
‘சதுர்’ என்ற வடமொழிச் சொல் எண் நான்கைக் குறிக்கும். மாஸ்யம் என்பது மாதம். ஆக, சாதுர்மாஸ்யம் என்பது நான்கு மாதங்களைக் குறிக்கும். இந்த நான்கு மாதங்கள் விரதம், தவம், புனித நீர்நிலைகளில் நீராடல், மத சம்பந்தமான காரியங்களுக்கு நேரம் ஒதுக்குதல், திருத்தலங்களுக்குச் செல்லுதல் ஆகியவற்றிற்கான நேரம் ஒதுக்குவது சாலச்சிறந்தது. மௌன விரதம் அனுஷ்டித்தல், விருப்பமான உணவைத் தவிர்த்தல், ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ளுதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கலாம். இந்தப் புனித மாதங்களில், இறை காரியங்களில் மனம் செலுத்துபவர்கள், இறவா வரம் தரும் சோமபானம், அருந்துவதற்கு தகுதி அடைவதாக வேதங்கள் கூறுகின்றன. சாதுர்மாஸ்யம் பற்றியும் அந்த மாதங்களின் முக்கியத்துவம் குறித்தும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
பூமியில் வாழும் மக்களுக்குப் பகல், இரவு இருப்பதைப் போல, மேலுலகில் வாழும் தேவர்களுக்கும் பகல், இரவு என்ற நியதி இருக்கிறது. வருடத்தில் தை முதல் ஆனி முடிய ஆறு மாதங்கள் தேவர்களின் பகல். இது உத்தராயண புண்ய காலம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிச் செல்கிறார். ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள ஆறு மாதங்கள் தேவர்களின் இரவு பொழுது. இதை தட்சிணாயண புண்ய காலம் என்பார்கள். இக்காலத்தில் கதிரவன் தென் திசை நோக்கி நகரத் தொடங்குகிறார். இந்த ஆறு மாதங்கள் இந்து மதத்தில் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது.
இந்த ஆறு மாதங்களில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, நான்கு மாதங்கள் யோக நித்திரையில் ஆழ்ந்து விடுகிறார். இந்தக் காலத்தை சாதுர்மாஸ்யம் என்கிறோம். இந்த விரத நாட்களின் ஆரம்பம் மற்றும் முடிவு, நாம் பின்பற்றும் இந்து சமய நாட்காட்டியின்படி சற்றே மாறுபடுகிறது. இரு விதமான இந்து சமய நாட்காட்டிகளை நாம் பின்பற்றுகிறோம். சந்திரனின் இயக்கத்தை வைத்துக் கணிப்பது சந்திரமானம் என்றும், சூரியன் நகருவதை கருத்தில் கொண்டு பின்பற்றுவது சூரியமானம் என்றும் சொல்கிறோம். கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்களின் மாதங்கள் சந்திரமானம், தமிழ், மலையாளம் பேசும் மக்களின் மாதங்கள் சூரியமானம்.
சந்திர மாதத்தின்படி, ஆனி மாதம் அமாவாசை முடிந்தவுடன், ஆஷாட மாதம் (ஆடி) பிறக்கிறது. இந்த மாதத்தின் பதினோராவது நாள் சுக்லபட்ச (வளர் பிறை) ஏகாதசி. இந்த நாளை சயன ஏகாதசி என்பார்கள். இந்த நாளில் மகாவிஷ்ணு யோக நித்திரையை ஆரம்பிக்கிறார். அவர் ச்ராவண (ஆவணி), பாத்ரபத (புரட்டாசி), அஸ்வின (ஐப்பசி) மாதங்களில் தூங்கி, கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விழித்துக் கொள்கிறார். இந்த ஏகாதசியை ப்ரோபோதினி ஏகாதசி என்று கூறுவார்கள். ப்ரோபோதினி என்றால் ‘விழிப்பு’ என்று பொருள். இதன்படி, இந்த வருட சாதுர்மாஸ்ய விரதம் இம்மாதம் கடந்த 6ம் தேதி தொடங்கி, நவம்பர் 1ம் தேதி முடிவடைகிறது. பெரும்பாலும், வைணவர்கள் இந்த நாட்களைப் பின்பற்றுகிறார்கள். ஆஷாட மாத பௌர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்பார்கள். இந்த நாளிலிருந்து, கார்த்திகை மாத பௌர்ணமி வரை உள்ள காலத்தை சாதுர்மாஸ்ய நாட்கள் என்று பின்பற்றுவோர் உண்டு.
