
காஞ்சிபுரம் மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி இடது சிகை கொண்டையில் பாம்பு சீறிப்பாய, உச்சியில் கங்கையை தரித்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார்.
கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்தி அருகருகே அமர்ந்து அருள்புரியும் கோலத்தை தரிசிக்கலாம்.
மதுரை அருகில் உள்ள திடியன்மலை திருத்தலத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த கோலத்தில், பதினான்கு சித்தர்களுடன் காட்சி தருகிறார்.
திருவையாறு, ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் கோயிலில் அருளும் தட்சிணாமூர்த்திக்கு, ‘சுரகுரு தட்சிணாமூர்த்தி’ என்று பெயர். மேல் நோக்கி உள்ள வலக்கையில் சின் முத்திரையும், இடது கையில் சிவஞான போதத்துடனும், திருவடியின் கீழ் ஆமையுடனும் காட்சி தருகிறார்.
அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் திருஊரல் மகாதேவர் கோயிலில் அருளும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியில் ஒரு காலை மடித்து பீடத்தில் இருத்தி, வலக்காலை கீழே தரையில் வைத்து, ருத்ராட்ச மாலை, தாமரை மொட்டு ஏந்தி, இடதுபுறம் சாய்ந்தபடி, அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் கீழ் சுவரில் தட்சிணாமூர்த்தி வெள்ளை தாடியுடன், மரத்தடியில் மான் தோல் மீது காலை மடித்து வைத்து, யோக நிலையில் அமர்ந்தவாறு காட்சி தருகிறார்.
திருச்சோபுரம் மங்களேஸ்வரர் திருக்கோயில் தட்சிணாமூர்த்தியின் சிலையைத் தட்டினால் சப்தஸ்வர ஓசை கேட்கிறது.
கழுகுமலை கோயில் கோபுரத்தில் மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
லால்குடி, ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அருளும் தட்சிணாமூர்த்தியை வீணை வாசிக்கும் அருட்கோலத்தில் தரிசிக்கலாம்.
தமிழக எல்லையில் உள்ள சுருட்டபள்ளியில் (ஆந்நிர மாநிலம்) உமையுடன் அருளும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
வாணியம்பாடி சிவன் கோயிலில், செப்புத் திருமேனியில் யோக மூர்த்தியாய் அம்பிகையை இடது தொடையில் அமர்த்தியபடி தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கருவறை உட்சுவரின் தென்பாகத்தில் 'யோக வீணாதர அர்த்தநாரி தட்சிணாமூர்த்தி' காட்சி தருகிறார்.
கழுகுமலை வெட்டுவான்கோயிலில் தட்சிணாமூர்த்தி மிருதங்கத்துடன் காட்சி தருவது விசேஷம்.
திருநாவலூர் கோயிலில் அருளும் தட்சிணாமூர்த்தி காளையுடன், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
திருப்பூந்துருத்தியில் அருளும் தட்சிணாமூர்த்தி வீணை வாசித்தவாறு, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் மண்டபத்தில் ஆறு அடி உயரத்தில், நின்ற கோலத்தில், அபய முத்திரையுடன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் வேதநாராயணர் கோயில் விமானத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தி வடிவம் உள்ளது.
ஆலங்குடியில் குரு தட்சிணாமூர்த்தி உத்ஸவர் கலை வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறார். சித்திரை பிரம்மோத்ஸவத்தின்போது, இவர் தேரில் பவனி வருகிறார். ஆறு கால நடராஜ பூஜைகளும் இங்கு இவருக்கே நடைபெறுவது சிறப்பு.