

‘வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது’ என்பார்கள். அதாவது, தானம் கொடுப்பதை பெரிதாக சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது என்பதற்காக இது சொல்லப்படுகிறது. தானம் கொடுப்பது சிறந்த செயல்தான் என்றாலும், தானம் பெறுபவர்கள் சில பொருட்களை தானமாகப் பெறாமல் இருப்பது நல்லது. ஆன்மிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் சில பொருட்களை இலவசமாக கொடுக்கக் கூடாது. இவை குறிப்பிட்ட சடங்குகள் அல்லது வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்களாகும். உடைந்த அல்லது சேதமடைந்த பொருட்கள், தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள், சில உணவுப் பொருட்கள் போன்றவற்றையும் தருவதைத் தவிர்க்க வேண்டும்.
பூஜை அல்லது வழிபாடு செய்யத் தேவையான பொருட்கள், குறிப்பாக நெய், கற்பூரம், குங்குமம் மற்றும் புனித நூல்கள் போன்றவற்றை யாருக்கும் இலவசமாகக் கொடுக்கக் கூடாது. இவற்றை அப்படித் தருவது நல்லதல்ல என்று கருதப்படுகிறது. வஸ்திர தானம் என்பது மிகவும் நல்லது. ஆயுளை நீட்டிக்கும். ஆனால், அதற்கு புதிதாக வாங்கிய துணிகளைத்தான் தர வேண்டும். நாம் பயன்படுத்திய துணிகளை தரக் கூடாது. தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் நகைகள், உடைகள் அல்லது மருத்துவப் பொருட்கள் போன்றவற்றையும் பிறருக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பயன்படுத்திய அல்லது உடைந்த பொருட்கள், குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள் அல்லது எலக்ட்ரானிக்ஸ், சாமி சிலைகள், போட்டோக்கள் போன்றவற்றை யாருக்கும் இலவசமாகத் தருவதும் சரியல்ல. கசப்புப் பொருட்களான பாகற்காய், சுண்டைக்காய் வீட்டில் நிறைய விளைந்திருக்கிறதே என்று யாருக்கும் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுப்பதாக இருந்தால் ஒரு ரூபாயாவது அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு தருவதுதான் சிறப்பு. இல்லையெனில் இருவருக்குமான உறவு கசப்பில் முடியும். சேப்பங்கிழங்கு, முள்ளங்கி, பாகற்காய் போன்ற காய்கறிகளையும் யாரேனும் கொடுத்தால் தானமாக வாங்கக் கூடாது.
மகாலட்சுமி வாசம் செய்யும் உப்பை யாரிடமும் கடனாகவோ, தானமாகவோ பெறவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. இரும்புப் பொருட்கள் சிறு ஆணியாக இருந்தாலும் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஒரு ரூபாயாவது கொடுத்துவிட்டு வாங்குவது நல்லது. கூர்மையான பொருட்களான சேஃப்டி பின், குண்டூசி போன்றவற்றையும் யாரிடமும் வாங்கக் கூடாது. அவசரமாகத் தேவைப்பட்டால் கைகளில் வாங்காமல் அவர்களை தரையில் வைத்து விடச் சொல்ல வேண்டும்; பின்பு எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல், யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி வந்து நம் வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. நமக்கு சொந்தமில்லாத பணமாக இருந்தாலும் சரி, பொருளாக இருந்தாலும் சரி இலவசமாகக் கிடைக்கிறதே என்று வாங்கி வரக் கூடாது. யாராவது எவர்சில்வர் பாத்திரங்களை இலவசமாகத் தந்தால் வாங்கக் கூடாது. தானம் பெற்றவர்கள் கொடுத்தவர்களுடைய கஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் சேர்த்து வாங்கிக் கொள்வதாக நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள், ‘இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை கையில் கொடுக்காதே, வாங்காதே’ என்று சொல்வது அதற்குத்தான்.
இரும்பு சம்பந்தப்பட்ட கூர்மையான பொருட்களான அரிவாள்மனை, கத்தி, காய்கறி வெட்டப் பயன்படும் எந்திரங்கள், கத்தரிக்கோல் போன்றவற்றை யாருக்கும் தானமாகக் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. அதேபோல், தோஷ நிவர்த்திக்காக சிலர் எண்ணெய் தானம் செய்வதுண்டு. இப்படிப் பரிகாரம் செய்வதற்காகக் கொடுக்கப்படும் எண்ணெயை வாங்கக் கூடாது. எண்ணெயை தானமாகப் பெற்றால் உடல் நலக்குறைவு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.