
மார்கண்டேயனைக் காக்க சிவபெருமான் எமனை தமது காலால் எட்டி உதைத்தார் என்பதைப் படித்திருப்போம். அதேபோல், சுவேதகேது எனும் அரசனைக் காக்கவும் சிவபெருமான் எமனை தமது கால்களால் எட்டி உதைத்த பெருமை மிக்கது திருநெல்வேலி டவுனில் அருள்புரியும் நெல்லையப்பர் திருக்கோயில். மரண பயம் நீக்கும் திருத்தலமாக விளங்கும் இக்கோயில் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
முற்காலத்தில் சுவேதகேது எனும் அரசன் தனது வயது முதிர்ந்த காலத்தில் தான் நிர்வகித்த அரசு பொறுப்புகளைத் தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு தமது மனைவியுடன் சன்னியாசம் மேற்கொண்டு பல தலங்களுக்கும் யாத்திரையாக சென்றான். அப்படி வரும் வழியில் அவனது மனைவி மரணமடைந்து விட, அங்கேயே தம் மனைவிக்கு உரிய இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்தான்.
தமது மனைவி மரணத்தை தழுவும்போது அவள் பட்ட வேதனைகளை நினைத்துப் பார்த்து, தனக்கும் மரணம் நேரும்போது அத்தகைய துன்பங்கள் வருமோ என்று எண்ணி சுவேதகேது பயமுற்றான். தனது மரண பயத்தை நீங்கும் பொருட்டு முனிவர் ஒருவரை தரிசித்து மிருத்யுஞ்சய மந்திர உபதேசம் பெற்று அதை உச்சரித்தவாறு மற்ற தலங்களுக்கும் சென்று சிவ தரிசனம் செய்து வந்தான்.
அப்படி ஒரு நாள் அவன் திருநெல்வேலியில் உறையும் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலை தரிசிக்க வந்தபோது அவனுடைய ஆயுட்காலம் முடிவடைந்ததால் எமதர்மன் அவன் எதிரில் தோன்றி, பாசக் கயிற்றை அவன் மீது வீசினான். அப்போதும் சுவேதகேது மிகுந்த மன உறுதியுடன் மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானை தியானித்தான். அப்போது எமதர்மன் சுவேதகேதுவை துன்புறுத்த முயல, நெல்லையப்பர் கருவறை லிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான், எமதர்மனை தனது காலால் எட்டி உதைத்து சுவேதகேதுவின் மரண பயத்தை நீக்கி அருள்புரிந்தார். இந்த லீலையை நினைவுபடுத்தும் விதமாக சுவேதகேது ராஜாவுக்கு வைகாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோயிலில் நுழைந்தவுடன் பத்தடி உயரத்துக்கு மேலான ஒரு அழகான வெள்ளை நிற நந்தியை காணலாம். அடுத்துள்ள கொடி மரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரை தரிசிக்கலாம். மூலவரை காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரமுள்ள மிகப்பெரிய விநாயகரை தரிசிக்கலாம். மூலவரைச் சுற்றி மூன்று பிராகாரங்கள் உண்டு. முதல் பிராகாரத்தில் எல்லா கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரையும் மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கோவிந்த பெருமாள் சன்னிதியும் சிவன் சன்னிதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இரண்டாவது பிராகாரம் சற்று பெரியது. ஆரம்பத்திலேயே ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. மூன்றாவது பிராகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாக உள்ளது. இந்த பிராகாரத்தில் இருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சன்னிதி செல்ல வழி உள்ளது. கோயிலின் உள்ளே பொற்றாமரை குளம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள ஜுரதேவர் சன்னிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் ஜுரம் இருப்பின் இம்மூர்த்திக்கு மிளகு அரைத்து சாத்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் ஜுரம் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளில் இத்தலம் தாமிர சபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராஜர் ‘தாமிர சபாபதி’ என்று அழைக்கப்படுகிறார்.