இந்து மதத்தின் முக்கிய பண்டிகைகள் பல இந்த மாதத்தில் வருகின்றன. கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி, மற்றும் கார்த்திகை. இறை வழிபாட்டிற்கான புண்ணிய மாதங்கள் என்பதால், இந்த மாதங்களில் கல்யாணம், உபநயனம், கும்பாபிஷேங்கள் போன்ற சுப காரியங்கள் செய்வதில் பலனில்லை. சில வகை உணவுகளைத் தவிர்த்தல், ஒரு வேளை உணவு எடுத்துக்கொள்ளுதல், புலன் இன்பத்தைத் தூண்டும் வகையான உணவுப் பொருட்களைக் கைவிடுதல் ஆகியவை உடல், உள்ளம் ஆகியவற்றை சுத்தப்படுத்தும்.
சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்பவர்கள் ஒவ்வொரு மாதமும் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 8 வரை: பச்சை காய்கறிகள் என்று சொல்லப்படும் கீரை வகைகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா ஆகியவை.
ஆகஸ்ட் 9 முதல் செப்டம்பர் 6 வரை: தயிர், மோர்.
செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 6 வரை: பால்.
அக்டோபர் 7 முதல் நவம்பர் 4 வரை: அசைவப் பொருட்கள். அதிகப் புரதம் உள்ள பருப்பு வகைகள்.
இந்த விரதத்தை சாதுக்கள், ஆன்மிகவாதிகள் மட்டுமல்லாமல், இல்லறத்தார்களும் அனுசரிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் சாதுக்களும், ஆன்மிகவாதிகள் மட்டுமே இதைப் பின்பற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த விரதத்தைப் பின்பற்றுவர்கள் மிகவும் குறைவு.
பொதுவாக. ஜூலை முதல் நவம்பர் வரை மழைக் காலங்கள். இந்தக் காலத்தில் சாதுக்களும், ஆன்மிகப் பிரசாரகர்களும் அதிகம் பயணம் செய்ய முடியாது. பொதுவாக, துறவிகள் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது என்பார்கள். ஆனால், இந்த நான்கு மாதங்கள் அவர்கள் ஒரே இடத்தில் தங்கி, விரதமிருந்து, குருவிடமிருந்து மேலும் வியாக்யானங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்த விரதத்தின் நன்மைகள்:
1. மனதை ஆன்மிகப் பாதையில் செலுத்துகிறது.
2. பாவங்களைப் போக்கி, புண்ணியத்தைத் தருகிறது.
3. மனதையும், உடலையும் தூய்மைப்படுத்துகிறது.
4. இறை வழிபாட்டிலும், தியானத்திலும் மனதைத் திருப்புகிறது.
5. எளிய சாத்வீக உணவு, உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
சாதுர்மாஸ்ய தொடர்பு புராணக் கதை: மகாபலி சக்கரவர்த்தி அசுரர்களின் அரசர். இந்திரனை வென்று மூவுலகையும் ஆண்டு வந்தார். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணு, அந்தணச் சிறுவனாக மகாபலியிடம் சென்றார். (வாமன அவதாரம்) அவர் மூன்றடி நிலம் கேட்க, மகாபலி தருவதாக வாக்களித்தார். உடனே விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்டு அடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்குத் தன்னுடைய தலையைக் காட்டினார் மகாபலி. மூன்றாவது அடியாக, மகாபலியின் தலையில் மகாவிஷ்ணு, தன் பாதத்தை வைக்க. பாதாள லோகம் சென்றார் மகாபலி. மகாவிஷ்ணு தன்னுடன் இருக்க வேண்டும் என்று மகாபலி வரம் கேட்க, அதற்கு சம்மதித்தார் பகவான் விஷ்ணு. மகாலட்சுமி தாயார், வருடத்தில் நான்கு மாதங்கள் மகாவிஷ்ணு. மகாபலியுடன் தங்கலாம் என்று ஒப்புக்கொள்ள சாதுர்மாஸ்ய காலத்தில் மகாவிஷ்ணு, மகாபலியுடன் வாசம் செய்வதாக ஐதீகம்.