அர்த்த ஜாமத்தில் பொங்கல் நிவேதனம் செய்யும் பெருமாள் கோயில் தெரியுமா?

Sri Sowriraja Perumal Temple
Sri Sowriraja Perumal Temple
Published on

மிழ்நாட்டில் உள்ள பஞ்ச கிருஷ்ணர் தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம். இந்த ஐந்து தலங்களுமே ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்க்கையோடு தொடர்புடைய இடங்களாகும். இவற்றில் திருவாரூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். இத்தலத்தில் அருளும் நீலமேகப் பெருமாள்  நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல பெருமாள் அபயக் கரத்துடன் இல்லாமல், தானம் பெறும் கரத்துடன் காட்சி தருவது விசேஷம். இது பக்தர்களின் துன்பங்களை எல்லாம் தாமே பெற்றுக்கொள்வதாக ஐதீகம்.

வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழாவின்போது, அதிகாலையில் சிவனாகவும், மாலையில் பிரம்மாவாகவும், இரவில் மகாவிஷ்ணுவாகவும் காட்சி தரும் மும்மூர்த்தி தரிசனம் இக்கோயிலின் சிறப்பாகும். அதேபோல், திருக்கோயிலை வலம் வரும்போது இக்கோயிலின் விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இன்னெரு விசேஷம்.

இதையும் படியுங்கள்:
இரண்டு ஆவுடையார் மேல் அருளும் அரிய சிவலிங்கம் அமைந்த திருக்கோயில்!
Sri Sowriraja Perumal Temple

இக்கோயில் அர்ச்சகர் ஒருநாள், கோயிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபம் கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்ல, அரசன் தான் நாளை வந்து பார்க்கும்போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார்.

அவரிடம் இரக்கம் கொண்ட பெருமாள், அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது, உண்மையிலேயே தலையில் கேசத்தோடு காட்சி தந்து அருளினார். இந்நிகழ்வின் காரணமாகவே உத்ஸவர் சௌரிராஜ பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார்.  உத்ஸவர் உலாவில் அமாவாசையன்று மட்டுமே திருமுடி தரிசனத்தை காண முடியும்.

மூலவர் நீலமேகப் பெருமாள் இத்தலத்தில் செய்த லீலைகள் எண்ணிலடங்காது. விபீஷணனை தனது தம்பியாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமபிரான் அமாவாசை அன்று அழகிய நடை பயின்று பெருமாளாகக் காட்சி தந்தார் . விசடாசன் என்னும் அரக்கனை தனது சக்ராயுதத்தால் வீழ்த்தியதால் இத்தலத்தில் சக்கரத்தை பிரயோகிக்கும் நிலையில் பெருமாள் காட்சியளிக்கிறார்.

பெருமாளின் மகாபக்தரான முனையதரர் என்பவரது பத்தினி பெருமாளுக்கு நிவேதனம் செய்ய எண்ணி பொங்கல் சமைத்து படைக்க முற்பட்டபோது அர்த்த ஜாமம் ஆகிவிட்டது. இதனால் கோயிலின் உள்ளே போக முடியாமல் போகவே, மானசீகமாக அவருக்கு நிவேதனம் செய்ய அதனை பகவான் ஏற்றுக் கொண்டதாகவும் மறுநாள் கோயில் நடை திறக்கப்பட்ட கருவறை சன்னிதானத்தில் இருந்து வெண்பொங்கல் வாசனை வந்தது என்றும் அது முதல் அர்த்த ஜாமத்தில் பொங்கல் நிவேதனம் செய்து வருவதால் 'முனையதரையன் பொங்கல் 'எனும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆயுதம் இல்லாத அரியக் கோலத்தில் அருளும் அபூர்வ ஸ்ரீராமர் திருத்தலம்!
Sri Sowriraja Perumal Temple

இந்திரன் பிரதிஷ்டை செய்த நவகிரகம் ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. 12 ராசிகளுடன் கூடிய இந்த நவகிரகம் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறது. இக்கோயில் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்த பதவி கிடைக்கும் என்பதால் இந்த திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் கிடையாது.

இக்கோயிலில் வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும் சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனுக்கும் இரு சன்னிதிகள் உள்ளன. ரங்கநாதன் சன்னிதியில் மிக அபூர்வமான நரசிம்மரின் வெண்கல சிலை ஒன்று உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com