
மனிதன் தனது இயல்பான குணத்தோடு எப்படி இந்த உலகில் வாழ வேண்டும் என்பது குறித்து சுவாமி விவேகானந்தர் ஒரு சிங்கத்தின் சுவாரசியமான கதை ஒன்றைக் கூறி இருக்கிறார். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பெண் சிங்கம் ஒன்று, அது கருவுற்றிருந்த சமயத்தில் ஆட்டு மந்தை ஒன்றைப் பார்த்தது. பசியோடு இறை தேடிக் கொண்டிருந்த அந்தப் பெண் சிங்கம், ஆட்டு மந்தையின் மீது பாய்ந்தது. அந்த வேட்டை முயற்சியில் அந்தப் பெண் சிங்கம் இறந்து போனது. இறப்பதற்கு முன்பு அந்தப் பெண் சிங்கம் ஒரு குட்டியை ஈன்றது. தாயற்ற அந்த சிங்கக்குட்டியை ஆடுகளே வளர்த்தன அந்த சிங்கக்குட்டி ஆடுகளுடனேயே வளர்ந்தது. ஆடுகளைப் போன்றே புல்லை தின்றது, ஆடுகளைப் போலவே கத்தியது. காலப்போக்கில் அந்த சிங்கக்குட்டி நன்கு வளர்ந்து ஒரு பெரிய சிங்கமாக மாறியது. ஆனால், அந்த சிங்கம் தன்னை ஒரு ஆடு என்றே எண்ணிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் இன்னொரு சிங்கம் இறை தேடிக் கொண்டு அந்த இடத்துக்கு வந்தது. அங்கே ஆடுகளுக்கு நடுவில் ஒரு சிங்கம் இருப்பதையும், அது ஆபத்து சமயத்தில் மற்ற ஆடுகளைப் போலவே பயந்து ஓடுவதையும் கண்டு வியப்படைந்தது. புதிதாக வந்த சிங்கம், அந்த ஆட்டு சிங்கத்தை நெருங்கி, ‘நீ ஆடு இல்லை… சிங்கம்’ என்று அதனிடம் சொல்ல முயன்றது. புதிய சிங்கம் தன்னை நெருங்கும்போதே ஆட்டு சிங்கம் அங்கிருந்து பயந்து ஓடியது. ஆகவே, புது சிங்கம் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
ஒரு நாள் ஆட்டு சிங்கம் ஓரிடத்தில் தூங்கிக் கொண்டிருப்பதை புதிய சிங்கம் பார்த்தது. உடனே அதை நெருங்கி, ‘நீ ஒரு சிங்கம்… ஆடு இல்லை’ என்று கூறியது. இதைக் கேட்டு, அஞ்சி நடுங்கிய ஆட்டு சிங்கம் புதிய சிங்கம் சொல்வதை நம்ப முடியாமல், ‘நான் ஆடுதான்’ என்று சொல்லிக்கொண்டே ஆட்டைப் போல் கத்தியது.
அதன் பிறகு புதிய சிங்கம், ஆட்டு சிங்கத்தை ஏரி ஒன்றுக்கு இழுத்துச் சென்றது. பின்னர் அது ஆட்டு சிங்கத்திடம், ‘இந்தத் தண்ணீரில் நம் முகத்தைப் பார். நம் இருவருடைய உருவங்களின் பிரதிபலிப்பும் தெரிகிறது’ என்று கூறியது. ஆட்டு சிங்கம் ஏரியின் நீரில் தென்பட்ட இரண்டு பிரதி பிம்பங்களையும் உற்றுப் பார்த்தது. பின்னர் புது சிங்கத்தையும், தன்னுடைய பிம்பத்தையும் பார்த்தது. அடுத்த கணமே தான் ஒரு சிங்கம் என்ற எண்ணம் அதற்கு வந்துவிட்டது. உடனே அது தனது சொந்தக் குரலில் சிங்கமாக கர்ஜித்தது. ஆடு போல் கத்துவது அந்த கணமே மறைந்து விட்டது.
மனிதர்களே, நீங்கள் சிங்கங்கள். தூய்மையான, எல்லையற்ற, முழுமையான ஆன்மாக்கள். பிரபஞ்சத்தின் சக்தி முழுவதும் உங்களுக்குள் இருக்கிறது. நண்பா, நீ ஏன் அழுது புலம்புகிறாய்? உனக்கு பிறப்போ இறப்போ இல்லை. நீ ஏன் அழ வேண்டும்? உனக்கு நோயோ, துன்பமோ கிடையாது. நீ எல்லையற்ற ஆகாயம் போன்றவன். பல வண்ண மேகங்கள் அதன் மீது வருகின்றன. கண நேரம் உலவி விட்டு அவை மறைந்து விடுகின்றன. ஆனால், ஆகாயம் எப்பொழுதும் மாறாத, மாசற்ற நீல நிறமாகவே இருக்கிறது.