்று எனது மூக்கின் மேல் இருக்கும் விரலை அவர் எடுத்து விடுவார். இதை இங்குள்ள சிவாச்சாரியாரிடம் தெரிவித்துவிடு’ என்றாராம்.

அவ்வாறு அந்த சிற்பியும் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். இதுவரை யார் யாரோ வந்து பல காரணங்களையும், சுலோகங்களையும், பாடல்களையும் பாடிவிட்டு போகிறார்கள். ஆனால் அவர்களால் சாஸ்தாவின் மூக்கின் மேல் இருக்கும் விரலை எடுப்பதாக தெரியவில்லை என்றனர்.

அதையடுத்து மன்னர் ஒரு பாடலை பாடி, அதற்கு விளக்கம் கூறினார் அப்பொழுதும் சாஸ்தா மூக்கின் மேல் இருந்த விரலை எடுக்கவில்லை. தாதாச்சாரியார் ஒரு ஸ்லோகத்தைப் பாடி, அதன் அர்த்தத்தையும் கூறினார். அப்பொழுதும் சாஸ்தா மூக்கிலிருந்து விரலை எடுக்கவில்லை.

அப்போது அப்பைய தீக்ஷிதர் கூறினார், ‘அரசே! பூதேசன் எனப்படும் பரமேஸ்வரனுக்கு மகாதேவன் என்று பெயர். அவர் தேவர்களில் பெரியவர். அவர் தனது பிள்ளையான முருகனை தேவசேனைகளின் தலைவனாக தேவசேனாதிபதியாக்கினார்.

பூதப்படையை இரண்டாகப் பிரித்து ஒரு கணத்தின் அதிபதியாக கணபதியையும், இன்னொரு பகுதிக்கு ஐயப்ப சாஸ்தாவை அதிபதியாக நியமித்தார். அதனால் அவருக்கு, ‘பூதநாதன்’ என்று பெயர். அடக்க முடியாத பூதப்படையை அடக்குவது சாஸ்தாவுக்கு பெருமைதானே என்று கூறி தீக்ஷிதர் ஒரு ஸ்லோகம் பாடினார்.

‘ஈஸ்வரனுக்கு பத்தினியான அந்த பராசக்தியும் எனக்கு அம்மாதான். ஆனால் மகாவிஷ்ணுவே எனக்கு அம்மாவானதால்தானே நான் ஹரிஹர புத்திரன்.  அப்படி இருக்க மகாவிஷ்ணுவின் பத்தினியான மகாலட்சுமியை நான் எப்படி அழைப்பது?

அப்பாவின் மனைவி, சித்தப்பாவின் மனைவி, மாமாவின் மனைவி, அண்ணாவின் மனைவி என்று கூறுகிறோம். அவர்களை அம்மா, சித்தி, மாமி, அண்ணி என்று அழைக்கிறோம். ஆனால், அம்மாவின் மனைவி என்று எங்கேயும் உண்டோ?’ என்று கேட்டார்.

கணபதியும், முருகனும், பரமசிவனையும், பார்வதியையும், அப்பா, அம்மா என்று கூறுவர். மகாவிஷ்ணு, மகாலட்சுமியை, மாமா, மாமி என்று கூறுவர். ஆனால் நானோ, பரமசிவனை எனது அப்பா என்றும் , மகாவிஷ்ணுவை எனது அம்மா என்றும், மகாலட்சுமியை எனது அம்மாவின் மனைவி என்றா கூற முடியும்? இந்தக் குழப்பமே அவரது இந்தக் கோலத்திற்குக் காரணம்’ என்றார் தீஷிதர்.

இதையும் படியுங்கள்:
எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவும் பால் இல்லாத உணவுகள்! 
Shasta put his finger on his nose

உடனே சட்டென்று மூக்கின் மேலிருந்த விரலை எடுத்துவிட்டு, தனது வழக்கமான கோலத்தில் உட்கார்ந்து விட்டார் சாஸ்தா.  உடனே தீக்ஷிதர் சரணாகதி அடைந்து சாஷ்டாங்கமாக சாஸ்தாவை கீழே விழுந்து வணங்கினார்.

அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் தீக்ஷிதரை வணங்கி எழுந்தார்கள். அவரது இந்த விளக்கத்தினால், ஊர் மக்கள், மன்னர், தாதாச்சாரியார் அனைவரும் அவர்களது மூக்கின் மேல் விரலை வைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com