
சூரிய பகவான் வம்சாவளியினைச் சேர்ந்த சகரன் என்ற மன்னர் பரத நாட்டை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தார். அவர் பூமி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஒரு அஸ்வமேத யாகம் செய்ய நினைத்தார். அதன்படி அவரது அஸ்வம் (குதிரை) ஒவ்வொரு நாடாகச் சென்றுக் கொண்டிருந்தது. குதிரை செல்லும் நாடுகளில் எல்லம் அதற்கு நல்ல வரவேற்பு கொடுத்தால் அந்த நாட்டு மன்னர், அஸ்வமேத யாகம் செய்யும் மன்னனின் மேலாண்மையை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம்.
சகரனின் குதிரை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஒவ்வொரு நாடாக நுழைந்தது. இதைப் பார்த்து பொறாமைக் கொண்ட இந்திரன், பூமி முழுக்க சகரனின் ஆட்சி நடந்தால் தனது இந்திர பதவிக்கு ஆபத்து நேரும் என்று பயந்தான். பொறாமையில் அந்த அஸ்வத்தை கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டி வைத்து விட்டுச் சென்றான் இந்திரன். குதிரை காணாமல் போனதால், தனது 60,000 மகன்களை விட்டு குதிரையை கண்டுபிடிக்கச் சொன்னார் சகரன்.
குதிரையை கபில முனிவரின் ஆசிரமத்தில் கண்டுபிடித்த சகரனின் மகன்கள் தவத்தில் இருந்த கபில முனிவரை எழுப்பினர். தவம் கலைந்த கோபத்தில் உக்கிரமாக முனிவர் பார்க்க, சகரனின் 60,000 மகன்களும் அதே இடத்தில் எரிந்து சாம்பலாயினர். சாம்பலாகிய அவர்களின் ஆன்மாக்கள் மேலுலகம் செல்லாமல் அங்கேயே சிக்கிக் கொண்டன. இதனால் பெருந்துயர் கொண்ட சகரன், தனது பேரனிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு இறந்துபோனார். பிரம்மலோகத்தில் இருக்கும் கங்கை நதியை பூமிக்குக் கொண்டு வந்தால்தான் தனது வம்சத்தின் சாபம் தீரும் என்பதை அறிந்தாலும், எவராலும் அந்த நதியை பூமிக்குக் கொண்டு வர முடியவில்லை. சகரனின் வம்சத்தில் வந்த பகீரதன் அயோத்தியின் அரசனானதும், தனது முன்னோர்கள் மீதான சாபத்தினைப் போக்க முடிவு செய்தான்.
பகீரதன் தனது அரச பதவியை துறந்து, ஆயிரம் ஆண்டுகள் கங்கையை நோக்கித் தவமிருந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த கங்கா தேவி காட்சி கொடுத்து, ‘தான் பிரம்ம லோகத்தில் பாய்வதால் பூமியில் பாய பிரம்ம தேவரின் அனுமதியைப் பெற வேண்டும். அப்போதுதான் தன்னால் பூமிக்கு வர முடியும்’ என்று கூறினாள்.
அதையடுத்து, பகீரதன் பிரம்ம தேவரை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தான். பகீரதனின் தவத்தை மெச்சிய பிரம்ம தேவர், கங்கை நதியை பூமியில் பாய அனுமதிப்பதாகக் கூறினார். அதேநேரம் ஒரு எச்சரிக்கையும் விதித்தார். ‘கங்கை நதி வேகமாக பூமியில் பாய்ந்தால், அதன் வேகம் தாளாமல் பூமி அழிந்து விடும். கங்கையின் வேகத்தைத் தடுக்க சிவபெருமானால் மட்டுமே முடியும். அதனால் அவரின் அனுமதியைப் பெற்று வா’ என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, பகீரதன் சிவபெருமானை நோக்கி பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்தான். ஒரு கட்டத்தில் சிவபெருமான் அவன் முன்பு காட்சியளித்து அவனது வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். பகீரதன் தற்போது கங்கையை பூமியில் பாய வேண்டினான். பெரும் நதியாகப் பிரவாகம் எடுத்து மிகவும் உக்கிரமாக பூமியில் பாய விழுந்த கங்கையை சிவபெருமான் தனது தலையில் தாங்கினார். கங்கை நதியின் பெரு வேகத்தை சிவபெருமான் தனது முடியில் கட்டுப்படுத்தினார்.
பகீரதனின் வேண்டுதலுக்காக கங்கையில் இருந்து சில துளி நீரை மட்டும் பூமியில் விழ வைத்தார் சிவபெருமான். அந்த சிறு துளிகளே மிகப் பிரம்மாண்டமான நதியாக மாறி இமாலயத்தில் இருந்து கீழே இறங்கி வந்தது. அந்நதி சகரனின் வாரிசுகள் மறைந்த இடத்தில் பாய்ந்து அந்த ஆன்மாக்களை புனிதப்படுத்தி, மேலுலகம் செல்ல விடுதலை அளித்தது. கங்கா தேவி பூமிக்கு வந்த தெய்வீக நோக்கம் நிறைவேறியது.
கங்கை நதி, ‘பாகீரதி’யாக பூமியில் நுழைந்தாள். ஆனாலும், கங்கையின் ஆக்கிரமிப்பில் ஜானவ முனிவரின் ஆசிரமம் மூழ்கி விட, இதனால் ஆத்திரமடைந்த ஜானவர், கங்கை நதியை முழுவதும் குடித்து விட்டார். இதை அறிந்த பகீரதன், ஜானவ முனிவரைப் பணிந்து கங்கா தேவியின் தெய்வீக நோக்கம் பற்றி எடுத்துரைக்க, ஜானவர் தனது காது வழியாக கங்கையை வெளியேற்றினார். அதனால் கங்கைக்கு ‘ஜானவி’ என்ற பெயரும் வந்தது. பூமியில் உள்ள மனிதர்களின் பாவங்களை ஏற்றுக்கொண்டு அனைவரையும் புனிதப்படுத்தும் பணியை கங்கா தேவி செய்கிறாள்!