

நான் யார்? நான் இருப்பதா? நான் சிந்திப்பதா? நான் செயல்படுவதா? நான் ஒரு பொருளா? நான் ஒரு கருத்தாக்கமா? நான் ஒரு செயலின் வடிவமா? நான் என்று அறியப்படுவது எதனால்! அறிவுதான் நானா! அறிவின் பிறப்பிடம் நானா! அறிவின் ஆக்கம் எது! மனமா? மனம் என்பது எதனைத் தேடுகிறது! இறந்தகால எச்சங்களையா? நிகழ்கால நிதர்சனங்களையா? எதிர்கால எதிர்பார்ப்புகளையா? எண்ணங்களை நான் ஏன் பிரிக்கிறேன்? எண்ணங்கள் இதயத்திற்கு சொந்தமா? எண்ணங்களின் உதயம் மூளை!
மூளை இன்றி எதுவும் இல்லை. அந்த மூளையை ஆட்டி வைப்பது யார்? புறக்காரணிகளா அல்லது அக அழுத்தங்களா? பிரபஞ்சம் என்கிற உண்மையை விளக்க விளக்க விரிவாகிக்கொண்டே போகும் ஒரு விந்தை. ‘கால விசை’ அதை கணக்கிட முடியாது. காலத்தில் எல்லாம் கரைந்து போகும்.
உயிர் எப்படி உருவானது? பிரபஞ்ச கோட்பாடுபடி ‘சக்தியும் சிவனும்’ சேர்வதால். அதாவது பொருள் மற்றும் உணர்வுகள், இங்கே பொருளை சிவனாகவும் (உடலாகவும்), உணர்வுகளை சக்தியாகவும் கொள்ளலாம். The matter is shiva and energy is sakthi. ஆக உடல், உயிர் கொண்ட இந்த இயக்கம் கால வெளியில் (time and space) பிரவேசித்து பிறகு காலத்தின் கட்டுப்பாட்டில் வளர்ந்து மூப்பு அடைந்து பிறகு மாய்கிறது. இந்த மாயையை இருக்கும் வரை உண்மை என கொள்கிறோம்.
பிரிந்த பிறகு அது ஒரு ஆன்மாவாக காற்றாக நம்மிடம் பயணப்படும் ஒரு உந்து விசை. இந்த விசையை அறிந்துதான் திருமூலர் பாடி வைத்தார். ‘எச்சமும் மிச்சமும் இந்த பிரபஞ்சத்திற்கு’ சொந்தம். இங்கே ஏற்பது கோட்பாடு. அது விதியன்று. ஏற்கும் இடத்தில் எல்லாம் இன்பமயம்.
‘உடல் இன்றி அமையாது உயர்; உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!’
ஆக, உடலின் இயக்கம் உண்டாக உயிர் தேவை; ஆனால் முதலில் தோன்றியது பொருளாகிய உடலே! எப்படி என்றால் விந்து என்கிற ஒரு பொருள் முட்டை என்கிற ஒரு பொருளோடு கலந்து ஒன்றுசேர அங்கே கரு உருவாகி வளர்ந்து உயிர் உதயமாகிறது. ஆக, பிரபஞ்சம் எல்லாவற்றையும் பொருளாகப் பார்த்து, வளர்த்து, பிறகு பிரித்து தன்னிடம் ஆட்கொள்கிறது.
பொருளுக்கு தேய்மானம் உண்டு. இது இயற்கை நியதி. இந்த உண்மையை அறிந்தால், வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்று புலப்படும். பயணப்படுவது படகாகிய உடல்; உயிர் என்கிற அந்தத் துடுப்பை நாம் செலுத்தி நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். அப்போது பயணம் இனிமையாக இருக்கும்.
உடலே உயிரை ஆள்கிறது. உயிர் நேர்வினையாற்ற, நல்ல சிந்தனை செழிக்க, செயல் திறன் மேம்பட, மனதை ஆற்றல் பெற செய்ய வேண்டும். மனமே மா மருந்து; அதை அவ்வப்போது பாதுகாத்து, பதப்படுத்தி, படிப்படியாக வேலை வாங்க வேண்டும். ஆக, உடலைப் போற்றுவோம். உள்ளம் என்பது கோயில். அதில் உயிர் என்பது தெய்வம். அந்த தெய்வம் எல்லோராலும் வணங்கப்பட வேண்டும். அதற்கு வீடாகிய உடலை உள்ளம் உள்ள வரை பாழாகாமல் புத்துயிரோடு வைத்துக் கொள்வோம்.
ராமன்.செல்வராஜ்