கும்பகோணம் அருகில் உள்ளது நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் நடைபெறும் கல் கருட சேவை உலகப் பிரசித்தி பெற்றது. ஒரே கல்லால் ஆன கருடர் இக்கோயிலில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். பங்குனி மற்றும் மார்கழி என ஆண்டுக்கு இருமுறை மட்டுமே இந்த கல் கருடர் வெளியே வருகிறார்.
பெருமாளின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்தக் கோயிலில் மூலவர் சீனிவாச பெருமாள், தாயார் வஞ்சுளவல்லியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அதனால் இந்தக் கோயிலில் தாயாருக்கு என்று தனிச் சன்னிதி கிடையாது. இருந்தாலும் இந்தக் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் என அனைத்திலும் தாயாருக்கே முதலிடம் தரப்படுகிறது. இந்தத் தலமும் தாயாரின் பெயராலேயே நாச்சியார்கோவில் என அழைக்கப்படுகிறது.
மகாலட்சுமி தாயாரே தனக்கு மகளாகவும், மகாவிஷ்ணு தனக்கு மருமகனாகவும் வர வேண்டும் மேதாவி மகரிஷி தவம் செய்ததின் பயனாக இங்கு தாயாரை திருமணம் செய்த கோலத்திலேயே பெருமாள் காட்சி தருகிறார். பொதுவாக, கருடர் சிலைகள் உலோகத்தாலோ அல்லது சுதை வடிவமாகவோத்தான் இருக்கும். ஆனால், இந்த கோயிலில் ஒரே கல்லால் ஆன கருடன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
இந்த கருடன் நவ நாகங்களுடன் அருள்பாலிக்கிறார். இவர் மிகப்பெரிய வரப்ரசாதி. இவர் வீற்றிருந்து அருளும் சன்னிதி பத்து சதுர அடி. இவர் வழிபடும் தெய்வமாக இருக்கும் நேரத்தைத் தவிர, வாகனப் புறப்பாட்டுக்கு புறப்படும் நேரத்தில் இவரது திருப்பாதங்களை நாலு பேர் தாங்குவார்கள். இவர் வெளியே வந்ததும் மூலைக்கு ஒருவராக மேலும் நால்வர் சேர்ந்து தூக்குவார்கள். இதுவே முப்பத்திரண்டு எனவும் அறுபத்திநான்கு எனவும் ஆட்கள் சுமந்து கொண்டு படிகளில் இறங்குவார்கள். இது இறுதியில் 128 பேர் இந்த கல் கருடரை சுமந்து செல்வார்கள்.
கல் கருடரை வெளியே வரும்போது எப்படி எடை படிப்படியாக அதிகரிக்கிறதோ அதேபோல் சன்னிதிக்கு திரும்பும்போது கல் கருடன் எடை படிப்படியாக குறையும் அதிசயம் நடைபெறுகிறது. கல் கருடன் சன்னிதிக்கு திரும்பும்போது அவரின் எடை குறைவதற்கு ஏற்ப சுமந்து செல்பவர்கள் எண்ணிக்கையும் 128, 64, 32, 16, 8 என குறைக்கப்பட்டு, இறுதியாக சன்னிதிக்குள் செல்லும்போது கல் கருடனை நான்கு பேர் மட்டுமே சுமந்து செல்வார்கள். இந்த அதிசய நிகழ்வு நாச்சியார்கோவிலுக்கே உரிய தனி சிறப்பாகும்.
அலங்கார மண்டபத்தில் பெருமாள் தனக்காக காத்திருக்கிறார் என்ற நினைவில் கருடன் வேகமாக எழுந்தருள்வார். அவசர கதியில் எழுந்தருளுவதால் உடல் முழுவதும் முத்து முத்தாய் வியர்க்கும். விசிறி வீசி வியர்வை நீங்கியவுடன் அலங்காரம் செய்து புறப்பாடாகும் இந்த கல் கருடன் மீது பெருமாள் திரு வீதி கண்டருள்வதை நாச்சியார்கோவில் கருட சேவையை பெரிய திருவடி தரிசனம் என்று குறிப்பிடுவார்கள்.
இவருக்கு அமுத கலசம் என்னும் மோதகம் கொழுக்கட்டை நிவேதிக்கப்படுவதால் இவரை மோதக மோதகர் என்று அழைக்கிறார்கள். மார்கழி முக்கோடி தெப்ப திருவிழா, பங்குனி பிரம்மோத்ஸவம் கல் கருட சேவை என ஆண்டில் இரு முறை புறப்பட்டு இந்த கல் கருட பகவான் அருள்பாலிக்கிறார்.
நாச்சியார்கோவில் கல் கருட சேவையை தரிசிப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி, திருமணத் தடை அகலுதல், பண வரவு, குறைவில்லா செல்வமும் கிடைக்கும்.