
திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நந்திகேஸ்வரர் பலி பீடத்திற்கு முன்பும் பலி பீடத்திலும் அமர்ந்து உள்ளார். பலி பீடத்தில் நான்கு நந்திகள் நான்கு திசைகளைப் பார்த்தவாறு அமர்ந்து உள்ளனர்.
வட திருமுல்லைவாயிலில் அருளும் சிவன் கோயிலில் நந்திகேஸ்வரர் வாயில் புறத்தை நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். சிவனுடன் இவர் போருக்குப் புறப்படுவதாக ஐதீகம்.
செய்யாறு, திருவோத்தூர் சிவன் கோயிலிலும் நந்தி தேவர் வாயில் புறத்தை நோக்கியே அமர்ந்துள்ளார்.
மேட்டூர், ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரத்தில் கலசத்திற்கு பதிலாக நந்தி தேவர்கள் காணப்படுவது விசேஷம்.
மயிலாடுதுறை அருகில் உள்ள அம்பர் மாகாளம் கோயிலில் நந்தி தேவர் மனித உருவில் காட்சி தருவது சிறப்பு.
நாகப்பட்டினம் காயாரோகணர் கோயிலில் இரட்டை நோக்கு நந்தி காட்சி தருகிறார். நந்தி தனது இடது கண்ணால் ஈசனையும், வலது கண்ணால் அம்பாளையும் பார்த்தபடி இருப்பதால், இதனை இரட்டை நோக்கு நந்தி என்கிறார்கள்.
திருச்சி, உய்யக்கொண்டான் மலை மீதுள்ள உஜ்ஜீவநாதர் கோயிலில் ஜேஷ்டா தேவி என்ற அம்பிகையின் கையில் நந்தி தேவர் குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
திருவாவடுதுறை கோயிலில் நந்தி பகவான், உயர்ந்த ரிஷபம், படர்ந்த அரசு என்று சிறப்பிக்கப்படுகிறார்.
திருநாரையூர் கோயிலில் நந்தி தேவர் இறைவனைப் பார்க்காமல், கழுத்தை திருப்பிய கோலத்தில் காட்சி தருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு மகாதேவர் கோயிலில் உருண்டைக் கல் வடிவில் நந்தி தேவர் காட்சி தருவது விசேஷம்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் நந்தி பகவான் வெள்ளைக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளதால், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார்.
முறப்பநாடு, அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் குதிரை முகம் கொண்ட நந்தி தேவரைக் காணலாம்.
தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தேவர் 16 அடி நீளம், 13 அடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறார்.
நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு முன்பு பசுவும், நந்தியும் ஒன்றாகக் காட்சி தருகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் யாரும் நடப்பதில்லை.
திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள நேமம் எனும் ஊரில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தி பகவான் சிலை பள்ளத்தில் உள்ளது. அர்த்த மண்டபத்திலிருந்து நந்தி தேவரை பார்த்தால் அவர் தலையை நீட்டி காதுகளை தூக்கிக் கொண்டு இருப்பது போல தெரியும்.
மும்பை, மோர்காம் மயூரேஸ்வரர் கோயிலில் விநாயகருக்கு நந்திகேஸ்வரர் வாகனமாக உள்ளார்.