ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவை முப்பது பாடல்களும் நாச்சியார் திருமொழி நூற்றிநாற்பத்தி மூன்று பாடல்களும் கொண்டவை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். கிழக்கு நோக்கி அருளும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் கீர்த்தி உண்டாகும் என்பார்கள். அந்த வகையில் ஆண்டாளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மார்கழி நோன்பிருந்த ஆண்டாள் தனது தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் முப்பது பாசுரங்கள் பாடினாள். தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஆண்டாள் சன்னிதி விமானத்தில் உள்ளன. இதற்கு, ‘திருப்பாவை விமானம்’ என்று பெயர்.
ஆண்டாள் சிறுமியாக இருந்தபோது அவள் வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோயிலாக உள்ளது. இதனை ஆண்டாளுக்கு பெரியாழ்வார் சீதனமாக கொடுத்தார். எனவே, இந்தக் கோயிலை ‘நாச்சியார் திருமாளிகை’ என்றும் சொல்கிறார்கள்.
ஆண்டாள் சன்னிதியின் அர்த்த மண்டபத்தில் வெள்ளிக் குறடு எனும் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை ஆறு மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருளுகிறார். இந்த நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமண பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஆண்டாள் சன்னிதிக்கு முன்புறம் ‘மாதவி பந்தல்’ என்று ஒன்று உள்ளது. அவள் இந்தப் பந்தலுக்குக் கீழ்தான் வளர்ந்தாள். இந்தப் பந்தல் கேரளா பாணியில் மரங்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்தப் பந்தலுக்கு அருகில் உள்ள சுவரில் காணப்படுகின்றன. இதேபோல, திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோயிலின் முன்மண்டபத்தில் ஓவியங்களாக வரைந்து உள்ளனர். மேலும், ஆண்டாள் சன்னிதியில் உத்ஸவ மூர்த்தி எழுந்தருளும் மண்டபம், ‘முத்துப் பந்தல்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் வாழை மரம் மாவிலை மற்றும் பூச்செண்டு காணப்படுகிறது.
ஆண்டாள் பாடிய திருப்பாவையில், ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற பாடல் துவங்கி, ‘வங்கக் கடல் கடைந்த’ என முடியும் இந்தப் பாவை பாடல்களில் இருபதாம் பாடலை பாருங்கள். நப்பின்னையை துயிலெழுப்பும் ஆண்டாள், ‘எங்களுக்கு உக்கமும் தட்டொளியும் தா’ என்று சொல்லுவாள். உக்கம் என்றால் விசிறி, தட்டொளி என்றால் கண்ணாடி. ஆண்டாள் பயன்படுத்திய இந்தக் கண்ணாடி இப்போதும் இருக்கிறது.
அவள் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவள். ‘அவள் காலத்தில் கண்ணாடியே கண்டுபிடிக்கவில்லையே. பின் எப்படி கண்ணாடி வந்தது என்று குழம்புகிறீர்களா?’ இது பித்தளையால் செய்யப்பட்ட கண்ணாடி. மேல்பக்கம் தட்டு போல பருமனாக, வட்டமாக இருக்கும். கீழே நீண்ட கம்பியும் தாங்கும் சிறிய பீடமும் இருக்கும். உற்றுப் பார்த்தால் அதில் முகம் தெரியும்.
பெண்கள் இயற்கையாகவே அலங்காரப் பிரியர்கள். ஆண்டாளோ, காதல் வயப்பட்டவள். விஷ்ணுவும் அலங்காரப் பிரியர். கேட்கவா வேண்டும். கண்ணாடியில் அடிக்கடி தனது முகம் பார்த்து அலங்காரத்தை சரி செய்து கொள்வாள். பரந்தாமனுக்கு அணிவிக்கும் மாலையை தனது கழுத்தில் சூடி ‘களுக்’கென சிரித்து அழகு பார்ப்பாள். இந்தக் கண்ணாடி ‘தட்டொளி’ எனப் பெயர் பெறும். இது ஆண்டாள் சன்னிதி நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் உள்ள கிணறு ‘கண்ணாடி கிணறு’ என்கிற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ ஆண்டாள் கோயிலின் மகா மண்டபத்தில் குபேர திசையில் இடது புறம் அமைந்துள்ளது கண்ணாடி கிணறு. ஆண்டாள் மாலை அணிந்து எட்டிப் பார்த்த கண்ணாடிக் கிணற்றினை திருமணத் தடைகள் உள்ள பெண்கள் எட்டிப் பார்த்தால் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆண்டாள்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் முதன்மையானவள். ஸ்ரீரங்கத்து எம்பெருமான் ரங்கமன்னராக வந்து சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாப்பிள்ளை. அவர் எல்லா உத்ஸவங்களிலும் சுவாமி புறப்பாட்டின்போது ஆண்டாள் முன்னே செல்ல, ரங்கமன்னார் அடியொற்றி பின்னே செல்வார்.
ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் உள்ளது. இங்கும் ஆண்டாளுக்கு ஒரு சன்னிதி இருக்கிறது. சன்னிதியின் முன்னால் துளசி மாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்கிறார்கள். இம்மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் தேவையான செல்வம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். சிலர் நெற்றிலும் பூசிக் கொள்கின்றனர். மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டு. இதில் முதல் தலம் ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசி தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இது அவரது பிறந்த வீடு. இந்த நூற்றியெட்டு திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள் என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.
எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் நூற்றியெட்டு திவ்ய தேசங்களையும் ஒரே நாளில் தரிசித்ததாக பொருள். நம் தமிழ் மக்களுக்கு இது கொடுத்து வைத்துள்ளது. ஆண்டாளே ஒரு அதிசய தெய்வக் குழந்தைதான். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் அதனிலும் அதிசயம். மார்கழி மாதத்தில் ஆண்டாளை தரிசனம் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று இத்தனை அதிசயங்களையும் கண்டு வாருங்கள். ஆண்டாளின் பேரருளைப் பெறுங்கள்.