
வைகாசி மாதத்தில் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாகத் திகழ்வது வைகாசி விசாகம். அப்படிப்பட்ட வைகாசி விசாக நாளில் நம்மில் பலரும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது வழக்கம். முருகப்பெருமானுக்காக விரதம் இருந்து, முருகப்பெருமானை நினைத்து ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து செய்யக்கூடிய வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் முருகப்பெருமானை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்றினால் அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
முருகப்பெருமான் அவதரித்த நாளாகக் கருதப்படுவது வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திர தினம். இந்நாளில் முருகப்பெருமானை பல விதங்களில் பலரும் வழிபாடு செய்வார்கள். நம்முடைய வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில், அதேசமயம் சக்தி வாய்ந்த ஒரு முருக வழிபாடாகத்தான் தீப வழிபாடு திகழ்கிறது. ஏனென்றால், முருகப் பெருமான் தோன்றியது தீபச்சுடர் ஒளியின் வடிவத்தில்தான் என்பதால் அன்றைய தினம் நாம் மறவாமல் தீப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அப்படி நாம் செய்யக்கூடிய தீப வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வச் செழிப்பையும் உண்டாக்கும் என்று கூறலாம். இந்த தீப வழிபாட்டை வைகாசி விசாகத் திருநாளான இன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் செய்ய வேண்டும். இந்நாளில் வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி மலர்களை சாத்தி செவ்வாழையை நெய்வேத்தியமாக வைத்து, முருகப்பெருமான் படத்துக்கு முன்பு ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.
பிறகு அந்த தீபங்களைப் பார்த்தவாறு, ‘ஓம் சௌம் சரவணபவ’ என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இப்படிக் கூறி முடித்த பிறகு கற்பூர தீப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
இன்றைய தினம் மட்டுமல்லாமல், அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களின் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் இப்படியே முருகப்பெருமானுக்குக்கு முன்பு ஆறு நெய் தீபத்தை ஏற்றி வைத்து மேற்கூறிய மந்திரத்தை சொல்லி வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மூன்று நாட்களும் அசைவத்தை தவிர்த்து விட்டு முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு ஆறுமுகனின் அருளால் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கப்பெறும். இவர்கள் அஷ்ட ஐஸ்வர்யத்துடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாளாகக் கருதப்படக்கூடிய வைகாசி விசாகத் திருநாளோடு சேர்த்து, அதைத் தொடர்ந்து வரக்கூடிய இரண்டு நாட்களும் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.