
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயிலில், நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் தரித்தவாறு காட்சியளிக்கும் கருடாழ்வார், பக்தர்களின் வேண்டுகோளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதால், கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார். அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கருடனுக்கு வெள்ளை நிறத்தில் ஆடையாக வேஷ்டி அணிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தக் கோயிலில் மட்டும் கருடனுக்கு வண்ண சேலை ஆடையாக அணிவிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம், திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயில் பெருமாளின் 108 திவ்ய தேசத் தலங்களுள் 41வது திவ்ய தேசமாக அமைந்துள்ளது. இது கடலூரில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.தென்னிந்தியாவில் ஹயக்ரீவருக்கு தனிக் கோயில் இருக்கும் ஒரே தலம் இதுதான். இத்தலத்தில் பெருமாள் மும்மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி தருவதால், பிரம்மனுக்குரிய தாமரையை ஒரு கரத்திலும், சிவனுக்குரிய முக்கண்ணுடனும் காட்சி தருகிறார். இத்தலத்தில் கருடன் பெருமாளிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தில் கைகட்டிய கோலத்தில் காட்சி தருகிறார். கருடனின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாச்சியார்கோயில். இங்கு திருமாலுக்கும் வஞ்சுளவல்லிக்கும் கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக வரலாறு. அப்போது திருமால், தான் இத்தலத்தில் மனைவி சொல் கேட்டு நடப்பவராக இருப்பதால், கருடாழ்வாரே முன்னின்று பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று அவரிடம் கூறினார். அதை ஏற்ற கருடாழ்வார், இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு கருடாழ்வார் தனி சன்னிதியில் உடலில் 9 நாகங்களை அணிந்து அருள்பாலிக்கிறார்.
இவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வீதியுலா செல்லும்போது மூலவர் கல் கருடன் (4 டன் எடை) மீதே சுவாமி எழுந்தருள்கிறார். கல் கருடனை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் 4 பேர் இவரை சுமந்து வருவர். பின்னர் 8, 16, 32 என்று அதிகரித்து 128 பேர் வரை சுமக்கிறார்கள். அதேபோல, புறப்பாடு முடிந்து, கல் கருடனை கருவறையில் வைக்க வரும்போது 128 பேர் தொடங்கி 64, 32, 16, 8 என்று குறைந்து நிறைவாக 4 பேர் சுமப்பது இன்றும் நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பக்தி, வரலாறு மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றிற்கு சிறப்பு பெற்றது. அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கருடாழ்வார் பெருமாளுக்கு எதிர்ப்புறம் இருப்பார். இங்கு பெருமாள், தாயார், கருடாழ்வார், மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையாக இது பார்க்கப்படுகிறது. கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் தஞ்சை மாவட்டம், திருவெள்ளியங்குடி ஸ்ரீ கோலவில்லி ராமர் கோயில், 22வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வாமன அவதாரத்துடன் தொடர்புடைய இத்தலம், நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்டுள்ள சிறப்பைக் கொண்டது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும்தான் கருடாழ்வார் சங்கு, சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது தேவாரத்திருத்தலம் திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோயில். திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால், இத்தலம் 'திருமாற்பேறு' என்றானது. அதுவே மருவி நாளடைவில் திருமால்பூர் என்றானது. மூலவர் சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டிய பின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பாகும். திருமால் பூஜித்த காரணத்தால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாத்தப்படுகிறது. இது சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோத்ஸவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் இது என்பது வியப்புக்குரியதாகும்.
விழாக்களின்போதுதான் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் கோயிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். இங்கு கருவறையின் நடுவில் கருட பகவான் ஒரு காலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின் மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தனது இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.