
கர்நாடகாவில் நஞ்சன்கூடில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குகிறது நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். அதே பெயரில் தமிழ்நாட்டில் காரமடையிலும் ஓர் அற்புதக் கோயில் உள்ளது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில் காரமடையின் மையப்பகுதியில் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் அருகிலேயே ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது கயிறாகப் பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் விஷத்தை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட, சிவபெருமான் தேவர்களைக் காக்க, விஷத்தை விழுங்கினார். அப்போது அம்பிகை, அவரது கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்குள் செல்லாமல் நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.
தேவர்களைக் காப்பதற்காக விஷத்தை உண்டவர் என்பதால் இவர், ‘நஞ்சுண்டேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். திருநீலகண்டன் என்றும் இவருக்கு பெயர் உண்டு. இக்கோயிலில் அம்பிகை லோக நாயகி தனிச்சன்னிதியில் அருள்கிறாள். சிவனின் உடலில் விஷம் இறங்காமல் செய்து, மக்களைக் காப்பாற்றியதால் இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். இரண்டு கரங்களில் தாமரையுடன் காட்சி தரும் இவளது சிற்பம் திருவாசியுடன் சேர்த்து வடிக்கப்பட்டிருக்கிறது. சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்த தலம் இது. சிவன், அம்பிகைக்கு நடுவில் ஆறுமுக வேலவர் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார். இம்மூவரது சன்னிதியும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது சிறப்பு.
பன்னிரு கரங்களுடன் காட்சி தரும் முருகனுடன் வள்ளி, தெய்வானையும் உள்ளனர். சிவனுக்கு இடதுபுறத்தில் ரங்கநாதர் தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறார். இவ்விருவருக்குமான தீர்த்தம் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜையின்போது தினமும் நஞ்சுண்டேஸ்வரர், ரங்கநாதர் கோயில் அர்ச்சகர்கள் இருவரும் ஒன்றாக சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கிறார்கள். நவராத்திரி விழாவின் பத்தாம் நாளில் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இக்கோயிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சிக்கு சிவனை அழைத்துச் செல்வது விசேஷம். அப்போது சிவன், பெருமாள் இருவரும் அருகருகில் செல்கின்றனர். அந்நேரத்தில் மட்டுமே இவ்விருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
இத்தலத்து விநாயகர், ‘செண்பக விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். சிவன் சன்னிதியை சுற்றி வரும்போது கோஷ்டத்தின் அடியில் பாதாள விநாயகர் காட்சி தருகிறார். மிகவும் சிறிய மூர்த்தியான இவரை வணங்கி விட்டே பரிவார தேவதைகளை வணங்க வேண்டும் என்பது இக்கோயில் ஐதீகம். கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் தனித்து காட்சி தருவது விசேஷம்.
இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களைப் போல இல்லாமல் சற்று பட்டையாக இருக்கிறது. இந்த லிங்கம் செந்நிறமாகக் காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். இவருக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னிதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி சிவலிங்கம் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தரும் அமைப்பைக் காண்பது அரிது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, சிவன் சன்னிதியைச் சுற்றிலும் கோஷ்டத்தில் 8 யானைகள் சுவாமி விமானத்தை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஒரு யானை சிற்பத்திற்கு கீழ் பிரம்மாவும், மற்றொரு யானைக்கு கீழே லட்சுமி நாராயணரும் காட்சி தருவது விசேஷம். சிவன், பாற்கடலில் தோன்றிய விஷத்தை ஒரு பிரதோஷ வேளையில் அருந்தினார். எனவே பிரதோஷ நேரத்தில் இங்கு சிவனுக்கு விசேஷ வழிபாடு நடைபெறுகிறது.
காரமடை நஞ்சுண்டேஸ்வரரை வணங்கினால் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். கடுமையான நோய்களும் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.