
அனைத்தும் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். அது, ‘நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?' என்பதுதான். அதை ஒரு முனிவரிடம் கேட்கவும் செய்தார்.
அதற்கு அந்த முனிவர், "மிகவும் சுலபம்... ‘நாரம்' என்றால் தண்ணீர். ‘அயனன்' என்றால் சயனித்திருப்பவன் என்று பொருள். அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால்தான் அவன் நாராயணன்" என்றார்.
நாரதருக்கு முனிவரின் இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. அந்த நாராயணனிடமே ஓடினார். "ஐயனே! உம்மை நான் ‘நாராயணா... நாராயணா’ என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர்தானே! நீரே அதற்கு விளக்கம் சொல்லும்'' என்றார்.
"அடடா... எனக்கும் அதன் பொருள் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக் கரையில் இருக்கும் ஒரு வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்.'' என்றார்.
நாரதர் நர்மதைக்கரை வண்டிடம் ஓடினார். "வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?'' எனும் அந்தக் கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்துபோனது.
நாரதர் மீண்டும் நாராயணனிடம் திரும்பினார். "நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் உடனே இறந்து விடுகிறார்கள். அப்படியானால் அதுதானே அர்த்தம்'' என்றார்.
"அப்படி நான் கேள்விப்பட்டதில்லையே! எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்'' என்று ஒரு மரத்தை நோக்கி கைநீட்டினார் பகவான்.
அந்தக் கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, உடனே கிளி சுருண்டு விழுந்து இறந்துபோனது. நாரதருக்கு திக்கித்து விட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை ‘நாராயணா’ என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா என்ற பயத்துடன் மீண்டும் நாராயணனிடம் வந்தார்.
"பெருமானே! அதற்கு அர்த்தம் ‘அது'தான். உறுதியாகி விட்டது. என்றார்.
"நாரதா! அவற்றின் விதி முடிந்து இறக்கின்றன. எதற்கும் அந்தப் பசுவின் கன்றிடம் போய் கேட்டுப்பார்'' என்றார்.
"நல்லாயிருக்கு நாராயணா! இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடியபாவம் என்னை அணுக வேண்டுமென திட்டம் போடுகிறீரா? முடியாது'' என்றார் நாரதர்.
"அப்படி ஏதும் ஆகாதென்றே நினைக்கிறேன். நீ ஒரு தபஸ்வி! தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ!'' என்று உசுப்பிவிட்டார் பெருமாள்.
நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதையும் முடிந்தது. "நாராயணா! எல்லாம் போச்சு! இனிமேல் உம்மிடமில்லை பேச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்'' எனக் கிளம்பியவரை, பெருமாள் தடுத்தார்.
"நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் இந்தக் கேள்வியைக் கேள். அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது'' என்ற நாராயணனிடம் "ஐயா! என்னை அரச தண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது'' என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் பெருமாள்.
நாரதரும் பயந்தபடியே இளவரசனிடம் சென்ற அந்தக் கேள்வியைக் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாக பதில் சொன்னான். "நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் ‘நாராயணா' என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி. அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்'' என்றான்.
ஆகா! நாராயணன் என்றால் ‘வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன், வாழ்வுக்குப் பிறகும் பிறவிப்பணி தீர்ப்பவன்' என்று அர்த்தம் என புரிந்து கொண்டார் நாரதர்.