உலகையே மிரள வைத்த தமிழனின் புராதன கால விலங்கு என்றால் அது யாளிகள்தான். தென்னிந்திய கோயில் சிற்பங்களில் காணக்கிடைக்கும் விசித்திரமான மிருகம் இது. சிங்க முகமும் யானையின் துதிக்கையும், கொண்டு உருட்டும் கண்களோடும் கோரப்பற்களோடும் காட்சியளிக்கும். சொல்லப்போனால் ஒவ்வொரு கோபுரத்திலும் யாளிகளுக்கென்று ஒரு வரிசையை ஒதுக்கி அதை யாளிவரிசை என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால், இது கற்பனைச் சிலை என்பதே பலரது எண்ணம்.
நாம் வாழும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத உடல் அமைப்புடன் டைனோசர் என்ற மிருகங்கள் வாழ்ந்ததை கூறியபோது முதலில் நம்ப மறுத்தவர்கள், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்னர் நம்பத் தொடங்கினர். பின்னர் இதுகுறித்த திரைப்படங்கள் வெளிவந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அதுபோலத்தான் யாளிகளும் ஒரு புராதன கால விலங்கு.
சில கோயில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருப்பார்கள். அப்படியானால் இவை போருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்குமோ? மேலும், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைமையான கோயில்களில் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அதன் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருப்பார்கள்.
இத்தகைய சிலைகள் ஆயிரக்கணக்கான கோயில்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. எந்த விலங்குகளுக்கும் இவ்வளவு எண்ணிக்கையில் முழு உருவ முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மையாகும்.
யாளியில் சிங்கத் தலையைக் கொண்டது சிங்க யாளி என்றும். ஆட்டுத் தலையைக் கொண்டது மகர யாளி என்றும். யானை தலையை கொண்டது யானை யாளி என்றும் வாயிலிருந்து வளைவு வளைவான கல் அலங்காரங்களைக் கொண்டது சுருள் யாளி என்றும் கூறுவர்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத உருவத்தை கற்பனை சிலையாக வடித்திருப்பார்களா? நமது சிறிய கோயில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல்பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரிகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்கக் காரணம் என்ன? இதற்கெல்லாம் யார் பதில் சொல்வார்கள்?
யாளிகள் ஒருவேளை கற்பனை விலங்கானாலும் சீனர்களின் டிராகன் போல, எகிப்தியரின் ஃபீனிக்ஸ் போல, தமிழரின் புராதன விலங்காக யாளிகள் போற்றப்பட வேண்டும். இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்கள்? யாளிகள் கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இருந்து மண்ணோடு மண்ணாகி விடுமோ?
நம் அருகில் இருந்தும் நாம் இந்த யாளிகளை கண்டுகொள்வதில்லை. ஆனால், இங்கு வரும் வெளிநாட்டினரோ இதன் உருவ அமைப்பையும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் தோற்றத்தையும் கண்டு மிரண்டு போகிறார்கள்.