

சாக்த சமயம் என்பது அம்பிகையின் வடிவங்களை பிரதானமாகக் கொண்டு பூஜிப்பது. இதில் அன்னைக்கு நவராத்திரி என்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. பொதுவாக, நவராத்திரி என்றவுடன் சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரிதான் நம் நினைவுக்கு வரும். ஒரு ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் உள்ளன. ஆஷாட நவராத்திரி வாராகி தேவியை கொண்டாடவும், சாரதா நவராத்திரி துர்கா லட்சுமி சரஸ்வதி தேவியரை கொண்டாடவும், சியாமளா நவராத்திரி ராஜமாதங்கி தேவியை கொண்டாடவும் வசந்த நவராத்திரி லலிதா திரிபுரசுந்தரியை கொண்டாடவும் கடைபிடிக்கப்படுகிறது.
இதில் சியாமளா நவராத்திரி பூஜை என்பது தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை வழிபாடு செய்வதற்கு ஏற்ற காலமாகும். இந்த நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில்
ஸ்ரீ சரஸ்வதி தேவி அவதாரம் செய்ததாக ஐதீகம்.
சியாமளா அம்பிகை ராஜமாதங்கி எனவும் அழைக்கப்படுபவள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆட்சி புரியும் பச்சை மரகதக் கல்லான மீனாட்சி அம்மன் ஆறு கால பூஜைகளிலும் ஆறு பெயர்களில் அருள்பாலிக்கிறார். ராஜமாதங்கி என்ற பெயரில் கல்வித் தாயாக அருள்பாலிக்கிறார்.
சியாமளா என்ற பெயரில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் செல்வத்துக்கு அதிபதியாக விளங்குகிறார். சாவித்ரி என்ற பெயரில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் அளிப்பவராக சிறக்கிறார். மந்த்ரிணி என்ற பெயரில் சகல பாவங்களையும் நீக்குபவராக செயல்படுகிறார். கௌரியாக சகல சுக சௌபாக்கியங்களையும் அருள்பவராக திகழ்கிறா.ர் மீனாட்சி என்ற பெயரில் உயிர்களை கண்ணை இமை காப்பது போல் காத்து இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களை அளிக்கிறார்.
சியாமளா எனப்படும் மாதங்கி பச்சை நிறம் உடைய இவள் வீணை ஏந்தி இருப்பாள். கல்விக்கும் ஞானத்துக்கும் அதிபதி. கற்றவனுக்கு என்றும் அழிவில்லை என்பதை ராஜமாதங்கி வழிபாட்டின் மூலம் மாதங்கி மக்களுக்கு அருள்கிறாள்.
மதுரை மீனாட்சி அம்மன் ராஜமாதங்கி, சியாமளா சக்தி பீடம் எனவும் அழைக்கப்படுவதால் சியாமளா நவராத்திரி நாட்களில் மதுரை மீனாட்சி அம்மனை, மீனாட்சி பஞ்ச ரத்தினம், மீனாட்சி அஷ்டோத்திரம், மீனாட்சி நூற்றியெட்டு போற்றி போன்றவற்றைக் கூறி வழிபட்டு சியாமளா நவராத்திரியின் பரிபூரணமான அருளைப் பெறலாம். சியாமளா நவராத்திரி காலம் ஜனவரி 19 முதல் ஜனவரி 27 வரை உள்ள ஒன்பது நாட்களாகும்.