
இந்திய மக்கள் வழிபாட்டில் மந்திரங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கோயிலில் அல்லது வீட்டில் வழிபாடு செய்யும்போது மக்கள் தங்கள் வேண்டுதல்களை வைக்கும் முன்னர், இறைவனின் அருள் வேண்டி மந்திரங்கள் உச்சரிக்கப்படுகிறது. கோயிலில் பூசாரி மந்திரங்களை உச்சரிக்கும்போது கண்களை மூடுவதைப் பார்த்திருக்கிறோம். கோயிலில் பூஜை ஆரம்பிக்கும்போது மந்திரங்களை உச்சரிப்பது வழக்கம்.
மந்திரங்களை உச்சரிக்கும்போதும் தீபாராதனை காட்டும்போதும் சில நிமிடங்கள் தன்னையும் மறந்து பூசாரி கண்களை மூடுகிறார். வீட்டில் யாகம் செய்யும்போதும் அல்லது ஏதேனும் பூஜை செய்யும்பொழுதும் மந்திரங்கள் உச்சரிக்கும்போது வீட்டில் உள்ளவர்களும் கண்களை மூடி மந்திரங்களை உச்சரிக்கின்றனர். அவர்கள் அப்போது எதனால் கண்களை மூடுகிறார்கள் என்று தெரியுமா? அதற்கு பின்னால் உளவியலும், ஆன்மிக அறிவியலும் உள்ளன.
மந்திரங்களை உச்சரிப்பதன் நோக்கமே, மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் பக்தர்களின் வேண்டுகோளை சேர்க்க வேண்டும் என்பதுதான். பூசாரி பக்தர்களின் வேண்டுகோளை இறைவனிடம் வேண்டும் நேரத்தில், தனது இரு கண்களையும் மூடிக்கொண்டு வெளிப்புற கவனச் சிதறல்களில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறார். மந்திரங்களின் உண்மையான அர்த்தம் உணர்ந்து இறைவனை பெருமைப்படுத்தி, புகழ்ந்து பாடி அவரது மனதினை குளிர்வித்து பக்தர்களின் வேண்டுகோளுக்காக பூசாரி பரிந்துரை செய்கிறார்.
கண்களை மூடும்போது பூசாரியின் எண்ணங்கள் முழுமையாக பக்தர்களின் வேண்டுகோளையும் இறைவனின் ஆசிர்வாதத்தையும் எண்ணியே இருக்கும். அப்போது அவர் இறைவனிடம் தொடர்பு கொண்டதாக தனது ஆழ்மனதில் சிந்தனையை ஏற்படுத்திக் கொள்கிறார். மூடிய கண்களில் இறைவனின் உருவத்தை மனதில் பதிக்கிறார். இறைவனை நேரில் கண்டதாக நினைத்து வேண்டுகோள்களை அவரிடம் சமர்ப்பிக்கிறார். பூஜை வேளையில் பூசாரிகள் கண்களை மூடுவது இறைவனிடம் நேரடியாக தொடர்புகொள்ளும் உணர்வினை ஏற்படுத்தத்தான்.
கண்களைத் திறந்து வைத்திருக்கும்போது, அருகில் உள்ள காட்சிகள், செயல்பாடுகள், சுற்றுப்புற சூழல்கள் அனைத்தும் பூஜை செய்பவரின் கவனத்தை சிதறடிக்கும். பூசாரியின் கவனச் சிதறினால் அவர் தனது வேலையில் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க மாட்டார். ஈடுபாடு இல்லாத எந்த ஒரு செயலும் முழுமையாக நடைபெறாது. கண்களை மூடுவதன் மூலம் பூசாரி தனது மனதினை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்த தியானத்திற்கு செல்கிறார். அந்த நேரத்தில் அவர் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையான உள் அர்த்தங்களையும் உணர்கிறார்.
பூசாரிகளைப் பார்த்து பக்தர்களும் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்திற்கு செல்கின்றனர். இதன் மூலம் பக்தர்களின் எண்ணங்கள் தெளிவடைகின்றன. அப்போது உள் மனதில் ஓர் அமைதி ஏற்படுகிறது. அந்த அமைதி மூலம் நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கிறது. நேர்மறையான சிந்தனையும் தூய்மையான எண்ணங்களும் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை போக்குவதற்கு முதல் படியாக உள்ளன. அப்போது கிடைக்கும் நேர்மறை ஆற்றல் அன்றைய நாளுக்குத் தேவையான அனைத்து உத்வேகங்களையும் கொடுக்கிறது.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், கண்களை மூடும்போது மூளை ஆல்ஃபா அலைகளை செயல்படுத்துகிறது. இது மனதினை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமைதியான மனதில் இருந்து மகிழ்ச்சிகரமான எண்ணங்கள் தோன்றுகின்றன. இவை செய்யும் செயல்களை வெற்றியை நோக்கிச் செல்ல பாதையை காட்டுகின்றன.
வேதங்களிலும் உபநிடதங்களிலும் மந்திரங்களை உச்சரிக்கும்போது அதை மனதினாலும் ஆன்மாவினாலும் உணர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனதினால் உணர வேண்டும் என்றால் கண்களை மூடினால் மட்டுமே அது சத்தியமாகும். பொதுவாக, மந்திரங்களை உச்சரிக்கும்போது நம்மிடம் உள்ள தீய சக்திகள் வெளியேறி நல்ல சக்திகள் உள்ளே நுழைகிறது. அது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி மன அமைதியை அளிக்கிறது.