
இராமாயணக் காவியத்தில் ஸ்ரீ ராமருக்கு சேவை செய்வதற்காகவே அவதரித்தவர் ஆஞ்சனேயர் என்றால் அது மிகையாது. இவர் பல்வேறு திருத்தலங்களிலும் விதவிதமான கோலங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அது போன்ற சில அரிய கோலங்களில் அருளும் ஆஞ்சனேயர் தலங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
* பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றான சென்னை, ஞாயிறு கோயிலின் வெளியே உள்ள சுதர்சனர் சன்னிதியில் ஐந்து அடி உயர ஸ்வர்ண அனுமனை தரிசிக்கலாம்.
* மகாராஷ்டிரா மாநிலம், எல்லோரா குகைக் கோயில் அருகே பத்ரா எனும் இடத்தில், ஆஞ்சனேயர் வலது கையை தலைக்கு அணை கொடுத்தும், இடது கையை நெஞ்சுக்குக் கீழே வைத்தவாறும் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
* கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஸ்ரீராமர் சன்னிதி முன்பு உள்ள அனுமனின் உயரம் 22 அடி. இவர் எப்போதும் வெண்ணெய்க் காப்பில்தான் இருப்பார். இவருக்கு சூட்டப்படும் வடை மாலை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பது அதிசயம்.
* புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரில் உள்ள அழகிய பெருமாள் கோயிலின் வட திசையில் அனுமன் சன்னிதி உள்ளது. திருமணத் தடை உள்ளவர்கள் இவருக்கு ரோஜா மாலை சூட்டி வேண்டினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனால் இவர் கல்யாண ஆஞ்சனேயராகக் கொண்டாடப்படுகிறார்.
* கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் உள்ள மாருதி கஜானனன் கோயிலில் அனுமனுக்கும் விநாயகருக்கும் முதல் நாள் சூட்டப்பட்ட பூமாலையை உதிர்த்து, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
* திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டியில் உள்ள வீர ஆஞ்சனேயர் கோயிலில், நவகிரகங்கள் அனுமனின் வாலில் ஐக்கியமானதால் இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சன்னிதி கிடையாது.
* மதுரை மாவட்டம், ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயிலில், ஆஞ்சனேயரின் அன்னை அஞ்சனா தேவிக்கு தனி சன்னிதி உள்ளது. தேவியின் வலது புறம் குழந்தை வடிவில் அனுமனும், இடது பக்கம் தேவியின் தோழியும் காணப்படுகின்றனர்.
* மதுரை அருகே உள்ள முத்தப்ப சுவாமி கோயிலில், 41 அடி உயரத்தில் அனுமன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
* திருக்கடையூர் அருகில் உள்ள அனந்தமங்கலத்தில், ஆஞ்சனேயர் 10 கரங்களுடனும், நெற்றிக்கண்ணுடனும் காட்சி தருவது சிறப்பு.
* திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காடு அனுமந்தராயர் கோயிலில் உள்ள அனுமன் விக்ரகம் மகான் வியாசராயரால் ஸ்தாபிக்கப்பட்டது. அவர் 732 அனுமன் வடிவங்களை, தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
* மிகவும் உயரமான ஆஞ்சனேயர்கள் காட்சி தரும் இடங்களாக நாமக்கல், சென்னை நங்கநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் தெய்வ செயல்புரம், சுசீந்திரம், பெங்களூரு மகாலட்சுமிபுரம், ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை சஞ்சீவன ஆஞ்சனேயர் ஆகியவை ஆகும்.
* ராமேஸ்வரம் அனுமன் தீர்த்தத்திற்கு அருகே எழுந்தருளியுள்ள அபய ஆஞ்சனேயரின் உருவம், அத்தி மரத்தால் ஆனது.
* வேலூர் மாவட்டம், படவேட்டில், ஆஞ்சனேயர் ஸ்ரீராமரிடம் பாடம் படிக்கும் நிலையில், அமர்ந்தபடி கையில் சுவடியுடன் காட்சி தருகிறார்.
* திருவையாறு அருகில் உள்ள புது அக்ரஹாரம் எனும் ஊரில், அனுமன் இடது கையில் புத்தகத்துடனும், வலது கரத்தில் வீணையுடனும் காட்சியளிக்கிறார்.