
சொன்னதைச் சொல்லும் தன்மை கொண்டது கிளி என்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆண்டாள் நாச்சியார் தான் கண்ணன் மீது கொண்ட காதல் பற்றி தூது அனுப்ப கிளியை பயன்படுத்தினாள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவளது இடது கையில் உள்ள கிளியே அதற்கு சாட்சியாம்.
வியாசரின் மகனாகிய சுகப்பிரம்ம மகரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கையை கேட்கும் இந்த கிளி, ‘தாயே இந்த பக்தன் உன்னிடம் இதை வேண்டினான். அதை எப்போது நிறைவேற்றப் போகிறாய்’ என்று ஆண்டாளிடம் நினைவுப்படுத்துகிறதாம். மேலும், அந்தக் கிளி அதிக சக்தி உள்ளதாகவும் கருதப்படுகிறது.
மாலையில் சாயரட்சை பூஜையின்போது ஆண்டாளுக்கு கிளி வைக்கப்படுகிறது. மறுநாள் காலை வரை கையில் கிளியுடன் ஆண்டாள் காட்சி தருவாள். பிறகு அந்தக் கிளி பக்தர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாள் நாச்சியாருக்கு பரம்பரை பரம்பரையாக ஒரு வம்சத்தினர் மட்டுமே செய்து கொடுக்கின்றார்கள்.
இதை தயார் செய்ய ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் செடிகள் வளர்க்கப்படுகின்றன. மாதுளை பிஞ்சு மொட்டைக் கொண்டு மூக்கு இலையை பயன்படுத்தி இறகு ஏழிலையை, அதாவது மரவள்ளி இலையைப் பயன்படுத்தி உடல், நந்தியாவட்டை இலையைக் கொண்டு சிறகு, காக்கா பொன் என்னும் பளபளப்பான பொருளை கொண்டு கண்கள் ஆகியவை வைத்து வாழை நாரை கொண்டு இணைத்து இந்தக் கிளியை தயார் செய்கிறார்கள்.
இந்தக் கிளி ஆண்டாளின் கையில் வைக்கப்பட்ட பிறகு, வழிபாட்டுக்குப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கிளி வாங்க வேண்டுபவர்கள் முன்பே கோயிலில் சொல்லி வைக்க வேண்டும். இந்தக் கிளியை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் திருமணத்தடை உள்ள ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகிறது.
இது இந்த ஆலயத்தில் காலம் கலமாக நடைபெற்று வரும் வழக்கமாக உள்ளது. பெண்கள் தங்களின் கோரிக்கையை ஆண்டாளிடம் வைத்து அவள் மூலமாகப் பலன் பெற்றவர்கள் ஏராளம். நீங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றால் ஆண்டாள் கையில் உள்ள கிளியிடம் உங்கள் நியாயமான கோரிக்கையை வைத்து பலன் பெறலாமே.