ராவணனுக்கு தோல்வி பயத்தை முதலில் காண்பித்த அங்கதனின் ஞானம்!

Angatha showed Ravana the fear of defeat
Angathan with Ravanan
Published on

வாழ்வியலை உணர்த்தும் இதிகாசம் ராமாயணம். இதில் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் நிறைய இருந்தாலும், நம்மை மட்டுமின்றி, அந்த ஸ்ரீராமனையே கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது அங்கதன்தான். ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போரில் அனுமனுக்கு இணையாக ஸ்ரீராமனின் நம்பிக்கையைப் பெற்றவன் அங்கதன். வீரத்தில் சிறந்த வானர அரசன் வாலிக்கும் அறிவுக்கூர்மை மிக்க தாரைக்கும் பிறந்தவன்தான் அங்கதன். தந்தையின் உடல் பலத்தையும் தாயின் அறிவுக் கூர்மையையும் ஒருங்கே பெற்று, தந்தைக்கும் தாய்க்கும் பெருமை தேடித்தந்தவன் இவன். குறிப்பாக, வீரத்துடன் ஒரு செயலைப் பற்றிய அத்தனை நுணுக்கங்களையும் கற்று விவேகத்துடன் இருந்ததாலேயே அங்கதன் மற்றவர்களிடமிருந்து மேலும் சிறப்புப் பெற்றான்.

கிஷ்கிந்தா அரசனான வாலி தனது வஞ்சக எண்ணத்தால், தம்பி சுக்ரீவனுக்கு துரோகம் செய்ய, ஸ்ரீராமனை அடைக்கலம் புகுந்த சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்தார் ராமபிரான். உயிர் துறக்கும் தறுவாயில் தனது தவறுக்குப் பிராயச்சித்தமாக வாலி, தனது மகன் அங்கதனை அழைத்து, "நீ எப்போதும் சுக்ரீவனுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும். அவனது எதிரிகள் உனக்கும் எதிரிகளே!" என்றெல்லாம் மகனுக்கு அறிவுறுத்தினான். தந்தையின் வாக்குப்படியே சுக்ரீவனுக்காக ஸ்ரீராமருக்கு துணை நின்று பல சாகசங்களைப் புரிந்தான் அங்கதன். குறிப்பாக, சீதையை தேடிச் சென்றபோது, ஏற்பட்ட இடையூறுகள் அனைத்திலும் விடாமல் முயன்ற அங்கதனின் குண விசேஷங்கள் உடன் வந்த அனுமனையே வியக்க வைத்தது.

இதையும் படியுங்கள்:
தானமாக யாரிடமும் பெறக்கூடாத மற்றும் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
Angatha showed Ravana the fear of defeat

ஞானத்தின் எட்டு லட்சணங்கள் என்று கூறப்படும், பிறர் சொல்வதை உடனே கிரகிப்பது, அந்த விஷயத்தை புத்தியில் நிலைநிறுத்துவது, அதை என்றும் மறவாமல் இருப்பது, கிரகித்ததைப் பிறருக்கு எடுத்துரைக்கும் ஆற்றல், அதையும் யுக்தி எனப்படும் தனிச் சிறப்போடு கூறுவது, அடுத்தவர் யுக்திகளை மறுப்பது, ஒருவர் பேசுவதன் பின்னணியில் உள்ள உண்மையைக் காண்பது, அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்வது என்பன. இந்த எட்டு லட்சணங்களும் அங்கதனிடம் முழுமையாக அமைந்திருந்ததை அனுமன் அறிந்து மகிழ்ந்தான் என்று அனுமன் மூலம் அங்கதனைப் பற்றி சிலாகிக்கிறார் வால்மீகி.

அங்கதனுக்கு இருந்த இந்த விசேஷ குணங்களை அறிந்ததாலேயே ராவணனிடம் தூது செல்ல அவனைத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீராமன். ராவணனை நேருக்கு நேராக சந்தித்து அரக்கர் பிடிக்கு சிக்காமல் தப்பிச் சென்ற சாகசத்தைக் கண்ட ராவணனுக்கு அப்போதே நம்பிக்கை தளர்ந்து விட்டது. தூதுவனாக வந்த அங்கதனே இத்தனை தீரனாக இருந்தால், அவனை அனுப்பிய ஸ்ரீராம, லட்சுமணர்கள் எவ்வளவு அதீத ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள் என்று எண்ணி, தனது எதிர்காலத் தோல்வியை அப்போதே மனக்கண்ணால் கண்டு விட்டான் ராவணன்.

இதையும் படியுங்கள்:
ஆயிரம் நாவை பெற்றும் அரங்கனின் பேரழகைப் போற்றிப் பாட மறுத்த பராசரர்!
Angatha showed Ravana the fear of defeat

இலங்கை மீதான போரில் ராவணனின் படைகளைக் கண்டு அனுபவசாலியான ஜாம்பவானும் பின்வாங்க, அங்கதன் மட்டுமே நிலைத்த நம்பிக்கையுடன் தனது படையினரிடம், "இப்போது சாவிலிருந்து தப்பித்து ஓடினால் எப்போதும் தப்பிக்க முடியுமோ? ராமனையும் லக்குவணனையும் விட்டு ஓடிவிட்டால் அதற்குப் பிறகு நாம் வாழ்வது வாழ்க்கையா? மரணம் வரைக்கும் குற்ற உணர்வும், வெட்க உணர்ச்சியும் நம்மைக் கொல்லாதா? ஓடிப் போனவர்கள் என்று ஊர் நம்மைப் பழிக்காதா? நம்மைக் கோழை என்று தூற்ற மாட்டார்களா? இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?’ என்று உணர்ச்சியூட்டும் சொற்களைப் பேசி அவர்களுக்கு மீண்டும் போர் புரியும் தன்னம்பிக்கையை விதைத்து ஸ்ரீராமரின் மனதில் நீங்கா இடம் பிடித்தான்.

இலங்கை மீதான யுத்தத்தில் அங்கதனின் விவேகம் மற்றும் புத்திக்கூர்மையுடன் நிகழ்த்திய வீரச்செயல்கள் ஸ்ரீராமரையே வியக்க வைத்தது. அங்கதனை கௌரவிக்க ராம பட்டாபிஷேகத்தன்று, ஸ்ரீராமர் நவரத்தினங்கள் இழைத்த அங்கதங்களை (தோள் வளைகள்) பரிசாக அளித்து தனது அருகில் நிறுத்திக் கொண்டார்.

ஸ்ரீராமரின் பட்டாபிஷேகக் காட்சியை தனது கம்ப ராமாயணத்தில் சுவைபட விவரிக்கும் கம்பர், ‘அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த...’ என்று அங்கதனின் சிறப்பு பற்றி குறிப்பிடுவதிலிருந்தே அறியலாம் அங்கதனின் அருமையை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com