
திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட மங்கலகரமான பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அத்தகைய வலம்புரி சங்கை வீட்டில் வைத்திருப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* வீட்டில் வலம்புரி சங்கு வெறும் அலங்காரத்திற்காக மட்டும் வைக்கப்பட்டிருந்தாலும், அந்த வீட்டில் குபேரனும், மகாலட்சுமியும் நித்திய வாசம் புரிவார்கள்.
* வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜித்தால் செல்வம் இழந்து, செல்வாக்கு இழந்து போனவர்கள் கூட, இழந்ததை இழந்த இடத்திலேயே மீண்டும் பெற முடியும்.
* முயற்சித்த காரியங்களிலிருந்த தடைகள், தொழில் ரீதியான தடைகள், உத்தியோகத்தில் வருமானக் குறைவு, குடும்பத்தில் நிலவும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும்.
* வலம்புரி சங்கு வைத்திருப்பவர்களுக்கு பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கோ, கடன் கொடுக்கும் அளவிற்கோ செல்வ நிலை உயரும்.
* உங்களைப் புரிந்துகொள்ளாமல் அலட்சியம் செய்தவர்கள்கூட, உங்களைத் தேடி வரும் நிலை உண்டாகும்.
* மகாலட்சுமியின் அம்சமான வலம்புரி சங்கை வீட்டிலோ, தொழில் செய்யும் இடத்திலோ வைத்து பூஜித்தால் செல்வம் பெருகும்.
* ஆடி மாதம் பூர நட்சத்திரம், புரட்டாசி பௌர்ணமி, ஆனி மாதம் வளர்பிறையுடன் கூடிய அஷ்டமி, சித்திரா பௌர்ணமி அன்று வலம்புரிச் சங்கில் பால் வைத்து, மகாலட்சுமியைப் பூஜித்து, வேண்டிய நைவேத்தியங்களைப் படைத்தால் தன பாக்கியமும், பொன், பொருள், ஆடை, ஆபரணமும் சேரும். இப்பூஜையைச் செய்யும் தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
* வலம்புரி சங்கில் ஊற்றப்படும் நீர், அது எந்த வகை நீராகஇருந்தாலும் புனிதம் அடைகிறது. தினமும் இச்சங்கில் தண்ணீர் வைத்து, அதில் துளசியைப் போட்டு, அந்தத் தண்ணீரைப் பருகி வந்தால் ஆயுள் விருத்தியாகும்.
* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க்கிழமைகள் அம்மனை பூஜித்தால் எல்லா தோஷங்களும் நீங்கி, திருமணம் நடைபெறும்.
* தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்தால், பத்து மடங்கு அதிகப் பலன் கிடைக்கும்.
* பிறந்த குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் கண்டால் வலம்புரி சங்கில் நீர் விட்டு, அதில் ருத்ராட்சத்தைப் போட்டு ஊற விட்டு, ஊறிய நீரை மட்டும் குழந்தைக்கு ஊட்டினால் காய்ச்சல் மற்றும் பிற தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
* வலம்புரி சங்கினால் அர்ச்சிப்போர் ஏழு பிறவிகளில் செய்த வினைகள் யாவும் நீங்கும் என்று ஸ்காந்தம் கூறுகிறது.
* வலம்புரி சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம்.
* வலம்புரி சங்கில் கங்கை நீரை நிரப்பி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால், பிறவிப் பிணியை அறுக்கலாம்.
* பூஜை அல்லாத நாட்களில் வெள்ளிப் பெட்டியில் வலம்புரி சங்கை வைத்திருக்கும்போது சங்கினுள் பணத்தையோ, தங்க நாணயங்களையோ, நவரத்தினங்களையும் போட்டு வைக்கலாம்.
வலம்புரி சங்கினை வீட்டில் வைத்திருந்தாலே அனைத்து ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை.