
உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட திருச்செந்தூர் ஆலயத்தில் நடைபெறும் கொடிமர பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கொடிமரம் சந்தனக் கொடி மரமாகும். இதன் வரலாறு குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
முற்காலத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமிக்கு மாசி விழா நடைபெறவில்லை. காரணம், கொடிமரம் இல்லை. ஊர் கூடி கொடிமரம் வைக்க முடிவெடுத்தது. ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு ஒன்று காக்காச்சி மலைக்கு கொடிமரம் வெட்டச் சென்றனர். திருச்செந்தூர் மந்தை அருகே அம்மன் கோயிலில் அவர்கள் வேண்டிச் சென்றனர். அம்மனை வணங்கி ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார். அப்போது அம்மன் கண்களில் நீர் வழிந்தது. திடுக்கிட்ட ஆசாரி காரணம் கேட்க அவள், ‘இந்தப் பணியில் ஈடுபடும் உன்னைத் தவிர யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள்’ என்றாள்.
மேலும், இதை யாரிடமும் கூறக் கூடாது என்று அம்மன் சொன்னதால் களக்காடு அருகே மந்திரவாதி சின்னதம்பி மரைக்காயரிடம் வந்து விஷயத்தைக் கூறினார். மரைக்காயர் மனைவி தடுத்தும் அவர் ஆசாரியுடன் சென்றார். அவர்கள் 21 மாட்டு வண்டிகளில் சென்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான கொடிமரம் கிடைக்க வில்லை. எனவே, பொதிகைமலை உச்சிக்கு சென்றனர். அங்கு உயரமான சந்தன மரம் ஒன்று இருந்தது. இது சரியான மரம் என்று ஆறுமுக ஆசாரி மரைக்காயரிடம் கூற, உடனே அவர் மரத்தை மை போட்டுப் பார்த்தார்.
அந்த மரத்தின் அடி மரத்தில் சுடலை மாடன், முனையில் சங்கடகாரன் உட்பட, 21 மாட தேவதைகள் இருந்தது தெரிந்தது. 21 தேவதைகளை விரட்ட மற்றவர்களிடம் மரைக்காயர் மரத்தை கோடரியால் வெட்டச் சொன்னார். கோடரியால் வெட்டப்பட்ட மரம் கோடரியை திருப்பி விட்டது. உடனே அந்தக் கோடரி மரத்தை வெட்டிய 21 பேர்களிலும் பட, அவர்கள் ரத்த வெள்ளத்தில் மாண்டார்கள்.
மந்திரவாதி மரைக்காயரும் ரத்தம் கக்கி இறந்தார். இதற்கிடையில் மரத்தில் இருந்த தேவதைகள் ஆறுமுக ஆசாரியை விரட்ட, அவர் பயந்து ஓடி தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் காலைப் பற்றிக் கொண்டு காப்பாற்றும்படி கத்தினார்.
சொரிமுத்து அய்யனார் 21 தேவதைகளையும் சமாதானம் செய்து, ‘முருகன் தனக்கு சகோதரன்தான். பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கேட்க, அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் மற்றும் 21 தேவதைகளும் தாங்கள் வசிக்க வேறு சந்தனக் கொடிமரம் இல்லை என்று கூற, ஆலயத்தில் இந்தக் கொடிமரம் பிரதிஷ்டை செய்த பிறகு அந்தக் கொடிமரத்திலேயே அவர்கள் வாசம் செய்யலாம் என்று சொரிமுத்து அய்யனார் அனுமதி வழங்க, அவர்கள் தாங்களே சந்தன மரத்தை வெட்டி திருச்செந்தூருக்குக் கொண்டு சென்றனர்.
அம்மரமே திருச்செந்தூரில் கொடிமரமாக வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அதில் வாசம் செய்கின்றனர். இப்போதும் மாசித் திருவிழாவின்போது ஆடு வெட்டி சுடலைமாடனுக்கும் சங்கடகாரனுக்கும் படைத்துவிட்டுதான் தேர் ஓட்டுவார்கள்.
அதிகாலையில் நடைபெறும் இக்கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன் சங்கடகாரன் மற்றும் 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும் என்பது உறுதி.