
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழி திருவாதிரை, மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்து நாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத் திருவிழா. ஆனி உத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும்.
அன்று பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில்தான் நடராஜர் சன்னிதிகளில் ஆனி திருமஞ்சனம் நடைபெறுகிறது. பக்தர்கள் நடராஜரை தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனி திருமஞ்சனம் மிக நல்ல நாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரை தரிசிக்க வேண்டும். சிவத் தலங்களில் சிதம்பரம் நடராசர் கோயிலில்தான் மூலவரும் உத்ஸவரும் ஒன்றாக இருப்பார்கள்.
கருவறையில் நடராஜர் சிலை இருக்கும் இடத்தில், திரை மட்டும் இருக்கும். அந்தத் திரை விலகும்போது, அங்கு எதுவும் இருக்காது. இந்த இடத்திற்கு, ‘சிதம்பர ரகசியம்’ என்று பெயர். இது ஆகாயத்தைக் குறிப்பதாகவும், கடவுள் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்துவதாகவும் கருதப்படுகிறது. தங்கத்தால் ஆன சிவலிங்கம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும், சிதம்பர ரகசியத்திற்கு கீழே ஓர் அடி உயரம் உள்ளதாக உள்ளது. இது ஏகமுக சிவலிங்கம். இந்தத் தங்கத்தாலான சிவலிங்கத்திற்கு உச்சி வேளையில் ஒரு கால பூஜை மட்டும் தீட்சிதர் ஒருவரால் செய்யப்படுகிறது.
பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம் ஆகியவை சரியாக ஒரே நேர்க்கோட்டில், சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன.
மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிகின்றது.
விமானத்தின் மேல் இருக்கும் பொற் கரை 21,600 தங்கத் தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது.
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
பொதுவாக, சிவாலயங்களில் மூலவர் கருவறையை விட்டு எங்கும் வெளியே வருவதில்லை. ஆனால், சிதம்பரத்தில் மட்டும் ஆண்டுக்கு இரண்டு முறை, ஒன்று ஆனி திருமஞ்சனம் மற்றொன்று ஆருத்ரா தரிசனம் சமயத்தில் மூலவர் நடராஜ மூர்த்தியே சன்னிதியில் இருந்து வெளியே வந்து தேரில் எழுந்தருளி நகரின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும். எல்லா சிவ கலைகளும் இரவில் சிதம்பரம் வருவதாக ஐதீகம். எனவே, இங்கு அர்த்த ஜாம பூஜை தாமதமாகவே நடத்தப்படுகிறது.
சில கோயில்களில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் தனித்தனியே தரிசிக்கலாம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரே இடத்தில் இருந்து இந்த மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்ய முடியும். நடராஜர் சன்னிதி அருகில் திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி இருக்கிறது. இப்பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மா இருக்கிறார். இரு சன்னிதிகளுக்கும் முன்பு நின்று கொண்டால் ஒரே நேரத்தில் நடராஜர் மற்றும் பெருமாள் அவரது நாபியில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் தரிசனம் செய்யலாம்.
உலகிலேயே மிகச் சிறந்த கோயில் மணி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிகண்டி பூரணம் மணிதான். இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி, எளிதில் நம்மை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. இதற்கு இணையான மணி, உலகத்தில் வேறெங்கும் கிடையாது.59 நொடிகள் ஒலிக்கும் இந்த சிகண்டி பூரணம் மணி ஓசையைக் கேட்டால், உங்கள் ஆயுளில் 12 விநாடிகள் அதிகரிக்கும். இதற்கு, ‘சிகண்டி பூரணம்’ என்று பெயரிடப்பட்டது சித்தர்கள்தான். வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி, அனுக்கிரகம் அளித்ததுதான் இந்த சிகண்டி பூரணம் மணி.